headlines

img

அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க நான்கு நாட்டுக் கடற்படைகளின் பயிற்சிகள்

வரவிருக்கும் நவம்பர் மாதத்தில் அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கடற்படைகளின் பயிற்சிகள் (Malabar exercises) நடைபெறவிருக்கின்றன. இதற்குமுன் 1990களின் முற்பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைகளின் கூட்டு மலபார் பயிற்சிகள் நடைபெற்றன. சமீப காலங்கள் வரையிலும் அது ஜப்பானியப் பங்கேற்புடன் மூன்று நாடுகளின் பயிற்சியாக மாறியிருந்தது.

2007இல் ஒருதடவை மட்டும், ஆஸ்திரேலியாவும், சிங்கப்பூரும் மலபார் பயிற்சிகளை வங்காள விரிகுடாவில் நடத்தின. அந்த சமயத்தில், அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, கொல்கத்தாவிலிருந்தும், சென்னையிலிருந்தும் இரண்டு கூட்டு நடைபயணங்களை (joint jathas), இரண்டும் விசாகப்பட்டினத்தில் சேர்ந்திடும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இப்போது ஏற்பட்டுள்ள நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணிக்கு 2007இலேயே திட்டமிடப்பட்டது. எனினும் இப்போது டிரம்ப் நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக கடைசியில் இப்போது நிறைவேறியிருக்கிறது. இதுபோன்ற கூட்டுப் பயிற்சி என்பது சீனாவிற்கு எதிரானது என்கிற உண்மையை அமெரிக்கா மறைத்தே வந்திருக்கிறது.  2017இல், மணிலாவில் இந்த நான்கு நாடுகளின் செயலாளர்கள் மட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது.  அந்தக் கூட்டத்தில், சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைத் தடுப்பதற்காக “சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் திட்டத்திற்கு” (“free and open Indi-Pacific”) முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு, நான்கு நாடுகளின் ராணுவக்கூட்டணி, அமைச்சர்கள் மட்டத்திற்கு மேம்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் செப்டம்பரில் நான்கு நாட்டின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இதனைத்  தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர் 6 அன்று டோக்கியோவில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாவது கூட்டம் நடந்துள்ளது. 

அமெரிக்கா, இந்த நான்கு நாட்டு ராணுவக் கூட்டணியை, சீன எதிர்ப்புக் கூட்டணியே என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர், மைக் பொம்பியோ, டோக்கியோவில் நடந்த கூட்டத்தில் கூறியதாவது: “நான்கு நாடுகளின் கூட்டாளிகள் என்ற முறையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுரண்டல், ஊழல் மற்றும் வற்புறுத்தல்  ஆகியவற்றிலிருந்து நம் மக்களையும், கூட்டாளிகளையும் பாதுகாக்க ஒருவர்க்கொருவர் ஒத்துழைக்கவேண்டிய கட்டாயம், முன்பைவிட இப்போது மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது.”

 லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற்பட்டபின்னர், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் ஊடகங்களும், பல்வேறு போர்த்தந்திர வல்லுநர்களும் (strategic experts), இதுபோன்று நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணியை தீவிரமாக நியாயப்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். இந்தியா, அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆசியா-ஆப்ரிக்கா பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கு இது அவசியம் என்றும் தொடர்ந்து கூறத் தொடங்கி இருக்கின்றனர்.

எனினும், அமெரிக்க போர்த்தந்திர நலன்களுடனான கூட்டணியை இப்போது “இந்தோ-பசிபிக்”  பிராந்தியம் என்ற சொற்றொடர்மூலம் விளிக்கத் தொடங்கி இருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, “ஆசிய-பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான கூட்டுப் போர்த்தந்திர தொலைநோக்குப்பார்வை” (“Joint Strategic Vision for the Asia-Pacific and Indian Ocean Region”) என்னும் உடன்பாட்டில், 2015 ஜனவரியில் இந்தியாவிற்கு ஜனாதிபதி ஒபாமா வந்திருந்த சமயத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்தியாவை மேலும் நயமாக ஏய்த்துச் செயலாற்றுவித்திட, ஆசியா-பசிபிக் பிராந்தியம் என்பது, டிரம்ப் நிர்வாகத்தால் இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

