டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சி யளிப்பதாக உள்ளன. முறைகேடாக தேர்வு எழுதி தேர்வான சிலரை தகுதிநீக்கம் செய்வது, சில இடைத் தரகர்களை கைது செய்வது என விசாரணையின் திசை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் உயரதிகாரிகள் தொடர்பில்லாமல் இத்தகையதொரு வலைப்பின்னல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கம் போல அடி நிலையில் உள்ள சிலரை மட்டும் பலிகடாவாக்கி விட்டு உயர்மட்டத்தில் உள்ளவர்களை தப்பிக்க விட்டால் இத்தகைய முறைகேடுகள் தொடர்வதை ஒருபோதும் தடுக்க முடியாது. அடி முதல் நுனி வரை தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படும் போதுதான் இனிமேல் தேர்வு எழுதப் போகிற லட்சக்கணக்கான மாணவர்களு க்கு டிஎன்பிஎஸ்சி மீது நம்பிக்கை வரும்.
சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் சில குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த மையங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் நியமனத்தை ரத்து செய்து விட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி நிர்வா கம் கூறுகிறது. ஆனால் டிஎன்பிஎஸ்சி அலுவல கத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியல் பின்புலம் கொண்டவர்கள்- என மாநில அளவில் ஒரு மிகப்பெரிய வலைப்பின்னல் போல செயல் பட்டு தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிறது.
காவலர் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு போன்றவற்றிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என வெளியாகும் தகவல்கள், நேர்மையாக படித்து தேர்வு எழுதியவர்களை கலக்கமுறச் செய்கிறது. அதேநேரத்தில் முறைகேட்டைப் பயன்படுத்தி அரசுப் பணியில் எத்தனை கருப்பு ஆடுகள் நுழைந்துள் ளன என்பதும் மர்மமாகவே உள்ளது. குரூப்-4 தேர்வில் மட்டும்தான் முறைகேடு நடந்தது. மற்றவை அனைத்தும் முறையாக நடந்தது என்பதை நம்ப முடியாத நிலையே உள்ளது.
நாளுக்கு நாள் வேலையின்மை விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வேலை யின்மையை போக்குவதற்கான உருப்படியான திட்டம் எதுவும் மத்திய, மாநில ஆட்சியாளர்களி டம் இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து தனியார் மயமாக்கப்பட்டு வருவதால் அதில் கிடைக்கும் வேலைவாய்ப்பும் சுருங்கி வருகிறது. இந்நிலையில், அரசுப்பணிகளுக்கான அறிவிப்பு வரும் போது, நூற்றுக்கும் குறைவான இடங்களுக்கு கூட லட்சக்கணக்கில் விண்ணப் பிக்கும் நிலை உள்ளது. அதிலும் கூட சிலர் புகுந்து முறைகேடு செய்வது என்பது சகித்துக் கொள்ள முடியாத கொடுமையாகும்.
முறைகேடு நடந்த விதம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. முழுமையான, நேர்மையான விசாரணை நடத்துவதன் மூலமே முறைகேட்டின் மூலத்தைக் கண்டறிந்து எதிர் காலத்தில் தடுக்க முடியும். முடியவில்லை யென்றால் அரசுப்பணிகளை பகிரங்க ஏலத்தில் விடும் நிலை உருவாகிவிடும்.