headlines

img

குடி வைத்த வீட்டிற்கே கொள்ளி வைப்பதா?

வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சி விரைவில் நடக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்    அறிவிக்கிறார்.  மறுபுறம் அரசின் 300 பொதுத்துறை நிறுவனங்களை 24 ஆக குறைக்கும் வேலையை மோடி முடுக்கி விட்டிருக்கிறார்.  மோடி அரசு  ஒரே பரபரப்பாக இருக்கிறது. அதுவும் பண்ட பாத்திரங்களை விற்கும்ஊதாரியைப் போல் எதை விற்றாவது பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டும் என பாடாய் படுகிறது.

போதாக்குறைக்கு விசாகப்பட்டினம் இரும்புஆலையும் நூறு சதவிகிதம் தனியார் மயமாக்கப்ப்படும் என திருவாய்மலர்ந்திருக்கின்றனர்.  இந் நிறுவனம் சுமார் 1லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. 32 பேரின் உயிர் தியாகத்தால் விசாகப்பட்டினத்தில் இந்த நிறுவனம் உருவானது. ஆனால் அதையும்  சுயசார்பு  பேசும் மோடி அரசு  கூச்சமே இன்றி கூறு போட்டு விற்கிறது. ரூ.5 கோடியில் உருவான எல்ஐசி இன்று 34 லட்சம் கோடி சொத்துகளுடன் வளர்ந்து நிற்கிறது. தனது லாபத்தில் பங்காக மட்டும் அரசிற்கு ஆண்டுக்கு ரூ.2610 கோடியை அள்ளித்தருகிறது. தேசிய நெடுஞ்சாலை திட்டம், ரயில்வே திட்டம் என இந்தியாவின் ஆதார தொழில் வளர்ச்சிக்கு ரூ.4 லட்சம் கோடியை வாரி வழங்கியிருக்கிறது. அத்தகைய எல்ஐசியையும்  தனியாருக்கு விற்கதுணிந்திருக்கிறது மோடி அரசு. கேட்டால் பற்றாக்குறையை சமாளிக்கவே இந்த நடவடிக்கைஎன காரணம் கூறுகிறது. அதே நேரம் கோவிட் காலத்தில்  வெளிநாடுகளில் இருந்து முகேஷ் அம்பானி ரூ. 1.5 லட்சம் கோடிக்கு முதலீடு  திரட்டியிருக்கிறார். ஆனால் ஒரு பைசா கூட வரி செலுத்தவில்லை . இது எப்படி சாத்தியமானது? 

‘’ஆடத் தெரியாதவள் கூடம் கோணல்” என்பது போல், ஆட்சி நடத்த தெரியாதவர்கள் பற்றாக்குறை என சொல்லி பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வருகின்றனர். இந்திய பொதுத்துறை நிறுவனங்களை பாஜகவின் கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு காவு கொடுக்கப்படுகிறது. மக்கள் உழைத்து ஓடாய் தேய்ந்து  கொஞ்ச நஞ்சம்சேர்த்து வைத்திருக்கும் பணத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவே தனியார் வங்கிகள் பொதுத்துறையாக மாற்றம் செய்யப்பட்டன. தற்போதும் கூட யெஸ் பேங்க் திவாலான போது பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ- தான் மக்களின் பணத்தை காப்பாற்றியிருக்கிறது. ஆனாலும் மோடி வகையாறாக்கள் பொதுத்துறை வங்கிகளை மீண்டும் தனியார் கையில் ஒப்படைக்க முடிவு செய்திருக்கின்றனர். மக்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்தை தட்டி பறிக்க கார்ப்பரேட்களின் கூட்டாளியாக அரசே செயல்படுவது வெட்கக்கேடானது.

பொதுத்துறையின் உரிமையாளர்கள் இந்திய மக்கள்தான். அரசாங்கங்கள் வரலாம் போகலாம். அரசாங்கங்கள் பொதுத்துறைக்கு வெறும்நிர்வாகிகள் மட்டுமே. எந்த ஒரு நிர்வாகியும் உரிமையாளர் அனுமதி இல்லாமல் சொத்தை விற்க இயலாது. தேசிய சொத்துகளை கொள்ளையடிக்க மக்கள் அனுமதி தரவில்லை என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும். குடி வைத்த வீட்டிற்கே கொள்ளி வைக்கக் கூடாது.
 

;