headlines

img

கிறுக்குப் பாண்டி

விபத்தில் ஒரு காலை இழந்த பிறகு சின்னச்சாமிக்கு கிறுக்குப்பாண்டி தான் சற்று ஆறுதலாக இருந்தான்.

விபத்தினால் வந்த இன்சுரன்ஸ் பணம் இரண்டு லட்சத்தை மனைவி பார்வதியும், மகன் குணாவும் பங்கு போட்டுக் கொள்வதில் ஆர்வமாய் இருந்தார்களேத் தவிர அவரை கவனிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பணம் வாங்குவதற்கு முன் மூன்று வேளையும் விதவிதமாக தூக்குவாளியில் சமைத்துக் கொடுத்தவர்கள். இப்போது, ‘அவன் கெடக்கிறான் நொண்டிப்பய அவனுக்கு சாப்பாடு போடனுமாக்கும்’ என பார்வதியோடு குணாவும் சேர்ந்து சொல்ல, சின்னச்சாமியின்  இதயத்தில் மீண்டும் ஒரு முறை வண்டி ஏறி இறங்கியது. அதன் பிறகு தனியாக ரோட்டு ஓரத்தில் பொறம்போக்கு இடத்திலிருந்த குடிசை வீடும், எதிர் வீட்டு முருகப்பா  செட்டியார் கொடுத்த பழைய கட்டிலும், எங்கிருந்தோ வந்த கிறுக்குப்பாண்டியும் தான் இப்போதைக்கு சின்னசாமியின் சொத்துக்கள். ஒரு நாள் பீடி வாங்க பணம் தரவில்லை என்பதற்காக ஒரு முறை ஊராட்சி மன்ற தலைவரின் வழுக்கைத் தலையில் கல்லெரிந்து விட்டு ஓடியது முதல் பாண்டி, கிறுக்குப்பாண்டி என அழைக்கப்பட்டான். பாண்டிக்கு  யாராவது  பீடி  வாங்க பணம் கொடுத்து விட்டால் அவர்கள் தான் அன்று கடவுள். மலபார் பீடி ஒரு கட்டும், ஒரு தீப்பெட்டியும் வாங்கிக் கொண்டு குளத்தங்கரையிலும், மந்தையிலும் அமர்ந்து புகைத்துக் கொண்டே நாள் முழுவதையும் கழித்து விடுவான். அப்படிப்பட்ட கிறுக்குப்பாண்டி, சின்னச்சாமி விபத்தில் அடிபட்ட பிறகு, குடிசை வீட்டிலே இருந்து கொண்டான்.

காலையில் சைவால் கடையில் டீ வாங்கியாந்து கொடுப்பதிலிருந்து இரவு மலபார் பீடி வாங்கி கொடுக்கும் வரை எல்லா வேலைகளையும் செய்து வந்த கிறுக்குப்பாண்டியை சின்னசாமி தன் மகனாகவே நினைக்க ஆரம்பித்தார். அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்ததினாலோ என்னவோ சின்னச்சாமியை பாசத்துடன் பெரியப்பா என்றே அழைத்து வந்தான். இரவு ஆனால் போதும் பாய் தலகானியை எடுத்துக்கொண்டு மந்தையில் மகாபாரதத்தைப் பார்க்க சின்னச்சாமியை கூட்டிட்டுப் போவான். அப்படி போனால் விடியக் காலையில் தான் வருவார்கள்.  அவரை அந்த ஓட்ட வண்டியில் வைத்து கிறுக்குப் பாண்டி தள்ளிக்கொண்டு வரும் அழகே அழகு தான். அரசாங்கம் சார்பாக, விபத்தில் ஒரு காலை இழந்ததற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டியும், பத்தாயிரம் பணமும் சின்னச்சாமிக்குத் தரப்போவதாக செய்தி பார்வதிக்குக் கேட்டதும், மீண்டும் தூக்கு வாளியில் சாப்பாடு குடிசை வீட்டுக்கு வந்தது.

