headlines

img

உண்மையை எதிர்கொள்ள அஞ்சுவது யார்?

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உண்மையை எதிர்கொள்ள எதிர்கட்சிகளுக்குத் துணிவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில்,  உண்மையை எதிர்கொள்ள ஆளும் கட்சிக்கும் பிரதமருக்கும் தான் துணிவில்லை. 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசிக் கொண்டிருக்கும் போதே பிரதமரும் உள்துறை அமைச்சரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் கூட எழுந்து நின்று ஆட்சே பம் செய்து குறுக்கிட்டனர்.சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவரின் உரையின் பெரும் பகுதியை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார். இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் பேச்சுக்களுக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டது. 

மக்களவையில் மட்டுமின்றி மாநிலங்களவை யிலும் இந்த நிலையே தொடர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான்பிரிட்டாஸ் பேச்சில் ஆர்எஸ்எஸ் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவைத் தலைவர் அதை நீக்கிவிட்டார்.

அதுமட்டுமின்றி சபையில் தவறான தகவலை கூறிவிட்டார் என்று ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரியிருப்ப தாக அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இவை யாவும் உண்மையைக் கண்டு அஞ்சுவது யார் என்பதை நன்றாக உணர்த்தும்.

நாட்டு மக்களின் உண்மையான பிரச்சனைக ளை, நீட் தேர்வு முறைகேடு, அக்னிபாத் திட்டம், மணிப்பூர் பிரச்சனை, வேலையின்மை போன்றவை பற்றியும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் பற்றியும் பேசினால் ஆளும் பாஜக உறுப்பினர்கள் எதிர்த்து கோஷமிடுவதும், பேச விடாமல் சபாநாயகர் தடுப்பதும் இந்தக் கூட்டத்தொடரில் தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆயினும் உண்மையின் நண்பர்கள் போல் நடிக்கி றார்கள். பொய்யையே பரப்புகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் பேசும் போது, மக்கள் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதில் எங்கள் மீது அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினர் என்று கூறியிருப்பது நகைப்புக் குரியதாகும். 

நானூறுக்கும் மேலே இடங்களை கேட்ட அவருக்கு நாட்டு மக்கள் ஏற்கெனவே இருந்த 303-இல் 63 இடங்களை பறித்து 240-ஆக்கியது தான் இவர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்ததோ? இன்னும் யதார்த்த நிலையை, தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ள மறுப்பதும் கூட்டணிக் கட்சிகளின் தயவில் இருந்தாலும் முந்தைய ஆட்சியின் அகந்தையும் ஆணவமும் குறையாத நடவடிக்கைகளை இன்னும் தொடர்வதும் மக்களின் தீர்ப்பை மதிக்காத போக்காகும். உலகம் பலவிதமான சர்வாதிகாரிகளை கண்டிருக்கிறது; அவர்களை படுகுழியிலும் தள்ளியிருக்கிறது என்பதே வரலாறு.

;