headlines

img

திவாலாகி விடாதீர்கள்!

“இந்தியப் பொருளாதாரம் நிலையான பாதை யில் இருப்பதாக” 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின்போது நிர்மலா சீதாராமன் கூறினார். “உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது” என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், வளர்ச்சிக்கான அளவீடு என்று ஆட்சியாளர் கள் எதை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. 

ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் அதிகமாக 2023 பிப்ர வரியில் 1.49 லட்சம் கோடி ரூபாய் என்ற அள விற்கு வசூலாகியுள்ளது. 2022 - 23 நிதியாண்டின் பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான காலகட் டத்தில் மொத்த நேரடி வரி வசூல் 24 சதவிகிதம் அதிகரித்து ரூ. 15.67 லட்சம் கோடியாக உள்ளது. இவை யெல்லாம் அரசின் சாதனையாக காட்டப்படுகின் றன. இதுவே வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது. 

ஆனால், 2023 ஜனவரியில் 7.14 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம், பிப்ர வரியில் 7.45 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நுகர்வுப்பொருட்கள் விலை குறியீட்டெண் (Consumer Price Index - CPI) அடிப்படையிலான சில்லரை விலைப் பணவீக்கம், முந்தைய 3 மாதங்க ளில் இல்லாத அளவிற்கு 2023 ஜனவரியில் 6.52 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏற்றுமதி சரிந்து விட்டது. ரஷ்ய கச்சா எண்ணெய் மலிவுவிலையில் கிடைத்து வருகிறது; டாலரில் இல்லாமல், இந்திய ரூபாய் மதிப்பிலேயே இந்த வர்த்தகம் நடைபெறுகிறது; இருந்தும் அந்நியச் செலாவணி இருப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு  வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)4.4  சதவிகிதமாக குறைந்து விட்டது. 

பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கிறோம் என்ற பெயரில், ரிசர்வ் வங்கி நாட்டின் பிறவங்கிக ளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தை, 4 சதவிகிதத்திலிருந்து 6.50 சத விகிதமாக உயர்த்தி விட்டது. இது வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி விகிதங்களை கடுமையாக அதிகரித்து, மக்களைத் தற்போது கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் ஏப்ரல் 3 முதல் 6 வரை நடை பெறவுள்ள ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள் கைக்குழு கூட்டத்தில் ரெப்போ விகிதம் மேலும்  உயர்த்தப்படலாம் என்கின்றனர். குறைந்தபட்சம் 25 அடிப்படைப் புள்ளிகள் அளவிற்கு இந்த உயர்வு இருக்கும் என்று கூறுகின்றனர். பணவீக்கம் 6 சத விகிதம் என்ற அளவை விட்டு இறங்கும் வரை, வட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர்.

இப்படித்தான் அமெரிக்க மத்திய வங்கியும் தொடர்ந்து ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. விளைவு, கடந்த 2 வாரங்களில் மட்டும் ‘சில்வர் கேட் கேபிடல் கார்ப்பரேஷன்’, ‘சிலிக்கான் வேலி வங்கி’, ‘சிக்னேச்சர் வங்கி’, ‘கிரெடிட் சூயிஸ் குரூப்’, ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ என அடுத்தடுத்து அமெரிக்க வங்கி கள் திவாலாகி நிற்கின்றன. எனவே வட்டி உயர்வை மட்டுமே தீர்வெனக் கொள்ளாமல் இந்த எச்சரிக்கையை இந்தியா கவனத்தில் கொள்வது நல்லது.

;