headlines

img

ஒன்றிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி என்ன?

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மிகப் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ள மாற்றமாகும் இது. 
அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் வளர்ச்சிக்கான அரசு என்றுகுறிப்பிட்டுள்ளார். ஆனால் யாருடைய வளர்ச்சிக்கான அரசு என்பதுதான் கேள்வி? இதுவரை மோடிதலைமையிலான அமைச்சரவை மக்களுடைய வளர்ச்சியை பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்காகவே செயல்பட்டு வந்துள்ளது. இனியும் இந்த பாதைதான் தொடரும் என்பதையே புதிய அமைச்சர்களின் சேர்க்கைஉணர்த்துகிறது.

மத்திய அமைச்சரவையிலிருந்து 12 மூத்த அமைச்சர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் பல்வேறு குளறுபடிகளை செய்து தன்னுடைய பொறுப்பை சரிவர நிறைவேற்றாத ஹர்ஷவர்த்தன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுநோயை கையாள்வதில் மோடி அரசு முழு தோல்விஅடைந்துவிட்டது. இதற்கு ஹர்ஷவர்த்தன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். நியாயமாக பார்த்தால்கொரோனா பிரச்சனையை திறமையாக கையாளத்தவறிய மோடி தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்.செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கல்விஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் என கழற்றிவிடப்பட்டுள்ள அமைச்சர்கள் அவரவர் சார்ந்த துறைக்கு அவக்கேடு தேடித் தந்தவர்கள்தான். மாநிலஉரிமைகளை பறிக்கக்கூடிய, ஜனநாயகத்தை பறிக்கக்கூடிய சட்டங்களுக்கு வழிவகுத்தவர்கள்தான். இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்ப இவர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர். ஆனால் இவை அனைத்துக்கும் மூலகாரணமாக இருப்பது பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களும்தான்.எதிர்வரக்கூடிய மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு பலரையும் சரிகட்டும் முயற்சியாகவே ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் அமைந்துள்ளதுஎன்று அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும்கருத்தை நிராகரித்துவிட முடியாது.

உ.பி.யிலிருந்து ஏழு அமைச்சர்களும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கத்திலிருந்து தலா நான்கு பேரும், குஜராத்திலிருந்து மூவரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராசனை கழற்றிவிட ஆளுநராக்கியதை போல இவரை தலைவர் பொறுப்பிலிருந்து அகற்ற மத்தியஅமைச்சராக்கியிருக்கக்கூடும். இந்த நியமனங்கள்அந்தக் கட்சியின் உள்குத்து சார்ந்தது. ஆனால் முழுக்கமுழுக்க மாநிலங்கள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு துறைக்கு மத்திய அமைச்சகத்தை உருவாக்கி அதற்குஅமித்ஷாவை பொறுப்பாக்கியிருப்பது மாநிலஉரிமைகளை மேலும் பறிக்கக்கூடிய அப்பட்டமானஅத்துமீறலாகும். இதை அனைத்து மாநில அரசுகளும் இணைந்து கண்டிக்க வேண்டும்.

;