headlines

img

சென்னையில் அசத்தலான 5 நாள் நாடகவிழா - கவின் மலர்

நாசர், ரோகிணி, குரு சோமசுந்தரம், விமல், கலைராணி, வேல.ராமமூர்த்தி ஆகியோர்  ஓராள் நாடகங்களை நிகழ்த்தவுள்ளனர்.  

சென்னை  மிகப்பெரும் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் 2 முதல் 6 வரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் சென்னை கேரள சமாஜமும் இணைந்து நடத்தவிருக்கும் தென்னிந்திய மக்கள் நாடக விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என மக்களை எச்சரித்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவேண்டாம் என மக்களைக் கோரி, அகில இந்திய அளவில்  600க்கும் அதிகமான நாடகக் கலைஞர்கள் கையெழுத்திட்ட அறிக்கை வெளியானது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இப்படியொரு கோரிக்கையை இதற்குமுன் நாடகக் கலைஞர்கள் வைத்ததில்லை. ஆனால் பா.ஜ.க. மிருக பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துவிட்டது. மிக நுட்பமாக மதவாதத்தைப் பரப்புகிறது. நாளும் ஓர் அபாயஅறிவிப்பு, சர்வாதிகாரத் தலையிடல்கள் என பாசிசத்தின் கொடுங்கரங்கள் நம் கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் தென்னிந்தியா மட்டுமே தெளிவாக தன் அரசியலை முன்வைக்கிறது. அது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலும் பெரும்பாலும் எதிரொலித்தது. இத்தகைய அரசியல் சூழலில் கலைஞர்கள் தங்கள் கலையை ஆயுதமாக ஏந்தி மக்கள் முன் வருகிறார்கள்.  

இந்நாடக விழா குறித்து சென்னை கலைக்குழுவின் நிறுவனரும் இந்நாடக விழாக்குழுவின் செயலாளருமான பிரளயனிடம் கேட்டபோது, “தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 34 நாடகக்குழுவினர் இவ்விழாவில் நாடகங்களை நிகழ்த்தவிருக்கின்றனர்.   இக்குழுக்கள் மேடை நாடகங்கள், குறுநாடகங்கள், ஓராள் நாடகங்கள் ஆகியவற்றை நடத்துபவை. சர்வதேச அளவில் நாடக விழாவில் பங்கேற்கும் குழுக்களும் உண்டு; சிறுநகரங்களில், கிராமங்களில் மட்டுமே செயல்படும், திறந்தவெளி நாடகங்களையும் வீதி நாடகங்களையும் செய்யக்கூடிய குழுக்களும் உண்டு” என்றார். திரைக்கலைஞரும் விழாக்குழுவின் தலைவருமான ரோகிணி, “மும்பையில் பிருத்வி நாடக விழாவைப் பார்த்திருக்கிறேன். சென்னையில் இப்படி ஒரு விழா நடக்காதா என்று ஏக்கமாக இருந்தது. அதை நிஜமாக்க இன்று இந்த நாடகவிழா நடைபெறவிருக்கிறது.” என்கிறார். இவ்விழாவிற்கான வரவேற்பு மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார் தோழர் பிரளயன். “இந்த முறை கூட்டாளர்கள் எனப்படும் மீடியா பார்ட்னர்களைக் கண்டுபிடித்தோம். அச்சு ஊடகங்கள், பண்பலை சேனல்களோடு த.மு.எ.க.ச வலைதளத்தில் பணியாற்றும் தோழர்களும் விழா செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.   3 மாதங்களாக பலரை சந்தித்து ஆதரவும் நிதியுதவியும் கேட்டுள்ளோம். குறிப்பாக திரைக்கலைஞர்கள் இந்த நாடகவிழாவுக்குப் பெருமளவில் ஆதரவு தந்திருக்கிறார்கள்

