headlines

img

மற்றொரு மைல்கல்... (குடியுரிமை திருத்தச் சட்டம்)

ஒன்றிய அரசு கொண்டு வந்த  குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது மதநல்லிணக்கம் மற்றும்சமூக நீதியை முன்னெடுக்கும் தமிழக பாரம்பரியத்தில் மற்றொரு மைல்கல்லாக அமையும். 

அதே நேரத்தில் சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்திற்கு எதிராக பாஜகவுடன் இணைந்து நின்ற அதிமுகவிற்கு இது மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த  பாமக, அந்த தவறுக்குப் பிராயச்சித்தமாக  தற்போது மாநில அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ‘’அரசியல் ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக  உறுதிப்படுத்துவது மிக மிகத் தவறானது’’ என பாஜகதலைமையிலான ஒன்றிய அரசின் விசமத்தனத்தைமிகச்சரியாகவே சுட்டிக்காட்டினார்.  இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 14வது பிரிவின் படி இந்திய நிலப்பரப்பிற்குள் எந்த  நபருக்கும், எந்த குடிமகனுக்கும் சட்டப்படியான சமத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அரசு மறுக்க முடியாது.  1955ஆம்ஆண்டு குடியுரிமை சட்டத்தின் படி குடியுரிமை பெறமதம் ஒரு அடிப்படையாக இல்லை. 

ஆனால் பாஜக தலைமையிலான  ஒன்றிய மோடிஅரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச்சட்டம் மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றுகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர்.  மதச்சார்பற்ற இந்தியாவில் மதத்தைஅடிப்படையாகக் கொண்ட எந்த சட்டத்தையும் கொண்டு வரமுடியாது. இந்த சட்டம் அடிப்படையில்இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானதுஆகும்.குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் சிறுபான்மையினர் வரலாம் என்கிறது.  ஆனால் இலங்கைத் தமிழர்களை அனுமதிக்க மறுக்கிறது. இது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும். உலகில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக  இந்தியா மிளிர்வதற்குக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை எனும் தத்துவம்தான். அதனைச் சிதைத்து பாசிச சித்தாந்தத்தைத்திணித்து  இந்து ராஷ்டிரத்தை  உருவாக்க முயல்கிறது. அதன்  நீட்சியாகவே ‘’தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் தயாரிக்க  ஒன்றிய அரசு முயல்கிறது. இதனை  முழுவதுமாக  கைவிட வேண்டும்’’என முதல்வர் சரியாகவே வலியுறுத்தியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு எதிராக, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான  இடது ஜனநாயக முன்னணி அரசு கேரள சட்டமன்றத்தில் முதன் முதலாகத்  தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம்,பஞ்சாப், ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களும் தீர்மானங்களை நிறைவேற்றின. கேரள அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்திருக்கிறது. பல்வேறு
அமைப்புகளும் இணைந்திருக்கின்றன. அதில் தமிழகஅரசும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். 

இந்த மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக 147 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன சட்டமும் பாதுகாக்கப்பட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நிலுவையில் உள்ளவழக்குகளை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரித்துத்தீர்ப்பு வழங்கிட வேண்டும்.

;