headlines

img

மடாதிபதியின் மர்ம மரணம் எழுப்பும் கேள்விகள்

உ.பி.மாநிலம் அலகாபாத் பாகம்பரி மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திரகிரியின் மர்ம மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. சாதுக்களின் மிகப்பெரிய அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவரான நரேந்திர கிரி பாகம்பரி மடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் அவர்களது சீடர்கள் கூறுகின்றனர்.

பாகம்பரி மடாதிபதி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரி வித்துள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

அகில பாரதிய அகாடா பரிஷத் துணைத் தலைவர் தேவேந்திரசிங் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நரேந்திர கிரியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்றும் கூறி யுள்ளார். அவரது இந்த  மனு மாநில போலீசார் விசா ரித்தால் உண்மை வெளிவராது என்ற அவ நம்பிக்கையையே வெளிப்படுத்துவதாக உள்ளது. 

பாகம்பரி மடத்திற்கு அருகில் உள்ள அனுமன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் மூலம் பெருமளவு காணிக்கை வசூலா கிறது. இதுதவிர மடத்திற்கு  சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன. இதை அபகரிப்பதற்காக பாகம்பரி மடாதிபதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை மடத்தைச் சேர்ந்தவர்களே முன்வைக்கின்றனர். 

பாஜகவைச் சேர்ந்த சிலர் மடத்தின் சொத்துக் களை அபகரிக்க முயன்றதாகவும் இதனால் அவ ருக்கு மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியிருப்பதை நிராக ரித்துவிட முடியாது. உயர்நீதிமன்ற நீதிபதியின் கண் காணிப்பின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டுமென அகிலேஷ் யாதவ் கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நரேந்திரகிரி எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது பிரதான சீடர்களான ஆனந்தகிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்றும், ஒரு பெண்ணு டன் தான் இருப்பது போல மார்பிங் செய்த படத்தை வைத்துக் கொண்டு தம்மை மிரட்டியதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள் வதாகவும் கூறியுள்ளார் என போலீசார் கூறு கின்றனர்.

ஆனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தகிரி தம்முடைய குரு தற்கொலை செய்து  கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதன் பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவுக்கு நெருக்கமான இந்த மடாதிபதியின் மரணத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. எனவே உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உ.பி.மாநில அரசு யாரை யும் காப்பாற்றவோ, உண்மையை மறைக்கவோ  முயற்சிக்கக் கூடாது. பல்வேறு மடங்கள் எந்தள வுக்கு மர்ம மாளிகைகளாக விளங்குகின்றன என்ப தற்கு பாகம்பரி மடத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும்.

;