headlines

img

அமெரிக்க வர்த்தகப் பயங்கரவாதமும் இந்தியாவின் மீதான தாக்குதலும்

அமெரிக்க வர்த்தகப் பயங்கரவாதமும்  இந்தியாவின் மீதான தாக்குதலும்

டிரம்ப் அரசு இந்திய ஏற்றுமதிகள் மீது 50% சுங்கவரி விதித்துள்ளது. இது வெறும் வர்த்தக நடவடிக்கை அல்ல - இது அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் புதிய கொடுங்கோன்மையின் அறிவிப்பு. இந்த முடிவு இந்தியாவின் பொருளாதார இறையாண் மைக்கு எதிரான நேரடி தாக்குதலாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை சரியாகவே “அமெரிக்கா வின் கொடூரமான உத்திகள்” என்று சாடியுள்ளது.

மேலும் “தன்னிச்சையான, சர்வாதிகாரத் தன்மை யுடையது” என்று சாடியுள்ளது. டிரம்ப்பின் இந்த நட வடிக்கை “பொருளாதார பலவந்தம்” என்று ராகுல் காந்தி சொன்னது போல, இது அமெரிக்காவின் வர்த்தகப் பயங்கரவாத உத்தியாகும். 

முதலில் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்காவின் அனைத்து கோரிக்கைகளையும் இந்தியா ஏற்கவில்லை என்பதற்காக 25% சுங்கவரி. மேலும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு தண்டனை யாக இன்னும் 25% சுங்கவரி. மொத்தம் 50% - இது ஒரு  நியாயமான வர்த்தக முறை அல்ல, இது பொரு ளாதார கொடுங்கோன்மையாகும்.'

அமெரிக்கா, ரஷ்யாவுடனான இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தை குறிவைக்கிறது. ஆனால் இந்தியாவின் எரிசக்தித் தேவைகள் உலகளாவி யவை. நமது எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா 40% பங்கு வகிக்கிறது. இதை நிறுத்தினால் இந்திய மக்க ளின் அன்றாட வாழ்வு நிலையே பாதிக்கப்படும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ள படி, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் “இந்தியா போன்ற நாடுகளை ரஷ்யாவுடனான வர்த்தக உறவைத் தொடர்வதற்காக கை முறுக்க முயற்சிக்கின்றன, அதே சமயத்தில் அவர்களே ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்கின்றனர்.” 

வேடிக்கை என்னவென்றால், அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் இறக்குமதி செய்கி றது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிவாயுவை இன்னும் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்கக் கூடாது என்கிறது. இது எந்த வகையான நீதி? அமெரிக்க ஏகாதிபத்தியவா திகளின் இந்த இரட்டை வேடம் உலக நாடுகள் முன்பு அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இதை “மிகவும் துரதிருஷ்டகரமானது” என்று கூறியுள்ளது.  ஆனால் இது போதுமா? இந்தியா வெறும் அறிக்கையுடன் நிறுத்திக் கொள்ள முடியாது. இதற்கு வலுவான பதில் தேவை.

இந்தியா தனது வர்த்தக கூட்டாளிகளை பன்முகப் படுத்த வேண்டும். சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும். அமெரிக்காவின் மீதான சார்பு நிலையை குறைக்க வேண்டும்.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி. உலகமயமாக்கல் காலம் முடிந்து, பொருளாதார தேசியவாதம் தலை தூக்கும் காலம் இது. இந்தியா இந்த புதிய சூழலுக்கு தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அமெரிக்காவின் பொருளாதார பலவந்தத்திற்கு இந்தியா தலை வணங்கக் கூடாது.