headlines

img

ரத்தமும் சதையுமாக, ஊணும் உணர்வுமாக ஒரு நூல் - அழகிய பெரியவன்

புத்தக மேசை

இந்தியாவில் பெரும் பகுதி ஆதிக்கச் சாதியினரால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு மனிதரின் பெயரைச் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டால் நான் சற்றும் யோசிக்காமல் அம்பேத்கரின் பெயரைச் சொல்வேன் . ஆதிக்கச் சாதியினரால் அவர் அதிகம் வெறுக்கப்பட்டவர் மட்டுமல்லர். அதிகம் புறக்கணிக்கப்பட்டவர்.  அதிகம் அவமதிக்கப்பட்டவர்.  அதிகம் இருட்டடிப்பு செய்யப் பட்டவர். அதிகம் திரிக்கப்பட்டவர்.  அதிகம் புரிந்துகொள்ளப்படாதவர். ஆனால் காலம் எத்தனைக் கொடூரமானதாக இருந்தாலும் கொஞ்சமேனும் கருணை உள்ளது என்ற உண்மையை “பாபாசாகேபின் அருகிருந்து” என்ற இந்தநூல் உணர்த்தியிருக்கிறது! இந்த அரிய நூல், நாம் அறிந்திராத அம்பேத்கரின் வாழ்க்கைப் பகுதிமீது வெளிச்சத்தைப் பாய்ச்சி அவரை மேலும் நெருக்கமாக பார்க்கச் செய்கிறது , ரத்தமும் சதையுமாக; ஊணும்  உணர்வுமாக! 

அம்பேத்கரைப் பற்றி இந்திய மொழிகளில் இன்று பல நூல்கள் எழுதப்படுகின்றன.  அவற்றில் பெரும்பாலானவை புதியசெய்திகள் ஏதுமற்றவை.  காயர்மோடே எழுதிய அவரின் வாழ்க்கை வரலாற்று நூலிலிருந்தும், தனஞ்செய் கீர் எழுதிய நூலிலிருந்தும் பல செய்திகள் பல நூல்களில் எடுத்தாளப்பட்டுவிட்டன.  அவர் எழுத்துக்களைப் பற்றிய நுணுக்கமான ஆய்வு நூல்கள் பல வந்துள்ளன.  ஆனால் மறைபொருளாக்கப்பட்டிருக்கும் அவரின் வாழ்க்கையிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சித்திரங்கள் அண்மைக் காலத்தில் வெளிவரத் தொடங்கியிருக்கும் இது போன்ற நூல்களிலிருந்தே கிடைக்கின்றன.  இந்தியாவில் இவ்வரலாற்றுத் தீண்டாமை மற்றவர்களிடத்தில் காட்டப்படவில்லை. வாழும் காலத்திலேயே காந்தி மகாத்மாவாக ஆக்கப்பட்டுவிட்டார். அவருக்கு அறிவுசேவை செய்வதற்காக எண்ணற்ற பேர் அப்போது இருந்தார்கள்;  இப்போதும் இருக்கிறார்கள்.  வரப்போகின்ற அவரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட நூல் ஒன்று வெளியாகின்றது.  ஆனால் அம்பேத்கரை வியந்தோதுகின்ற அறிவுஜீவிகளே கூட அவருக்கு அப்படி ஒரு நூலை எழுதுவார்களா என்பது சந்தேகமே!

இத்தகு யதார்த்தத்தில் அம்பேத்கருக்கு விரிவானதொரு வாழ்க்கைக் குறிப்பு இல்லாத குறையை இந்நூல் போக்குகிறது.  அவருடன் இருந்த, பழகிய, பார்த்த, அறிந்த இருபத்தோரு மனிதர்களின் மிக நேர்த்தியானதும், உண்மையானதுமான குறிப்புகள் இவை. இக்குறிப்புகளின் வழியே கடும் நெஞ்சுரம் மிக்கவராக,  சளைக்காத உழைப்பாளியாக, ஒடுக்கப்பட்ட மனிதரின் விடுதலையையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தவராக, பெரும் படிப்பாளியாக, நூல்களின் வெறியராக, அறிவு மேதமையோடும் சமரசமில்லாத கொள்கையோடும் சக தோழர்களைக் கடிந்துகொள்கின்றவராக, மனைவியை நினைத்து ஏங்கியழும் காதலராக, குறும்பு மிளிரும் நகைச்சுவை உணர்வு கொண்டவராக என்று நமது முந்தைய நினைவுகளின் மீது அடுக்கடுக்காக, புதியவராகப் படிகின்றார். இடியும் புயலுமாக ஓவென்று கொட்டும் மழையின் ஊடே அவர் காற்றில் பரவவிடும் வயலின் இசை எல்லோருக்குமானதாக தழுவிச் செல்கிறது.  இந்த நூலில் இடம்பெற்றுள்ள தயாபவார், வசந்த் மூன்,  பகவான்தாஸ்,  யு.ஆர்.ராவ், நானக் சந்த் ரத்து ஆகியோரின் குறிப்புகள் அபாரமானவை. பாலுறவுத் தொழிலாளி ஒருவரின் அறையில் மாட்டப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்தைப் பார்த்ததாக எழுதும் தயாபவாரின் குறிப்பு  நம்மை நெகிழச் செய்துவிடுகிறது. விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களின் பிரியத்துக்குரியவராகவும்  நம்பிக்கைக்குரியவராகவும் அம்பேத்கர் விளங்குவதை சொல்லும் மாபெரிய குறிப்பு அது என்றே நான் நினைக்கிறேன். 

