headlines

img

மத்திய அரசின் ஆசியுடன் முறையற்ற நியமனங்கள்....

ஒரு மாநிலத்தில் துணைவேந்தர்கள் உள்படபல முக்கியமான பதவிகளைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரையின் பேரிலேயே ஆளுநர் செயல்படமுடியும். ஆனால்  மத்திய பாஜவின் ரிமோட் கண்ட்ரோல் அரசாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசு அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியை முதலில் மத்திய அரசிடம் தாரை வார்த்தது. உலகளவில் புகழ்பெற்ற அந்த பல்கலைக்கழகத்திற்கு  முதல்முறையாக பிற மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பின்புலம் கொண்ட ஒருவர்துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இன்று அந்த நபர் பல்வேறு முறைகேட்டில் சிக்கி மாநில அரசே அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில்  தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்திற்கும் காந்தி கிராமியநிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்கும் துணைவேந்தர்களை நியமித்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டது இதுவரை கண்டிராத ஒன்றாகும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் துணைவேந்தர்கள் தேடல் குழுவில் கூட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை ஆளுநர் நியமித்து வருகிறார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டது முறையற்றது மட்டுமல்ல கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 

பாஜக தயவில் ஆட்சியை நகர்த்தி விட்ட எடப்பாடி பழனிசாமி,  கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி, மின்சாரம், நிதி என பலதுறைகளில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டார். தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் அதிகாரம் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம்தான் இருக்கும். முடிவுகள் இன்னும் வராத நிலையில் இப்படிப்பட்ட நியமனத்தைத் தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளாதது வியப்பளிக்கிறது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.அதனால் ஆளுநரின் செயல் மாநில அரசின் உரிமையை மீறியது எனத் தெரிந்தும் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக  முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மாநில அரசின் உரிமைகள் பறிபோவதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள். பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் உள்ளபோதிலும் அவர் பெயரில் வரும் அரசு ஆணைகள் உண்மையில் அமைச்சரவையின் முடிவே தவிர அவருடையதல்ல. அதனால்தான் சட்டப்பேரவையிலும் ஆளுநர் உரை என்று சொல்லப்பட்டாலும் மாநில அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத்தான் ஆளுநர் வாசிக்கிறார்.  எனவே துணைவேந்தர்கள் பதவி உள்பட பல முக்கியமான பதவிகளை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்திருப்பதை  ஏற்கமுடியாது.மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவு செய்து கொள்ளட்டும் என்று ஆளுநர் முடிவெடுத்திருக்கவேண்டும். அதைச் செய்ய அவர் தவறிவிட்டார். 

 துணைவேந்தர்கள் நியமனம் முன்போலவே மாநில அரசின் உரிமையாக இருக்கவேண்டுமே தவிர, கொல்லைப்புற வழியாக ஆளுநர்மூலம் மத்திய அரசின் நியமனமாக இருக்கக்கூடாது.  இத்தகைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது புதிதாகப் பொறுப்பேற்க உள்ள மாநில அரசின் முதற்பணியாக இருக்கவேண்டும்.

;