headlines

img

இரக்கம் என்ற ஒரு பொருள் அறியா ஒன்றிய அரசு....

பெட்ரோலியப் பொருட்களின் விலையை கொடூரமாக உயர்த்தி வருவதன் மூலம் ஒன்றிய அரசு இந்திய மக்களிடமிருந்து பகல் கொள்ளை அடித்து வருகிறது. ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் கல்லாவையும் நிரப்பி வருகிறது. 
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிஅரசு ஆட்சிக்கு வந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் மட்டும் ரூ. 25 லட்சம் கோடி அளவுக்கு  வாரிக் குவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல்விலை லிட்டர் நூறு ரூபாயை தாண்டி ரூ.102,103 என விற்கப்படுகிறது. டீசல் விலை 94.15 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், லிட்டர் நூறுரூபாயை தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 69 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுமூலம் மட்டும் ரூ.4.91 லட்சம் கோடியை இந்திய மக்களிடமிருந்து ஒன்றிய அரசு வசூலித்துள்ளது. சமையல் எரிவாயு விலையும் இரக்கமின்றி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மட்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி 25 ரூபாயும், அதே மாதம் 15 ஆம் தேதி 50 ரூபாயும், அதே மாதம் 25 ஆம்தேதி 25 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம்தேதி 25ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு முப்பதுநாளுக்குள் ரூ.125 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாதம் 1ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.25உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயை நெருங்கும் என்று அஞ்சப்படுகிறது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலைரூ.1685.50 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா கொடும் தொற்றுநோய் மற்றும் ஊரடங்கினால் அனைத்து பகுதி மக்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சாலை போக்குவரத்து ஓரளவு துவங்கியுள்ள நிலையில் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்கமுடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஒன்றிய அரசின் வரிவிதிப்பு முறையேயாகும். இதில் ஓரளவு குறைத்தால் கூட மக்களுக்கு பெருமளவு நிவாரணம் அளிக்கமுடியும். ஆனால் மோடி அரசு இந்த ஆலோசனையை காதில் வாங்கக்கூட மறுக்கிறது.

மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டுமென்று ஒன்றிய அரசு ஆலோசனை கூறுவதோடு,மாற்று எரிபொருளுக்கு மாறுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புத்திமதி கூறியுள்ளதோடு, வாகனங்களில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிபொருளை பயன்படுத்தும் வகையிலான பிளக்ஸ் இன்ஜினை கட்டாயமாக்கப் போவதாகவும், மூன்று மாதத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். வரியை குறைப்பதன் மூலம் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மறுத்து, எதிர்காலத்தில் கூடுதல் செலவினத்திற்கு வழிவகுக்கிறது ஒன்றியஅரசு. மாற்று எரிபொருள் பயன்பாடு அவசியம் என்ற போதிலும், அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல, எனவே வரி குறைப்பின் மூலம் விலை குறைப்புக்கு மத்திய அரசு முன் வரவேண்டும்.

;