headlines

img

ஆரஞ்சுப் புவியை அருந்துவேன்! - நவகவி

பாடல்

வடதென் துருவத்தில் பாதம் பதிக்க வேண்டும். 
ஆரஞ்சு போல் இருக் கும் புவிக்கனியை
அள்ளி நான் உண்ண வேண்டும்!
         பூமத்திய ரேகை போகும் வழி எலாம்
         பொடிநடையாய் நான் போய் வர வேண்டும்!
         ஆகா இந்த ஜெகத்தின் காட்சி என்
         ஆவலைத் தூண்டும் தூண்டும்!
                                                  (வடதென்)
சகல மனிதரின் இருதயமும் என்
இருதயத் துள் வந்து.....
         சங்கமம் ஆய்விட வேண்டும்.
எத்தனை கொடுமைகள் இருந்தாலும் மிக
இனிய இந்த உலகம்......
         கம்பனின் சுந்தர காண்டம்!
            கரட்டு மனங்கள் கவிமனம் ஆகுக.
            காவியக் காதல் நிஜத்தில் நிகழுக.
மலையைத் தாண்டும்போதும் - மடுவை மதிக்க வேண்டும்.
                                                  (வடதென்)
ஆப்பிரிக்காவின் ஆதிக்கறுப்பு என்
கண்களுக் குள் கலந்து....
         கருவிழிப் படலம் ஆகுக!
எஸ்கிமோக்களின் பனிக்குடில் வெண்மை என்
எலும்பினுள் ஊடுருவி......
         இதயம் ஈரம் எய்துக!
            செஞ்சதுக் கத்தின் சிவப்பினை எடுப்பேன்.
            சுதந்திரச் சிலையின் சுடருக்குக் கொடுப்பேன்!
இமய முகட்டை மோதும் - எனது பொதுமை கீதம்!
                                                  (வடதென்)
பூமி உருண்டையின் சகல தேசத்து
புழுதிகள் யாவையுமே....
         எனது மேனியில் ஏந்துவேன்.
தியாகிகள் காயம் போல் மலரும் அவர்
கல்லறை மலர் கொய்து....
         பூமி தேவிக்கு சூட்டுவேன்!
            கண்ணீர்த் தடாகம் வற்றி வரளுக.
            இனிமேல் மயானம் இல்லைஎன் றாகுக.
மரணம் மரணம் அடைக - ஜனனம் மட்டும் நிகழ்க
(வடதென்)

;