“அக்டோபர் 2 அன்று காந்தியின் 150ஆவது பிறந்தநாள். அன்று இரவு ‘காந்தியும் அம்பேத்கரும்’ என்கிற மராட்டிய நாடகத்தின்  கன்னட வடிவம், டி.எஸ். ஜோக்லேவின் மொழிபெயர்ப்பில் நிகழ்த்தப்படவிருக்கிறது. மறைந்த கவிஞர் இன்குலாபின் ‘அவ்வை’ நாடகத்தை மரப்பாச்சி குழுவும், கவிஞர் தமிழ் ஒளியின் ‘வீராயி’ காவியத்தை விழாவின் முதல் நாடகமாக சென்னை கலைக்குழுவும் நிகழ்த்தவிருக்கின்றன. இவை அல்லாமல் திரைக்கலைஞர்களின் பல ஓராள் நாடகங்கள் நிகழ்த்தப்படவிருக்கின்றன” என்கிறார்.  “திரைக்கலைஞர்களாக இருந்தாலும் நாடகத்திற்காக மேடையேறும்போது அவர்கள் முழுவதும் நாடகக் கலைஞர்களாகத்தான் இருக்கிறார்கள். புகழ் வீச்சு வேண்டுமானால் திரைக்கலைஞர்கள்  பங்கேற்கிறார்கள் என்கிற கூடுதலான செய்தியாக மக்களுக்குத் தோன்றலாம். அரங்கத்தில் நாடகம்  நிகழ்த்தும்  கலையை எல்லா நடிகர்களாலும் எளிதாகச்  செய்துவிட முடியாது.  இதற்குத் தனியான மனநிலை, மொழி, தயாரிப்பு இருக்கவேண்டும். பேசுமொழி, உடல்மொழி, மனதின் மொழி, சிந்தனை மொழி, அரசியல் மொழி அனைத்தும் உள்ள கலைஞர்களால்தான் நிகழ்த்துக் கலையில் ஈடுபட முடியும்” என்கிறார் ரோகிணி.  “தன் மண்ணின் வாசனையோடும், மொழியோடும் கற்றுக்கொண்ட கலையோடும் எளிமையான கலைஞர்கள் உருவாகி வருகின்றனர்.  அவர்கள் இந்த விழாவில் பங்கெடுக்கின்றனர். அதே நேரத்தில் சர்வதேச அரங்கில் தன் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றவர்களும் இவ்விழாவில் பங்கேற்கிறார்கள். இருதரப்பினருக்கும் மற்ற தரப்பிலிருந்து பெற்றுக்கொள்ளவும் கொடுக்கவும் நிறைய இருக்கிறது. இதுவே இவ்விழாவின் சிறப்பம்சம்” எனக் கருதுகிறார் ரோகிணி. 

“இது போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் நாம் சொல்ல விழைவது என்ன? பிரபல ஊடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என அனைத்தும்  பொழுதுபோக்குக்காக மட்டுமே என்றாகிப்போன நிலையில், பேசப்படவேண்டிய விஷயங்கள் பேசப்படாமல் இருக்கின்றன. ஆங்காங்கே ஒரு சில திரைப்படங்கள் வருகின்றன. ஆனால் இந்த நாடகவிழா இன்று நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அதன் பிரதிபலிப்பாக இருந்து   முக்கியமான வேலையைச் செய்யப்போகிறது. புத்தகங்கள், கவிதைகள் செய்கின்ற வேலையை இந்த நாடகங்கள் இன்னும் அழுத்தமாக, இன்னும் எளிதாகச் செய்யவிருக்கின்றன” என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறார் ரோகிணி.  விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகள் பற்றி பிரளயன் கூறினார். “ஒரு நாளில் நாடகம் நிகழ்த்த வரும்  குழுக்களுக்கு தங்குமிடம் நிகழ்வு நடைபெறும் கேரள சமாஜத்துக்கு அருகிலேயே ஏற்பாடு செய்யப்படுள்ளது. கேரள சமாஜத்தில் மூன்று தளங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றிலும் ஓர் அரங்கம் உண்டு. அனைத்திலும் நாடகங்கள் நடைபெறவுள்ளன.  முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் லிஃப்ட் வசதி உண்டு.  பார்க்கிங் வசதி இல்லாததால் நிகழ்வுக்கு வருவோர் அருகில் உள்ள நேரு பூங்கா மெட்ரோ ஸ்டேஷனில் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.  ஆயிரம் பேர் அமர்ந்து நாடகம் பார்க்க வசதியுண்டு.  சென்னை கேரள சமாஜம்  80 ஆண்டுகளாக செயல்படுகிறது. சென்னையில் உள்ள மலையாளிகளுக்கான பண்பாட்டு வெளிக்காக உருவான அமைப்பு. இதனால் மிகப்பெரிய அளவில் அரங்கங்களை உருவாக்கி இருக்கிறது.  அதன்  தலைவர் பி.கே.என். பணிக்கர், செயலாளர் பாலகிருஷ்ணன் என அமைப்பின் பெரும்பாலானோர் மதச்சார்பற்ற அரசியலில் நம்பிக்கையுடைவர்கள். இவர்களின் இந்த அரசியலும் நாடகவிழாவில் பெரும்பங்கை ஆற்றுகிறது” .  த.மு.எ.க.ச இந்த நாடகவிழாவை நடத்தவேண்டிய நோக்கம் என்ன? என்ற வினாவுக்கு விடையாக... “2017ல் நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் நடத்தினோம். இது இரண்டாவது முறை.  நாடகவிழா ஏற்கெனவே  மதுரையில் 1975ல், தஞ்சையில் 1979ல்,  சென்னையில் 1984ல்,  மதுரையில் 1986ல் கருத்தரங்கத்துடன் கூடிய நாடக விழா, மீண்டும் மதுரையில் 1988ல் அரசியல் நாடகவிழா நடந்துள்ளன. 1997ல் சென்னை கலைக்குழுவின்  12ஆவது ஆண்டு நிறைவு விழாவை அகில இந்திய அளவிலான நாடகவிழாவாக நடத்தியது. இப்படி பல நாடக விழாக்களை நடத்திய அனுபவம் த.மு.எ.க.ச.வுக்கு உண்டு.   

