articles

img

ஊழலில் வெற்றி நடைபோடும் தமிழகம்...

மதுரையில் வியாழனன்று மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். அந்த உரைகளின் சாராம்சம் வருமாறு...

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறாது. டெபாசிட் இழப்பது உறுதி. தில்லி கோட்டையில் பாஜக ஆட்சி நீடிக்காது என்பதை தமிழகம், கேரளம், வங்கம், புதுச்சேரி, அசாம் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கும். தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி அந்தக் கடமையை நிறைவேற்றும். மற்ற மாநிலங்களில் இடதுசாரிக் கட்சிகள் அந்தக் கடமையை நிறைவேற்றுவார்கள்.

கேரளத்தில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானத்தின் நகல் கிழிக்கப்பட்டது. ‘நான் ஒரு விவசாயி’ எனக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார்.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்.
நடைபெறவுள்ள தேர்தல் போராட்டம் மோடிக்கும்-நமக்கும் நடைபெறும் தனிப்பட்ட போராட்டம் அல்ல. நாட்டைப் பாதுகாக்கும் போராட்டம்.

சசிகலா விடுதலை ஆனவுடன் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் டிஜிபி-யைச் சந்தித்து தமிழகத்திற்கு ஆபத்து வந்துள்ளது. பாதுகாப்புத் தாருங்கள் எனக் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தை யார் ஆட்சி செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.

“தமிழகம் வெற்றி நடை போடுவதாக” முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நியாயவிலைக்கடை ஊழியர்கள், கூட்டுறவுத்துறை ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு புறத்தில் சிறு-குறு தொழில்கள் நலிந்துவிட்டன என உற்பத்தியாளர்களும், காலிப் பணியிடங்களை நிரப்புங்கள் என இளைஞர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே வெற்றி நடைபோடுகிறது தமிழகம்? ஊழலைத் தவிர எதிலும் அதிமுக அரசு வெற்றி நடைபோடவில்லை.

மதுரையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லை. ஸ்மார்ட் சிட்டி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, குடிமராமத்தில் தூர் வாரியது என அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.மோடிக்கு காவடி தூக்கும் எடப்பாடி தலைமையிலான அதிமுக-வை தேர்தலில் தமிழக மக்கள் தோற்கடிக்க வேண்டும்.வளமான தமிழகம் அமைய, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த, மின்சாரம், போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்ய, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

                                                           *********************************

பிப்ரவரி 14-ஆம் தேதி மோடி தமிழகம் வந்திருந்தார். அப்போது தனது இருபுறமும் நின்றிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் கையையும் மறுபுறத்தில் நின்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் கையையும் உயர்த்திப் பிடித்தார். இந்த இரண்டு கைகளும் ஊழல் கறை படிந்த கைகள். இந்த கைகளை உயர்த்திக் காட்டிய பிரதமர் மோடியின் கைகளோ காவியின் கைகள். கார்ப்பரேட்களின் கைகள். ஊழல் கறை படிந்த கைகளும் கார்ப்பரேட் கைகயும் இணைந்து விட்டது. இவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ஊழல் புகார்களிலிருந்து தப்பிக்கவே அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

நமது கூட்டணி தத்துவத்தின், கொள்கையின் அடிப்படையிலான கூட்டணி. நமக்கு தேவை ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, கொள்கையிலும் மாற்றமும் தான்.தமிழக மீனவர் பிரச்சனையைத் தீர்ப்பேன் என பிரதமர் மோடி கூறினார். ஜனவரி மாதம் நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மோடியால் குஜராத் மீனவர்கள் பிரச்சனைகளையும் தீர்க்க முடியவில்லை, தமிழக மீனவர்களின் பிரச்சனைகளையும் தீர்க்க முடியவில்லை.பெட்ரோல், டீசல், கேஸ் விலையினை உயர்த்தி சொந்த நாட்டு மக்களின் மீதே பொருளாதாரத் தாக்குதல் நடத்துகிறார் மோடி. தினம் தோறும் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. ஒரே மாதத்தில் கேஸ் விலை ரூ.100 வரை உயர்ந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்துள்ளது.தமிழக அரசு கல்வி உள்ளிட்ட மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் கொடுத்துவிட்டது. கொஞ்சம் விட்டிருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசு மத்திய அரசிற்கு கொடுத்திருக்கும்.கோரிக்கைகள், பிரச்சனைகள் எதையும் தட்டிகேட்க முதுகெலும்பு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது. நடைபெற உள்ள தேர்தலில் பாசிச பாஜகவையும், அடிமை அதிமுகவையும் தோற்கடிப்போம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

                                                           *******************************

“உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது பாஜக அரசு அடக்குமுறையைக் கையாண்டு அவர்களைச் சிறையில் அடைக்கிறது. குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடி 52 பேர் பலியாகியுள்ளனர். கடும் பனியில் வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் விவசாயிகளை, பிரதமர் கண்டுகொள்ளவில்லை. மத்திய பாஜக அரசு, பெரு நிறுவனங்களுக்கான அரசாக மாறிவிட்டது. ஒருபுறம் காவிரி பாதுகாப்பு மண்டலம் எனக் கூறிவிட்டு, மறுபுறம் ரசாயன மண்டலத்துக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். அடக்குமுறையைக் கையாளும் பாஜகவுக்கும், அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் அதிமுகவுக்கும் வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்”.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.,

                                                           *******************************

“திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு. இந்த கூட்டணியைச் சிதறடிப்பதற்காக அதிமுக-பாஜக சதித் திட்டம் தீட்டி வருகிறது. அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் பணிகள் இருக்க வேண்டும்.”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் , தொல்.திருமாவளவன் எம்.பி.,

                                                           *******************************

“நாட்டைக் கூறு போட்டு விற்பவர்களுக்கும், நாட்டைப் பாதுகாப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதி தான் இந்தத் தேர்தல் ஜனநாயகம் என்பது வீட்டு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ, வீட்டு விளக்காக நாம் இருந்து சர்வாதிகாரம் என்ற காட்டுத் தீ பரவாமல் தடுக்க வேண்டும்”.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா

                                                           *******************************

“மோடியின் தலையாட்டி பொம்மை எடப்பாடி. விவசாயிகளின் நண்பன் எனக் கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறார் எடப்பாடி. பாஜகவோடு அணி சேர்ந்துள்ள முதல்வர் ‘கூட்டு வேறு, கொள்கை வேறு’ என சிறுபான்மை மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். சிறுபான்மை மக்கள் ஏமாற மாட்டார்கள்”.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகி அப்துல்ரஹ்மான்

தொகுப்பு: ச.நல்லேந்திரன், படங்கள்: பொன்மாறன்