இந்தியா, 2016இல் அமெரிக்காவுடன் கடல்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து விநியோக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இதற்கு “கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தக் குறிப்பாணை” (LEMOA-“Logistics Exchange Memorandum of Agreement”) என்று பெயர். இதனைத் தொடர்ந்து இதேபோன்று 2020 ஜூனில் ஆஸ்திரேலியாவுடனும், அடுத்து 2020 செப்டம்பரில் ஜப்பானுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.  இப்போது இந்த நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணியில் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தும், ஒன்றுக்கொன்று மற்றவர்களின் ராணுவ வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள பரஸ்பரம் வசதி செய்து கொடுக்கின்றன. இந்த மலபார் ராணுவப் பயிற்சிக் கூட்டணியில் இப்போது ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டு நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணியாக மாறியிருக்கிறது.

மத்திய அயல்துறை அமைச்சர், ஜெய்சங்கர், செப்டம்பரில் ஒரு கருத்தரங்கத்தில் உரையாற்றும்போது, இந்தியா எந்தவொரு “கூட்டணி அமைப்புமுறையிலும்” (“alliance system”) அங்கமாக மாறாது என்று கூறியபோது, அது கபடத்தனமான ஒன்று என்பது நன்கு தெரிந்தது. ஏனெனில், இந்தியா, ஏற்கனவே, அமெரிக்காவுடன் “கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தக் குறிப்பாணை” (LEMOA)  மற்றும் தகவல் மற்றும் பரஸ்பர இயங்குதன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தக் குறிப்பாணை (CISMOA - “Communications, interoerability and Security Memorandum of Agreement”) ஆகிய இரு அடிப்படையான இரு ஒப்பந்தங்களிலும் கையெழுத்து செய்துள்ளது.   மூன்றாவது ஒப்பந்தமும் “அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் தகவல் ஒப்பந்தம்” (BECA-“Basic Exchange and Communication Agreement”) என்ற பெயரில் இறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 27 அன்று புதுதில்லியில் இரு நாடுகளின் ராணுவம் மற்றும் அயல்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இதுதொடர்பான அறிவிப்புகளைப் பார்க்கலாம்.

இத்தகைய ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் ராணுவக் கூட்டணிகளால் கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. அது நேட்டோ (NATO) நாடுகளாக இருந்தாலும் சரி, அல்லது ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளவைகளாக இருந்தாலும் சரி. இந்தியா, ஏற்கனவே, அமெரிக்காவின் “பெரிய ராணுவக் கூட்டாளி” (“major defence partner”)யாக இருக்கிறது. நாட்டின் இறையாண்மையை அடகு வைத்து, இவ்வாறு அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாறியிருக்கிறோமே என்பது தொடர்பாக எவ்விதமான மனச்சங்கடமும் மோடி அரசாங்கத்திற்குக் கிடையாது. இவ்வாறு இந்தியா, அமெரிக்காவுடனான நான்கு நாடுகள் கூட்டணியில் சேர்ந்திருப்பது தொடர்பாக இந்தியாவின் அண்டை நாடுகள் என்ன கருதும் அல்லது ஆசியன் (ASEAN) நாடுகள் என்ன கருதும் என்பதைப்பற்றியெல்லாம் இதற்கு எந்தக் கவலையும் கிடையாது.  

எதார்த்த நிலைமை என்னவென்றால், இந்த நான்கு நாடுகள் கூட்டணி, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்கிற பேராசையின் விளைவேயாகும். இது இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திடும் என்று எண்ணுவதெல்லாம் மாயை மற்றும் வலுவற்றவை என்பது தெரியவரும். அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் நான்கு நாடுகள் கூட்டணி அதற்கு ஒரு கூடுதல் அம்சம். அவ்வளவுதான்.

இந்தியா, தன்னுடைய நலன்களுக்காக, எல்லையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சீனாவுடன் உயர்மட்ட அளவில் அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வர வேண்டும்.  கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பிந்தைய காலத்தில், இந்தியாவின் வளர்ச்சிக்காக, இந்தியா சீனாவுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் பிராந்திய, பூகோள-அரசியல் போர்த்தந்திரத்தின் ஓர் அங்கமாக இந்தியா மாறுவது, நம் நாட்டின் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்கிடும். பல்துருவ உலகக் கோட்பாடு அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான இந்தியாவின் போர்த்தந்திர சுயாட்சியையும் இது கடுமையாகக் கட்டுப்படுத்திடும்.

(அக்டோபர் 21, 2020)

(தமிழில்: ச. வீரமணி)   

 

;