இந்த நாடகவிழாவுக்கு வரும் 34 குழுக்களில் 10 குழுக்கள்தான் தமுஎகசவோடு சேர்ந்து செயல்படுபவை. அழைக்கப்பட்டிருக்கும் பிற குழுக்களும் சமூக மாறுதலுக்கானதே கலை என நம்புகின்றவை. பெரும்பாலும் நவீன நாடகவெளியில் முற்போக்காளர்களே இருக்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைக்கவேண்டிய தேவை இருக்கிறது. தென்னிந்தியாவில் நிறைய குழுக்கள் உள்ளன. நடைமுறையில் ஒரு குழுவின் செயல்பாட்டை அறிந்துகொள்ள மற்ற குழுக்களுக்கு வாய்ப்பிருப்பதில்லை. தெரிந்துகொள்ள முயற்சிகளும் இல்லை. ஒரு நெகிழ்வான இணைப்பை ஏற்படுத்தவும், நாடகக்கலை வாழ்ந்துகொண்டு இருக்கிறது என்று தெரியப்படுத்தவும்,  நாங்கள் இருக்கிறோம் -இங்கு ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்று சொல்லவும் இந்த விழா ஒரு வாய்ப்பாக இருக்கும்.  கைபேசி  யுகமென்றாகிவிட்ட காலத்தில்,  பொழுதுபோக்குக்கென தனியாக ஓரிடத்திற்குச் செல்ல அவசியம் இல்லை.  ஆனால்  ஒரு நாடகத்தைக் காண்பது போன்ற நேரடி அனுபவம் போல நீங்கள் அதை பதிவு செய்து  எவ்வளவு பெரிய திரையில் பார்த்தாலும் கிடைக்காது. அதை அனுபவிக்க வேண்டுமென்றால்  குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில்  நாடகம் நிகழ்கையில் இருக்கவேண்டும். இந்த நேரடித்தன்மை, தொட்டுணரும் அனுபவம்தான் நாடகக் கலையின் தனித்தன்மை. நாடகம் உடனடி விளைவுகளை ஏற்படுத்துவது. நாடகத்திற்கான பார்வையாளர்கள் கடந்த காலத்தைவிட இப்போது அதிகரித்திருத்திருக்கிறார்கள். கடந்த காலத்தைவிட அதிகமான நாடகச் செயல்பாடுகள் இப்போது உள்ளன. பல இளைஞர்கள்  நாடகத்துறையில் இயங்கி வருகிறார்கள். பல கல்லூரிகளில் போட்டிகள், விழாக்கள் என நாடகச் செயல்பாடுகள் உண்டு. மாற்றங்கள் நடக்கின்றன. இப்படியொரு சூழலில் நாடகம் நடக்கிறது” என்கிறார் பிரளயன்.

மிகப்பெரும் திருவிழாவாக  இந்நாடகவிழா மாறப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. வடசென்னை, தென்சென்னை த.மு.எ.க.ச தோழர்கள் இரவு பகலாக விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள்.  சமூக வலைதளங்களிலும் விழா குறித்த செய்திகளைப் பலர் ஆர்வமாகப் பகிர்வதைக் காண முடிகிறது.  “உண்மைகளைப் பேசக்கூடிய ஐந்து நாட்களாக இவ்விழா இருக்கும்.  தயாரிப்பு வேலைகளில், செயல்பாடுகளில் பங்கேற்றதன் மூலம் இந்த நம்பிக்கை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நாடக விழாவை நடத்துவதற்கான தெம்பை இந்த விழா தரும். சமத்துவத்தை நம்புகிற எல்லோருக்கும் தொடர்ந்து பணியாற்றுவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும் . இவ்விழா தொடர்ந்து நடத்தப்படவேண்டும்.   சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழா ஆரம்பத்தில் ஒரு சிலர் இணைந்து சின்ன இயக்கமாகத்தான் தொடங்கப்பட்டது. அது இப்போது சர்வதேசத் திரைப்பட விழாவாக உலகப் பிரசித்தி பெற்று இருப்பதற்கு சென்னை மக்கள் தந்த ஆதரவே காரணம்.  ஊடகங்களும் மக்களும் அவ்விழா குறித்துப் பேசத் தொடங்கியதே முக்கியமான காரணம். அப்படியான ஒரு தன்மையை இந்த நாடக விழாவிலும் காண்கிறேன். சர்வதேச அளவில், முக்கியத்துவம் பெற்ற நாடகவிழாவாக  வருங்காலத்தில் இவ்விழா மாற்றப்படவேண்டியது அவசியம்.” என்கிறார் ரோகிணி.

;