ஐ.நா.வின் பலவீனமும் உலகின் மௌனமும்
காசாவின் குருதி நனைந்த மண்ணில் வரலாறு தன்னை மீண்டும் எழுதுகிறது. மனித குலத்தின் கண்முன்னே, 21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை அரங்கேறியது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வெளி யிட்டுள்ள அறிக்கை வெறும் வார்த்தைகளைத் தாண்டி, காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கொடூரத்தின் முழு அளவை பதிவு செய்துள்ளது.
மருத்துவ வசதிகளை திட்டமிட்டு அழித்தல், பாலியல் வன்முறையை கருவியாக்குதல், பிறப்பு களைத் தடுப்பதற்கான முறைகளை திணித்தல் - இவை வெறும் போர்க்குற்றங்கள் அல்ல; இவை ஒரு மக்களினத்தை வேரோடு அழிக்கும் குறிக்கோளின் பகுதிகள்!
ஐ.நா. அறிக்கை இஸ்ரேலின் இந்த மோசமான மீறல்களை ஆவணப்படுத்துகிறது, ஆனால் நட வடிக்கை எங்கே? சர்வதேச நீதிமன்றத்தின் உத்தர வுகளுக்குப் பின்னும், காசா மேலும் மேலும் இடி பாடுகளாக மாறியதை இந்த உலகம் பார்த்தது.
நேதன்யாகுவின் “யூத எதிர்ப்பு” என்ற ஐநா மீதான குற்றச்சாட்டுகள் அவர்களின் பாதுகாப்பு கவசம் - விமர்சனத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஒரு கேடயம். ஆனால் உண்மை என்ன வென்றால், பாலஸ்தீன மக்கள் கூட்டம் முழுமை யாக அழிக்கப்படுகிறது - அவர்களது வரலாறு, கலாச்சாரம், எதிர்காலம் உட்பட.
ஹமாஸின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால் பாலஸ்தீனிய குழந்தைகளின் இரத்தம் அந்த கொடூரமான செய லுக்கான பழிவாங்கலுக்கு எவ்வாறு நியாயம் ஆக முடியும்? பதிலுக்குப் பழிவாங்கல் இனப்படு கொலையாக மாறும்போது, மனிதகுலம் தன் ஆன்மாவை இழக்கிறது.
காசாவின் இடிபாடுகளுக்கிடையே, ஐ.நா.வின் கையறு நிலையும், உலகின் மௌனமும் வரலாற்றின் கருப்புப் பக்கமாகப் பதிவாகும். ஒவ் வொரு நாளும் அவசரகால உதவி தடுக்கப் பட்டது. ஒவ்வொரு மணி நேரமும் பாதுகாப்பான இடங்கள் குறிவைக்கப்பட்டன.
இஸ்ரேலிய பொருளாதார நலன்களும், கூட்டாளி நாடுகளின் ஆயுத வர்த்தகமும் மனித உரிமைகளை விட முக்கியமா? அரபு நாடுகளின் பிளவுகளும், அமெரிக்காவின் வெளிப்படை யான ஒருதலைப்பட்சமும் இந்த இனப்படுகொ லைக்கு தடையற்ற அனுமதியளித்தன. சர்வதேச சட்டங்கள் வெறும் காகிதங்களாகத் தோன்று கின்றன - காசாவின் கதறல்கள் கேட்காமல் போயின. வல்லரசுகளின் இரட்டை நிலைப்பாடு கள் வெளிச்சமாகிவிட்டன. ஐ.நா. அறிக்கை கூறு வது போல நிர்ப்பந்திக்கப்பட்ட பட்டினி, நிர்வாண மாக்கல், பாலியல் வன்முறை - இவை அனைத்தும் ஒரு இனத்தை வேரறுக்கும் முயற்சியின் பகுதி கள். ஒரு மனித இனத்தை அவமானப்படுத்தி, அழிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள்.
பேரழிவின் இந்த வட்டத்தை உடைக்க, இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகள், ஆயுத விற்பனைத் தடை, தனிமைப்படுத்தல் என உலக நாடுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.