headlines

img

ஏன் இந்த அவசரம்? (வெற்றி நடைபோடும் தமிழகம்)

“வெற்றி நடைபோடும் தமிழகம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் பக்கம்பக்கமாக மக்கள் வரிப் பணத்தில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை அதிமுக இழந்துவிட்டதால் அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் கடைசி நேரத்தில் அகப்பட்டதை சுருட்டும் வேலையில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் ரூ.40 ஆயிரம் கோடிமதிப்பிலான 3,888 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பொதுப்பணித் துறை உட்பட பல்வேறு துறைகள்டெண்டர் விடுவதில் அவசரம் காட்டுவதன்மர்மத்தை புரிந்து கொள்வது சிரமமல்ல. கூடுதலாக கமிஷன் தரும் நிறுவனங்களுக்கே ஒப்பந்தப்பணிகள் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்ற நிலையில் இந்த அவசர டெண்டர்கள் மூலம் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பல்லாயிரம் கோடியை கமிஷனாக பெறும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.மறுபுறத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் என்ற பெயரில் வகைதொகையில்லாமல் பல்வேறு நகரங்களில் அனைத்து விதிகளும் மீறப்பட்டு அவசர கோலத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதிலும் கூட பெரும் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்தப் பணியிலும் வெளிப்படைத் தன்மையில்லை.

தமிழக அரசு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் பல்லாயிரம் கோடிக்கு விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் விடப்படுவதன் மூலம் அரசு கஜானாவை காலிசெய்துவிட்டுப் போக அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.மறுபுறத்தில் பல்வேறு பணி நியமனங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பணி நிரந்தரமல்லாததற்காலிக பணியிடங்களுக்கு கூட லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது. தேர்வு, வேலை வாய்ப்பு அலுவலக மூப்பு என எந்த விதியையும் பின்பற்றாமல் மாவட்ட அளவில் பணி நியமனங்கள் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் இதன் மூலம் பெரும் தொகையை வசூலித்துவருவதாக வெளிப்படையாகவே புகார்கள் எழுகின்றன.

முதல்வர், துணை முதல்வர் துவங்கி பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் புகார் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தபோதும், ஒப்பந்த பணிகள் மற்றும் பணி நியமனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி தேர்தல் பணிகளுக்கு அந்தத் தொகையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.லஞ்சம்- ஊழலில் தமிழகம் முதலிடத்தை நோக்கிசென்றுள்ள நிலையில்தான் வெற்றி நடைபோடும் தமிழகம் என விளம்பரங்கள் பளிச்சிடுகின்றன. கடந்த மூன்று மாத காலத்தில் விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது. அதிமுக அரசின் ஒட்டுமொத்த ஊழல் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு சட்டமன்றத் தேர்தலிலும், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.