headlines

img

சீர்குலைப்பது யார்? (இந்திய அரசியல் சாசனம்)

அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையில்  மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபோதே  இந்திய அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கான முயற்சி துவக்கப்பட்டது. அதற்கு அப்போது எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் வலுவான முறையில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தமுயற்சி கைவிடப்பட்டது. 

அப்போது அவர்கள் பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்ததால் அவர்களால் அதை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் தற்போது போதிய பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி அரசு ஆட்சியில் இருப்பதால் அரசியல் சாசன முகவுரையை மாற்றுவதற்கு முயற்சித்தனர். அதனை எதிர்க்கட்சிகளும், பொது அமைப்புகளும் பலமாக எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் சற்று பின்வாங்கினர். ஆனால் இப்போது சத்தமில்லாமல் மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சிலர்முயன்று வருகின்றனர் என்று தில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செவ்வாயன்று பேசியுள்ளார். நாடாளுமன்றம் இவரது ஆட்சியில்தான் அதனுடைய முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. திட்டமிட்டே அவை நடவடிக்கைகளை குறைப்பதும், குலைப்பதும் செய்யப்படுகிறது. அத்துடன் நாடாளுமன்ற மரபுகளை மீறுவதும் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்புகளை மறுப்பதும் பிரதமர் பங்கேற்பை குறைப்பதும் வராமலே இருப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதும் இவரது செயல்பாடாக இருக்கிறது.இதுவெல்லாம் அரசியல் சாசன அமைப்புகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிற முயற்சியா? 

அத்துடன் நீதித்துறையில் கூட ஆட்சியாளர்களின் எண்ணங்களுக்கேற்ப இந்துத்துவ வண்ணங்களோடு தீர்ப்புகளை பெறுவதற்காக வேண்டியவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதும் அவர்களது ஓய்வுக்கு பிறகு பிரதிபலனாக உயர் பதவிகள் அளிக்கப்படுவதும் நாடறிந்த செயல்பாடு. ஆனால் இவரோ நீதித்துறையின் நம்பகத்தன்மையை யாரோ சீர்குலைப்பதாக குற்றம் சாட்டுகிறார். 

பகவத் கீதையில் குறிப்பிடப்படும் சுதந்திரம் இந்திய ஜனநாயகத்தை வேறுபடுத்திக்  காட்டுகிறது. மக்களுக்கான சமத்துவ உரிமையையும் பகவத் கீதை வழங்குகிறது என்று கூறும் பிரதமர்பகவத் கீதை காட்டியவழியில் நாடு தற்போது பயணித்து வருகிறது என்று கூறியிருக்கிறார். இதுமுற்றிலும் உண்மையே. ஆர்எஸ்எஸ் அமைப்பின்இந்துத்துவ கொள்கைகளை அமல்படுத்துவதற்காக மோடி அரசு அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிற வேலையில் ஈடுபட்டுள்ளது. சமத்துவ உரிமையை வழங்குவதாக கூறும் கீதை, நால் வர்ணம் எனது படைப்பு; அதை நானேமாற்ற முயன்றாலும் முடியாது என்று கண்ணன் அர்ஜூனனிிடம் உபதேசம் செய்வது தானே உண்மை. அது சமத்துவத்தையா குறிக்கிறது? அரசியல் சாசனம் அனைவரும் சமம் என்று கூறுவதற்குநேர்மாறான கருத்தல்லவா அது. இந்து ராஷ்டிரத்தின் அடிப்படையல்லவா உங்களது கீதை. அதன் வழி நடப்பதை விடுத்து நாட்டின் அரசியல் சாசனத்தின்படியே நடப்பதுவே நாட்டுக்கு நல்லது.

;