headlines

img

நல்ல நெருக்கடி... (கொரோனா காலத்தில் அமெரிக்க செல்வந்தர்களின் நிலவரம்)

கோவிட் 19 தொற்று எனும் பயங்கரத்தின் மையமாக மாறிய அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் ஈவிரக்கமற்ற, மக்கள் விரோத அணுகுமுறையின் காரணமாகபலியானோர் எண்ணிக்கை கடந்த செவ்வாயன்று இரண்டு லட்சத்தை தொட்டுவிட்டது. ஏற்கெனவே தொற்று பரவலையும், மரண விகிதத்தையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு சிறு உருப்படியான நடவடிக்கையும் எடுக்க முன்வராத டிரம்ப், இப்போது, கொரோனா தொற்று முழுமையான சமூகப் பரவலாக மாறி, தானாகவே மந்தை எதிர்ப்பு சக்தி (Herd immunity) உருவாகிவிடும் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார். 

இது ஒருபுறமிருக்க, இந்த கொடூரமான நெருக்கடியானது அமெரிக்க பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு செல்வ வளங்களையும், மூலதனத்தையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெருமளவில் குவிப்பதற்கான வாய்ப்புகளை வாரிவழங்கிய ஒரு ‘நல்ல நெருக்கடி’ யாக மாறிவிட்டது.செல்வந்தர்களின் செல்வக்குவிப்பு தொடர்பாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அமெரிக்காவின் 400 மிகப்பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் கடந்த சில மாதங்களில் மட்டும்தங்களது சொத்தில் 240 பில்லியன் டாலர் அதிகரித்து, மொத்தம் 3.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு தங்களது சொத்துக்களின் மதிப்பை அதிகரித்துள்ளனர். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்த போதிலும், உற்பத்தி முடங்கியிருந்த போதிலும், உற்பத்திபொருட்களின் நுகர்வு பெருமளவு சரிந்திருந்தபோதிலும், இந்த பெரு முதலாளிகளின் லாபத்தில்சரிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஏழை,எளிய, நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் வயிற்றில் அடித்து, சுகாதாரத்திற்காக ஒதுக்கவேண்டிய நிதியை பறித்து பல்லாயிரம் கோடி டாலர் தொகையைடிரம்ப் நிர்வாகம் மடைமாற்றி விட்டதன் காரணமாகவே பெரு முதலாளிகளின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.உலகளாவிய பொருளாதார நெருக்கடியுடன் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட நெருக்கடியும், உலக பெரும் சுகாதார நெருக்கடியும் சேர்ந்து இந்தாண்டு மட்டும் உலகம் முழுவதும் பட்டினியின் பிடியில் சிக்கியுள்ள மக்களின்எண்ணிக்கையை 100 கோடியாக அதிகரித்துள்ளது. இது மனித குல வரலாற்றிலேயே மிக அதிகமான மனிதர்கள் பட்டினியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் அதிபயங்கரமாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் சார்பில்,உலக மக்களின் பட்டினி போக்க மேற்கொள்ளப்படும்  முயற்சிகளுக்கு 500 கோடி டாலர் நிதி பற்றாக்குறையாக உள்ளது. இந்த பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்ததன் விளைவாக இந்தாண்டு மட்டும் 13.2 கோடி மக்கள் புதிதாக பட்டினியின் விளிம்பிற்கு வந்திருக்கிறார்கள். இந்த 500கோடி டாலரைப் போல 600 மடங்கு  தொகையைதங்களது கரங்களில் குவித்து வைத்திருக்கிறார்கள்வெறும் 400 அமெரிக்க பெரு முதலாளிகள். கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்துகுவிக்கப்பட்டுள்ள இந்த பணத்தைப் பறித்தால் தவிர, இதற்கு அடிப்படையாக உள்ள லாபவெறிகொண்ட உலக முதலாளித்துவத்தின் பிடரியைப்பிடித்து உலுக்கும் விதத்தில் ஆவேசத்துடன் போராடினால் தவிர, இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கி முன்னேற முடியாது.
 

;