சின்னச்சாமி தூக்கு வாளியை தூக்கி ஏறிய, பார்வதி முகத்தில் விழுந்தது. ‘ஏண்டி காசுக்காக எதுவும்ம செய்யற நீ. எனக்கு சோறு கொண்டு வந்தீயா?’ அசிங்கப்பட்டு வீட்டிற்குப் போன பார்வதி, நான்கு நாட்கள் கழித்து மகன் ஊருக்குத் திரும்பியதும், மகனிடம் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். ‘நொண்டிப்பயலுக்கு அவ்வளவு கொழுப்பாயி போச்சா?  இன்னையோடு அவன் சாகனும்’ என கோபத்துடன் குடிசை வீடு நோக்கிப் புறப்பட்டான். சூரியன் மெல்ல தன்னை மாய்த்துக் கொண்டிருந்த நேரம். எங்கிருந்தோ வந்த குருவிகள்  சின்னச்சாமியின் குடிசை வீட்டில்  அமரத் தொடங்கின. சில குருவிகள் கீச்சு கீச்சு என சத்தமிட்டு அழைத்தன. அதன் மொழியை புரிந்து கொண்ட சின்னச்சாமி வீட்டில் இருந்த தானியங்களை கட்டிலில் அமர்ந்த படியே தூவிவிட்டார். குருவி பசியை போக்கிக் கொள்ள தானியங்களை கொத்த துவங்கிய போது, குணா நேராகக்  குடிசை வீட்டிற்குள் நுழைந்தான். பசியை மறந்து, உயிர் இருந்தால் போதும் என்பது போல பட படவென குருவிகள் பறந்து சென்றன. வீட்டிற்குள் நுழைந்ததும் பக்கத்தில் கிடந்த விறகு கட்டையால் சின்னச்சாமியை அடிக்கப் போக, நல்ல வேளையாக அடி கட்டில் காலில் விழுந்தது. அடுத்து அடி அடிக்கப் போவதற்கு முன், முருகப்பா செட்டியார் வந்து விலக்கிவிட்டார். ‘நொண்டிப்பயலே  எவனுக்கோ பெறந்த அனாதைப் பயல கூட வச்சுக்கிட்டு பணத்தை அவனுக்கு குடுக்கலாம்னு நினைக்கிறீயா? அது மட்டும் நடக்காதுடா.’

குணாவின் வார்த்தை இடி சின்னச்சாமியின் காதில் விழுந்ததும், ஒரு நிமிசம் அப்படியே உறைந்து நின்றார். ‘நீயெல்லாம் மனுசனா? பெத்த அப்பனை இப்படிதான் பேசுறதா? மொத இடத்தை விட்டு கிளம்புய்யா’ அந்த இடத்தை விட்டு குணாவை அப்புறப்படுத்தியவர், ‘சின்னப் பய ஏதோ தெரியாமல் பேசிட்டான். பணம் படுத்துற பாடு அவனை இந்தளவுக்கு பேச வச்சுருச்சு. எதுவும் நினைச்சுக்காதைய்யா’ என்று முருகப்பா செட்டியார் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் கூட சின்னச்சாமியின் காதில் விழவில்லை. சின்னச்சாமியைப் போல பரிதாபமாகக் கட்டிலும் ஒரு கால் இல்லாமல் உடைந்து கிடந்தது. கிறுக்குப் பாண்டியும் மலபார் பீடியை புகைத்துக்கொண்டு, அப்போது தான் வந்து சேர்ந்தான். சின்னச்சாமி கண்ணில் கண்ணீருடன் அழுது கொண்டிருந்தார். ‘பெரியப்பா எதுக்கு அழுகிற’ என பாண்டி கேட்டதும் கட்டிலுக்கு கால் உடைந்த கதையை கண்ணீருடன் மெல்லச் சொன்னார் சின்னச்சாமி.

