கருத்துரிமையின் மீதான எதேச்சதிகாரத் தாக்குதல்
கருத்துரிமை என்பது ஜனநாயகத்தின் மூச்சு. அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே. ஆனந்த விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது வெறும் தொழில்நுட்ப நடவடிக்கை அல்ல; அது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்.
அமெரிக்காவில் இந்தியக் குடிமக்கள் கைவிலங்கிடப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப் பட்டு நாடு கடத்தப்படும் அவலத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு கேலிச்சித்திரம் பாஜக ஆட்சியாளர்களின் ஆத்திரத்திற்கு உள்ளாகி யிருக்கிறது. நூறாண்டு பாரம்பரியம் கொண்ட ஊடக நிறுவனத்தின் குரலை நசுக்க முற்படுவது, மோடி அரசின் எதேச்சதிகாரப் போக்கின் மற்றொரு வெளிப்பாடு.
பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 159-வது இடத்திற்கு சரிந்திருப்பது தற்செயல் அல்ல. நியூஸ் க்ளிக் முதல் ஆனந்த விகடன் வரை - விமர்சன குரல்களை ஒவ்வொன்
றாக நசுக்கும் முயற்சியின் தொடர்ச்சியே இது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது, செய்தி ஊடகங்களை அச்சுறுத்துவது என ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
தன் மக்களின் கண்ணியத்தைக் காக்க முடியாத ஆட்சி, தன்னை விமர்சிக்கும் குரல்களை நசுக்குவதில் மட்டும் தீவிரம் காட்டு கிறது. இந்த அடக்குமுறைக்கு எதிராக ஒட்டு மொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.
இதற்கு முன்பும் பல்வேறு ஊடகங்களின் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் அத்தகைய தாக்குதல்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஏனெனில் உண்மையின் குரல்களை என்றென்றும் நசுக்க முடியாது. கருத்துரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை. அதை பறிக்க முயல்வது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை சிதைப்பதற்கு சமம்.
மேலும், இத்தகைய அடக்குமுறைகள் மக்களிடையே மேலும் அதிக எதிர்ப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவே செய்யும். ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதும், விவாதங்களை அனுமதிப்ப தும் அவசியம். அதை மறுப்பது என்பது நவீன பாசிசப் போக்கின் வெளிப்பாடே. இந்த நிலையில் ஆனந்த விகடனுக்கு ஆதரவாக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் வரை இந்த தாக்குதலை கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம்.