உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கி யிருந்த 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அவர்களின் உறவினர்கள் மட்டு மின்றி நாடே நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கி றது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்க கட்டு மான நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் தொடங்கி, திருச் செங்கோடு ரிக்ஸ் தொழிலாளர்கள் உட்பட மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவிப்போம்.
யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித யாத்திரை தலங்களுக்கான இணைப்பை ஏற்படுத்துவதற்காக 889 கி.மீட்டர் தொலைவிற்குச் சார்தாம் பரியோஜனா திட்டம் 2016 இல் துவங்கப்பட்டது. இதில் சில்க்யாரா- பார்கோட் இடையே 4.5 கி.மீ தூரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. நுழைவு வாயி லிலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஏற்பட்ட மண் சரிவு 60 மீட்டர் சுரங்கப் பாதையை மூடியது.
இதில் உள்ளேயிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்பது கேள் விக்குறியான நிலையில் 8 ஆவது நாளில் 6 அங்குல குழாய் பொருத்தப்பட்டு உயிர் பிழைப்ப தற்கான அடிப்படை ஆதாரங்கள் வழங்கப் பட்டன. பின்னர் “எலி வளை’’ உள்ளிட்ட பல்வேறு நுட்பமான முயற்சிகளின் மூலம் 410 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த நிலை ஏற்பட்டது ஏன்? சிக்க லான புவியியல் அமைப்புக்களைக் கொண்ட இமயமலை பகுதியில், இந்த திட்டம் ஆபத்தை ஏற்படுத்தும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் ஆரம்பத்திலேயே எதிர்த்தனர். உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவும் இந்த திட்டம் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்தது. ஆனால் பாஜக அரசு முன்வைத்த “தேசியப் பாதுகாப்பு” நலன் என்பதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றமும் அனுமதியளித்தது. அத னால் உச்சநீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு வின் தலைவர் ரவிசோப்ரா, தீர்ப்பு ஏமாற்றம ளிப்பதாகக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2018 இல் இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.853 கோடியே 79 லட்சம். அதுவும் 4 வருடத்தில் கட்டி முடித்திருக்க வேண்டும். ஆனால் 2021இல் இத்திட்டத்தின் செலவு ரூ.1383 கோடியே 78 லட்சமாக உயர்ந்து விட்டது. திட்டத்தின் படி 2022 ஜூலையிலேயே சுரங்கத்திற்கான வெளி யேறும் அணுகு சாலை கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் முடியவில்லை. இதி லிருந்தே இந்த பணி எவ்வளவு சிக்கலானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை அலட்சியம் செய்வதால் ஏற்படும் ஆபத்தின் முதல் அறி குறியே இது. இதிலிருந்தாவது ஒன்றிய அரசு படிப்பினை பெற வேண்டும். இனியாவது இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.