நோயாளியின் ரத்தம் வீணாகாமல் முதல் முறையாக இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனைபடைத்துள்ளனர். சென்னை அம்பத்தூர் அருந்ததிபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). கடந்த 2 வருடங்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் ‘ருமாட்டிக்’ காய்ச்சலினால், இதய வால்வு சுருங்கியிருப்பது தெரியவந்தது.
மேலும் அவர் ‘பாம்பே ஓ’ என்ற அரிய வகைரத்தப்பிரிவை சேர்ந்தவர். அரிதான ரத்தம் என்பதால் அவரது ரத்தத்தைப் பயன்படுத்தியே இதயஅறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவுசெய்தனர். இந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சைமேற்கொள்ள நன்கொடையாளர்கள் தேடிய போதுசென்னை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இருவர்மட்டுமே இருந்தனர். அவர்களிடம் நன்கொடையாகப் பெறப்பட்ட அரிய வகை ரத்தம் அவசரகால பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டு, அவருக்கு ரத்த போக்கு ஏற்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுதான் மிகப்பெரிய சாதனை.
அறுவை சிகிச்சையில் வெளியேறிய ரத்தம் சேமிக்கப்பட்டு, ‘டயனமிக் செல் சேவர்’ என்ற எந்திரத்தில் சிவப்பணுக்களைப் பிரித்தெடுத்து மீண்டும்நோயாளிக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலமாகநன்கொடையாகப் பெறப்பட்ட ரத்தம் பயன்படுத்தப்
படாமல், நோயாளியின் ரத்தமும் வீணாகாமல், அவருக்கு இதய வால்வு மாற்றுச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுமட்டுமல்ல இதே மருத்துவமனையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாட்டிலேயே முதன் முறையாக இரண்டு முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. நம்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே அறுவை சிகிச்சை இல்லாமல் இதயவால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் ஒரு மாற்று வால்வு பொருத்த ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும். ஆனால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு முதியவர்களுக்கும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளிலிருந்து காப்பாற்ற முடியாத நிலையில் கைவிடப்பட்ட நோயாளிகளையும் உயர்தர சிகிச்சையின் மூலம் இங்குள்ள மருத்துவர்கள் காப்பாற்றி வருகின்றனர். பெருந்தொற்றுக்காலத்தில் காசு பிடுங்கும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய செய்திகள்வந்த வண்ணம் இருந்தபோது அரசு மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோரைக் காப்பாற்றினர். அரசு மருத்துவமனைகளில் தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளைமேலும் மேம்படுத்திக் கொடுத்தால் அரசு மருத்துவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைப்பார்கள்.