headlines

img

கார்ப்பரேட்டுகளின் கட்டுக்கடங்காப் பசிக்காக...

கோவிட் பெருந்தொற்றால் நாட்டு மக்கள் அல்லலுறுகிறார்கள்; அவதிப்படுகிறார்கள். ஆயினும் நரேந்திர மோடி அரசு பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க மறுக்கிறது. நாட்டு மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை. கார்ப்பரேட் நண்பர்களின் கல்லாவும் கஜானாவும் நிறைந்து வழிந்திட வேண்டுமென்பதே நரேந்திர மோடியின் தணியாத தாகமாக இருக்கிறது. அதனால் பொதுத்துறை நிறுவனங்கள்இருப்பதால்தானே இந்த கேள்வி எழுகிறது. அவற்றை முற்றிலும் ஒழித்துக் கட்டி விடுவது என்று மூர்க்கமாக இறங்கிவிட்டது மோடி அரசு.

வங்கித்துறையோ, காப்பீட்டு நிறுவனமோ எதுவாக இருந்தாலும் முதலில் அரசின் பங்குகளை விற்பதில் துவங்கிய ஒன்றிய அரசு இப்போது மொத்தத்தையும் தாரை வார்க்க வழி செய்து சட்ட முன்வடிவை நிறைவேற்றியிருக்கிறது. பொதுக்காப்பீட்டுத் துறையில் ஒன்றிய அரசு 51 சதவீதபங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்வதற்கு இந்த சட்டமுன்வடிவு வழிவகுக்கிறது.இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பி.ஆர்.நடராஜன் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை நிராகரித்துவிட்டு, எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம்இந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றி கார்ப்பரேட்டுகளின் காயசண்டிகைப் பசிக்குத் தீனி போட்டுள்ளனர். ஆயினும் அவர்களது பசி அடங்காதது. அதற்கு இன்னும் இரையாகப் போவது எத்தனைபொதுத்துறை நிறுவனங்களோ?

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பொதுத்துறை  பங்குகளை விற்பதற்கு என்றே தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போதோ நிதியமைச்சகமே அந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் தான் அமைச்சரவைக்குழு ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்கப் போவதாகச் சொன்னது. ஆனால் உடனே களத்தில் இறங்கி வெட்டி பலிபோட்டுவிட்டது.

நாட்டு மக்களின் காப்பீட்டுத் திட்டக் கனவைநிறைவேற்றி குக்கிராமங்களில் வாழ்பவர்களுக்கும்பயனளித்து வந்தவை பொது காப்பீட்டு நிறுவனங்கள்தான். இவை தனியார்மயமாவதால் அந்தச் சேவை இனி அம்போதான். தனியாரின்இலக்கு லாபம் மட்டும்தான்; சேவையல்லவே! அதுமட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களில்தான் இடஒதுக்கீட்டு முறை அமலானது; அதனால் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்கள் பணி நியமனம் பெற்றனர். இனி அதுவும் அதோ கதிதான்.நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக்கி பலப்படுத்திட வேண்டுமென்பது நாட்டு மக்களின் விருப்பமாகவும் அதன் ஊழியர்களின் எண்ணமாகவும் இருந்தது.

ஆனால் அவற்றை செவி மடுக்காமல் கார்ப்பரேட்களுக்காகத் துடிக்கும் நவீன தாராளமய காதலர் நரேந்திர மோடி அதனை அவர்களுக்காக படையலிட்டு விட்டார். எனினும் மாநிலங்களவையில் இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யாமல், கைவிடுவது நாட்டு மக்கள் அனைவருக்கும் நலம் பயப்பதாகும். இதை ஒன்றியஅரசு செய்திட வேண்டும்.

;