அம்பேத்கரின் ஒவ்வொரு அசைவிலும் அவருடைய கொள்கை பாற்பட்ட உறுதிப்பாடு இருப்பதை இந்தப் பதிவுகள் உணர்த்துகின்றன. போகின்ற இடத்திலெல்லாம் அவர் தன்னை சந்திக்கவரும் மக்களைப் பார்த்து இழி தொழில்களை விட்டு விடும்படியும், மூடப் பழக்கங்களைத் தூக்கி எறியும்படியும், குழந்தைகளுக்குக் கல்வியைத் தரும்படியும் வேண்டி கேட்டுக்கொள்கிறார்.  எந்த இடத்திலும் அவர் சமரசம் கொள்பவராகவே தெரியவில்லை.  தன்னிடம் இருக்கின்றவர்களை, தன்னை தினமும் சந்திக்கவரும் மாணவர்களைப் படிக்கச் சொல்கிறார். திருமணத்துக்கு முன்னால் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளும்படி கடிந்துகொள்கிறார். துன்பப்படுகிறவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம் என்று செயற்பாட்டாளர்களைக் கடிந்துகொள்கிறார்.  நடைபாதையில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் முதியவரைத் தன் வீட்டுக்குக் கூட்டிவந்து தன்னுடன் வைத்துக் கொண்ட மனிதரை,  தான் வளர்த்த நாய்க்காக அழுத மனிதரை,  தான் அமைச்சராக இருந்தபோது தன் அரசு வீட்டில் பணியாற்றியவர்களுக்கு, தன் பதவிக் காலத்துக்குப் பிறகு என்று மிகப்பொறுப்பாக வேலை பார்த்துக் கொடுத்த மனிதரை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி  மகனுக்கு வேலை கிடைப்பதை நிராகரித்த மனிதரை,  தாவரங்களை நேசித்த மனிதரை, ஏன் இந்த சமூகம் கொண்டாட மறுக்கிறது என்பதை இந்த நூலின் வாசகர்கள்தான் நியாயத்தோடு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 

எளியவர்களுக்கும் போராட்ட வாதிகளுக்கும் அம்பேத்கரின் வாழ்க்கை மிகவும் உற்சாகம் தரக்கூடிய ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது . இந்த நூல் அந்த உத்வேகத்தோடு உறுதியையும் சேர்த்திடும். சாதியும், வறுமையும்,நோயும், தனிவாழ்க்கையும் அவரை எவ்வளவுதான் வீழ்த்த நினைத்தாலும், அவர் தன் மக்களுக்கான போராட்டத்தை ஒருபோதும் கைவிடவில்லை.  தளர்ச்சியும் தொய்வும் அடையவில்லை. ஐந்து வயதில் தாயை, 44 வயதில் மனைவியை,  நடுநடுவே தமது நான்கு பிள்ளைகளைஇழந்த அம்பேத்கர்,  நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தனது ஒரே மகன் யஷ்வந்த்ராவை வைத்துக்கொண்டு வாழ்க்கையைக் கடந்தவர். அவருக்குப் பின்னால் பெரும்முதலாளிகளும் நிறுவனங்களும் இருந்ததில்லை.  எப்போதும் அவர் தனி மனிதராகவே இச் சாதிய சமூகத்தின் முன்பாக நேர் நின்றிருக்கிறார். இது அசாத்தியமான துணிவு. இந்த நூலில் இருந்து நான் பெறும் சாரம் இதுதான்.  இந்த அற்புதமான நூலை தமிழில் பெயர்த்திருக்கும் பிரேமா ரேவதிக்கும் வெளியிடும் மைத்ரி பதிப்பகத்திற்கும் என் வாழ்த்துக்கள்.

பாபாசாகேபின் அருகிருந்து தொகுப்பாசிரியர்:  சலிம் யுசுப்ஜி மொழிபெயர்ப்பு: பிரேமா ரேவதி வெளியீடு: மைத்ரி புக்ஸ், 49 பி, ஒமேகா பிளாட்ஸ், 4-வது லிங்க் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம், சென்னை - 600 091 செல்பேசி : 94455 75740 பக்கம் : 240     ரூ.200/-

;