headlines

img

நீட் எனும் தூக்குக் கயிறு,,,,

நீட் தேர்வு எனும் பயங்கரத்திற்கு தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி பலியாகியுள்ளார். நீட் தேர்வுஎழுதிய நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கெனவே மேட்டூரை அடுத்துள்ள கூலையூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவனும் அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழகத்தில் இந்தாண்டு நீட் தேர்வுபயம் காரணமாக மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன.

நீட்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள்இத்தகைய வருந்தத்தக்க முடிவை மேற்கொள்வதற்கு  உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை பெற்றோர்களும், மனநல ஆலோசகர்களும் வழங்குவது அவசியம். மனித உயிர்கள் மதிப்பற்றவை என்பதை உணர்ந்து வருங்கால தலைமுறை இத்தகைய விபரீத முடிவுஎடுப்பதை முற்றாக நிறுத்த வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி அரசுமுன்மொழிந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை தமிழக பாஜக மட்டும் தான் நீட்தேர்வை நியாயப்படுத்தி பேசி வருகிறது. அதிமுக ஆட்சியிலும் இதே போன்று நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குஅனுப்பப்பட்டது. ஆனால் அதை நரேந்திர மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போதுஅதிமுகவும், திமுக கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த போதும், இந்த நிலைமைக்கு முழுக் காரணம் ஒன்றிய அரசின் தேவையற்ற பிடிவாதமே என்பதை மறைத்து மாநில அரசு மீது பழி சுமத்தமுயல்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும் நீட்தேர்வுக்கெதிராக ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசுவது அவசியம்.தகுதி, திறமை என்ற பெயரில் நீட் தேர்வுக்குஆதரவாக நீட்டி முழக்குவோர் அந்த தேர்வில்பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் தொடர்ந்துவருகின்றன என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். தமிழகத்தைச்சேர்ந்த சிலர் ஆள்மாறாட்ட வழக்குகளில் சிக்கியதும் நடந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளஅதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

வட மாநிலங்களில் இத்தகைய மோசடிகளை அரங்கேற்றுவதற்காகவே பயிற்சி மையங்கள் என்ற பெயரில் ஒரு பெரும் வலைப்பின்னலே இயங்கி வருகிறது என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகின்றன. நீட் தேர்வு பயிற்சி மையங்கள் என்றபெயரில் பல லட்சம் ரூபாய் மாணவர்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகஅரசு நிறைவேற்றி அனுப்பியுள்ள நீட்தேர்வுவிலக்கு மசோதாவிற்கு ஒன்றிய அரசும், குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளிக்கவேண்டும். நீட்இல்லையென்றால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. ஆனால் இந்தத் தேர்வு முறையால் பல குடிகள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

;