சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்டஅகழ்வாய்வு பணிகள் பெயரளவிற்கே நடத்தப் படுகிறது. மிகவும் மந்தகதியில் பணிகள் நடைபெறுவதால் தமிழ் நாகரிகத்தின் தொன்மைக்கு சான்று பகரும் இந்த ஆய்வு திட்டமிட்டு முடக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
கீழடியில் மத்திய அகழ்வாய்வு துறை மேற்கொண்ட ஆய்வுப் பணியால் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தன. இந்திய வரலாற்றிற்கு மட்டுமல்ல, உலக வரலாற்றுக்கும் பெருமை சேர்க்கக் கூடிய ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. இந்தியாவின் பன்முகத் தன்மையையும், தமிழர்களின் ஆதி வரலாற்றையும் நிரூபிக்கக் கூடியபொருண்மை சான்றுகள் கிடைத்தன. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரமோடிதலைமையிலான மத்திய அரசு, ஆய்வை முடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்த ஆய்வில் முன்நின்ற மத்திய அகழ்வாய்வு அலுவலர் அமர்நாத்தை இடமாற்றம் செய்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கீழடியில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி இந்தப் பணியை முடித்துக் கொண்டனர்.
இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. நீதிமன்றம் தலையிட்டு ஆய்வினை தொடருமாறு கூறிய போதும், மத்திய அரசு அலட்சியமாகவே நடந்து கொண்டது. இந்த நிலையில் தொடர் நிர்ப்பந்தம் காரணமாக மாநில தொல்பொருள் துறை இந்த ஆய்வை தொடர்வதாக கூறியது. மத்திய அரசுமேற்கொள்ளும் அளவுக்கு விரிந்து பரந்த ஆய்வினை மாநில அரசு மேற்கொள்ள முடியாது.அதற்கான உபகரணங்கள் மற்றும் நிதி வசதி மாநில அரசுகளிடம் இருக்க வாய்ப்பில்லை. எனினும், மாநில தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளிலும் அடுத்தடுத்து பல்வேறு தொல் பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 13 ஆம்தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏழாம் கட்ட அகழ்வாய்வை துவக்கிவைத்தார். அதன் பிறகு கொந்தகை, அகரம் ஆகியதளங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டன. மணலூரில் அறிவிக்கப்பட்ட போதும், பணிகள் துவங்கவில்லை.
கீழடியில் 2 குழிகள் தோண்டப்பட்டு பணி பெயரளவிற்கு நடைபெறுகிறது. அதில் சிறிய அளவிலான மண்பானை முழுமையாக கிடைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில்பாசி மணிகள், சுடுமண் குடம், சுடுமண் குவளை கிடைத்துள்ளது.அடுத்து ஜூன், ஜூலை மாதங்களில் மழைக் காலம் துவங்கிவிடும் என்பதால் குழிகளை மூடி அகழ்வாய்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருக்கும். இவ்வளவு மந்தகதியில் இதுவரை பணிகள் நடைபெற்றதில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டதுபோன்று கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் துவங்கவில்லை. தமிழர்களின் வரலாற்றை கண்டறியும் ஆய்வில் மத்தியஅரசு வஞ்சகம் செய்கிறதென்றால், மாநில அரசும் அலட்சியம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. அடுத்து வரும் மே மாதத்திலாவது பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.