headlines

img

நெஞ்சம் பதறுகிறது...(ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்)

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த இளம் பெண், சாதிய ஆதிக்க சக்தியினரால் கும்பல் பாலியல் வல்லுறவிற்கு  உள்ளாக்கப்பட்டு,  படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  வல்லுறவு செய்த கயவர்கள்  பாதிக்கப்பட்ட பெண்  உண்மையை சொல்லக்கூடாது என்பதற்காக கழுத்து மற்றும் முதுகெலும்பையும் உடைத்ததோடு நாக்கையும் அறுத்திருக்கின்றனர். இந்த சம்பவம் தேசத்தையே உலுக்கியிருக்கிறது. உயிரிழந்த அந்தஇளம் பெண்ணின் சடலத்தை கூட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க  காவல்துறை மறுத்திருக்கிறது.

வல்லுறவிற்கு உள்ளான அந்த பெண்ணின் உடலை எரிக்க இத்தனை அவசரம் காட்டிய அதே காவல் துறைதான்;  இச்சம்பவம் குறித்துவழக்கு பதிவு செய்ய 8 நாட்கள் காலம் தாழ்த்தியிருக்கிறது. 10 நாட்கள் வரை குற்றவாளிகளை கைது செய்ய வில்லை. இதுபோன்ற காவல்துறையின்  பாரபட்சமான நடவடிக்கையால்தான்,இந்த சம்பவம் பற்றி எரிந்து கொண்டு இருக்கும்போதே கடந்த இரு தினங்களில் மட்டும் அம்மாநிலத்தில்  18 பெண்கள் பாலியல்  வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். 
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல,  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சியில், அரசு நிர்வாகமும், நீதித்துறையும் செயலிழந்து நிற்கிறது. அராஜகம்,அட்டூழியம் தங்குதடையின்றி அரங்கேறுகின்றன. நீதி கேட்டு போராட வேண்டிய குடும்பத்தினர் சடலம் கேட்டு போராடும் கையறுநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். யாரை காப்பாற்ற பெற்றோரின் கையில் மகளின் சடலத்தை ஒப்படைக்காமல் அவசர அவசரமாகநள்ளிரவில் எரிக்க வேண்டும். அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?  யோகி ஆதித்யநாத் அரசு குற்றவாளிகளை பாதுகாப்பதில் அவசரம் காட்டும் பின்னணி என்ன? என்பதை விசாரிக்கவேண்டும். காரணம், பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக எரித்து முடித்த பின்னர்  அங்கிருக்கும் காவல்துறை ஏடிஜிபி பிரசாந்குமார் அந்தபெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படவில்லை என மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஏன் கொரோனாவால் இறந்ததால் உடனேஎரித்தோம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் பாஜகவின் பாரம்பரியமே பொய்தான். இந்தியாவில் கடந்தாண்டை விட இந்தாண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு  15  நிமிடங்களுக்கும் ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது என தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.  இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றாலும், மதரீதியான மூடநம்பிக்கையும்,  அரசியல் ரீதியான காரணங்களும் இதில் முதன்மையாக இருக்கிறது. 

அதிலும் பாஜகதான் முன்னிலையில் இருக்கிறது. இன்று அந்த பாஜக ஆட்சியின் கீழ்தான்தேசமும், நீதியும், நிர்வாகமும் இருக்கிறது. இவர்களிடமிருந்து தேசத்தையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

;