headlines

img

வேலை நிறுத்தம் வெல்லட்டும்....

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கக்கோரியும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை உடனடியாக வழங்கக்கோரியும் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசு தயாராக இல்லை. அரசின் இந்த ஆணவப் போக்கினால்பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடரப்போவதாக போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு உறுதிபட அறிவித்துள்ளது. எனவே அரசு தன்னுடைய வறட்டுப் பிடிவாதத்தைக் கைவிட்டு போராடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதற்கு பதிலாக அடக்குமுறை மூலமும் பழிவாங்கும் நடவடிக்கை மூலமும்போராட்டத்தை சீர்குலைக்க அரசும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர். மாநிலத்தில் அரசுப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்துள்ளது. கொரோனா கால தளர்வுக்குப் பின் 50 சதவீதபயணிகளுடன் பேருந்துகளை இயக்குமாறு அரசு கூறியபோது ஏற்க மறுத்த தனியார் பேருந்துமுதலாளிகள் தற்போது தங்களுடைய லாபவேட்டையையும், அரசு விசுவாசத்தையும் காட்டிக்கொள்ள முயல்கின்றனர். ஆனால் தனியார் பேருந்து தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்க அவர்கள் முன்வருவதில்லை. அரசும் இதுகுறித்து கவலை கொள்வதில்லை. எவ்விதமான பணிப் பாதுகாப்பும், முறையான ஊதியமும் இல்லாமல்தான் தனியார் பேருந்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால்  அவர்களைப் பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசு முயல்வது வெட்கக்கேடானது. ஆளுங்கட்சி சார்பு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்பதால்தான் வேலைநிறுத்தம் இந்த அளவுக்கு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

2019 உடன் முடிவடைந்த ஊதியப் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைகளை தரவேண்டும். பிற துறை ஊழியர்களுக்கு இணையாகஅரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டுகொள்ளாத நிலையில்தான் தவிர்க்க இயலாமல் இந்த வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.அரசு பேருந்து போக்குவரத்து என்பது மாநிலத்தின் இரத்தம் ஓட்டம் போன்றது. மக்கள் நலன் சார்ந்த பணியை மேற்கொண்டுள்ள அவர்களது குரலுக்கு வலுச்சேர்க்க வேண்டியது அனைத்துப் பகுதி மக்களின் கடமையாகும்.

;