‘கட்டிலு காலு போனதுக்குத் தான் அழுகுறியா?
இப்ப என்ன பண்ண பெரியப்பா?’
பாவம் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசினான் கிறுக்குப் பாண்டி.
‘ஆறுமுகம் அண்ணன் கடைக்குப் போய் நல்ல கயிறாப் பாத்து வாங்கிட்டு வா. ஒடஞ்ச கட்டில காலைக் கட்டனும்’
ஐந்தே நிமிடத்தில் கயிறு வாங்கிக்கொண்டு வந்தான்.

‘நா கட்டவாப்பா’ என்றான்.
‘இல்லப்பா நீ போ . மந்தையில மகாபாரதம் திரைக்கட்டி ஓட்டுறாங்கள்ல. இன்னையோடு கதை முடியுதாம்.
பாத்துட்டு வந்து முடிவச் சொல்லுறீயா?’
‘ஏப்பா நீ வரலயா?
‘எனக்கு மனசு சரியில்ல நீ போய்ட்டு வாப்பா’

கிறுக்குப் பாண்டி மந்தைக்குப் போனான். மார்கழி மாதப் பனியிலும் ஊரே அமர்ந்து வெண்திரையில் மகாபாரதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவனும் சேர்ந்து பாயை விரித்து மகாபாரதத்தைப் பார்க்க ஆரம்பித்தான். அதிகாலை நாலு மணிக்கெல்லாம் மகாபாரதக் கதை முடிந்து விட்டது. கதையின் முடிவைச் சொல்ல   ஆர்வமாய் குடிசைக்குள் வந்தான். கட்டிலில் படுத்திருந்த சின்னச்சாமியைக் காணவில்லை. சட்டை பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சிய எடுத்து பற்ற வைத்தான். கூரையின் முகட்டில் சின்னச்சாமி ஒத்தக்காலுடன் தூங்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

காலையில் ஊரே கூடிவிட்டது. பார்வதியும் குணாவும் கதறிக் கதறி அழுது கொண்டிருந்தனர். எப்பேற்பட்ட இறப்பு என்றாலும் புதைப்பது தான் ஊர் வழக்கம். அதன் படி சின்னச்சாமியின் உடலை புதைக்கவே முடிவு செய்தனர். சுடுகாட்டில் இறந்த சோகத்தைப் போக்க சுடுகாட்டிற்கு வந்த எல்லாருக்கும் சுருட்டைக் கொடுத்தனர். கட்டுக் கட்டாக பீடி  அடிக்கும் கிறுக்குப் பாண்டி அழுது கொண்டு, சுருட்டை வாங்க மறுத்துவிட்டான். அவன் வாய் பெரியப்பா பெரியப்பா என உச்சரித்துக் கொண்டே இருந்தது. சின்னச்சாமி மண்ணுக்குள் போனதும், சுடுகாட்டிலிருந்து குணா நேர டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தான். ஒட்டுமொத்த சோகத்தையும் ஒரு பாட்டில் மூலம் தீர்த்துக்கொண்டான்.

முப்பதாவது நாள் சின்னச்சாமி புதைத்த இடத்தில் சமாதியைக் கட்டி முடித்தான் குணா. சுடுகாட்டை சுற்றிலும் திரும்பிப் பார்த்தவன், மற்ற சமாதிகளை விட பெரிய சமாதியாகத் தெரிந்தவுடன் சந்தோஷப்பட்டுக் கொண்டான். வீட்டிற்கு வந்ததும் சின்னச்சாமியின் புகைப்படத்திற்கு மாலையை போட்டு, தொட்டு வணங்கினான். வீட்டின் வெளியே பார்வதியோ, ‘அவரு சமாதிக்குச் செலவு பண்ணதே ஐம்பதனாயிரம் இருக்கும்’ என பக்கத்து வீட்டுக்காரியுடன்  பெருமை பட பேசிக் கொண்டிருந்தாள். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் பார்வதியின் தலையை பதம் பார்த்தது. சட்டென்று  பார்வதி திரும்பிப் பார்த்தாள். கிறுக்குப் பாண்டி ஓடிக்கொண்டிருருந்தான்...

;