17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள், பாஜகவிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு தீர்மானகரமான வெற்றியை அளித்திருக்கிறது. மோடிக்கு, மீண்டும் ஆட்சி அதிகாரத்தை அளித்திருக்கிறது. பாஜக, முந்தைய மக்களவையில் இருந்த இடங்களைவிட மேலும் கூடுதலாக இடங்களைப் பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் முன்பை விட அதிக இடங்களைப் பெற்றிருக்கின்றன.
மோடி ஆட்சியின் கீழ், விவசாய நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் சீர்கேடடைந்துவருதல், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருதல் என மக்கள் சந்தித்த உண்மையான பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு, மோடியை வல்லமை பொருந்திய நபர் என்று பாஜக தன்னுடைய பிரச்சாரத்தில் சித்தரித்ததும், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக விஷம் தோய்ந்த குறுகிய தேசியவாத வெறிக் கருத்துக்களை விதைத்ததும், பாலக்கோடு தாக்குதலும், வெற்றி பெற்றிருப்பதைப் போலவே தோன்றுகின்றன.
பாஜக, மோடி தலைமையின் கீழ், தேசியவாதம் என்கிற போர்வையில் நாட்டில் தங்களுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை சிறுபான்மையினருக்கு எதிராக மிகவும் கூர்மையான முறையில் தங்களுடைய பிரச்சாரத்தின் போது எடுத்துச் சென்றது. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து மட்டங்களிலும் பணத்தை வாரி இறைத்ததையும் பார்க்க முடிந்தது. பாஜக, தன்னுடைய சமூக வலைத்தளங்களுக்கான பிரச்சாரத்தில் பல நூறுகோடி ரூபாய்கள் செலவு செய்தது. மோடி ஒரு வல்லமை பொருந்திய தலைவர் என்றும், அவர் சர்வதேச வரைபடத்தில் இந்தியாவை ஒரு மதிப்புமிக்க நாடாக மாற்றுவார் என்றும், பாகிஸ்தானிலிருந்து வருகின்ற பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடுவார் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், ‘வாட்சப்’ மூலமாகவும் மிகவும் விரிவானமுறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தேர்தல் முடிவுகள், 2014 தேர்தலுக்குப்பின்னர் வலதுசாரிகள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்கள் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதன் சமிக்ஞையேயாகும். எதார்த்தமான நிலை என்னவென்றால், பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறாக்களால் ஏவப்பட்ட அரசியல் மற்றும் தத்துவார்த்தத் தாக்குதலுக்கு இடதுசாரிகள் உட்பட மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகள் ஒரு வலுவான சவாலாக உருவாகவில்லை என்பதேயாகும்.
இத்தேர்தலில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திய அம்சம் என்னவெனில், பாஜகவின் அத்துமீறல் நடவடிக்கைகள் அனைத்திற்கும் உதவும் வகையிலேயே தேர்தல் ஆணையத்தின் பங்களிப்பு அமைந்திருந்ததாகும். தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளையும் சமமாக நடத்தவில்லை என்பது மட்டுமல்ல; நரேந்திர மோடியும் அமித் ஷாவும் மேற்கொண்ட வெறிப்பேச்சுக்களை, சரியானவையே என்று நியாயப்படுத்தியதுமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் கடும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவிலும், மேற்கு வங்கத்திலும் ஆட்சியாளர்கள் நம்மீது ஏவிய பயங்கரமான வன்முறைத் தாக்குதல்கள், மிரட்டல்கள்களுக்கு எதிராகப் போராடித்தான் தேர்தலைச் சந்தித்தோம். இவற்றுக்கு எதிராகக் கடுமையான முறையில் கட்சி போராடியபோதிலும், கட்சியால் எங்கேயும் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்திருப்பதும் ஏமாற்றத்தை அளிக்கிறது, இதுவும் மிகப் பெரிய பின்னடைவுமாகும். தமிழ்நாட்டில் மட்டும்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஓர் அங்கமாகப் போட்டியிட்டு, போட்டியிட்ட இரு இடங்களிலும் சிறப்பான முறையில் வெற்றி பெற்றிருக்கிறது.
கட்சியின் அரசியல், தத்துவார்த்த மற்றும் ஸ்தாபனப் பணிகளை மீளவும் புதுப்பித்து வலுப்படுத்திடக்கூடிய விதத்தில் ஓர் ஒருங்கமைந்த உத்தியை வகுப்பதற்காக, இப்போது ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான தேர்தல் பின்னடைவு குறித்து கட்சி சுயவிமர்சன ஆய்வுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும்.
(மே 23, 2019) (தமிழில்: ச. வீரமணி)