headlines

img

தாமதமான நடவடிக்கை... (கும்பமேளா கொரோனா)

ஹரித்துவாரில் ஏப்ரல் 30ந்தேதி வரை நடைபெறவிருந்த கும்பமேளா பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று துறவிகள் சபை இந்த முடிவை எடுத்துள்ளது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் என்ன பலன் ஏற்படும்என்று கூறமுடியாது. ஏனெனில் ஏற்கெனவேநடைபெற்ற மூன்றுகட்ட நீராடலில் லட்சக் கணக்கானோர் பங்கேற்று திரும்பியுள்ளனர். 

இந்த நிகழ்வில் பங்கேற்ற துறவிகள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்கெனவே தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது கூட மத்திய, மாநில அரசுகள் இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக சாமியார்கள் அமைப்பே முடிவெடுத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பாஜக  முதல்வர், துறவிகள் சபை ஒப்புக்கொண்டால் விழா ஒத்திவைக்கப்படும் என்று பரிதாபமாக கூறியிருந்தார். கும்பமேளாவுக்கு வந்து திரும்பிய பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் கும்பமேளா சென்று திரும்பியவர்கள் சோதனை செய்து கொள்ள வேண்டும்என்றும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளன. எனினும் கொரோனாவின் இரண்டாவது அலையை தீவிரமாக்குவதில் இந்த நிகழ்வுக்கு பெரும் பங்கு இருக்கும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். பல லட்சம் பேர் கூடும் நிகழ்வில் தனிமனித இடைவெளி என்பது சாத்தியமே இல்லை. முகக்கவசம் யாரும் அணிந்திருக்கவில்லை. மார்ச் 11ந்தேதி வரை மட்டும் சுமார் 37லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர். 

நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் 50ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். கும்பமேளாவுக்கு வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை கொண்டுவர வேண்டும் என்ற எந்தவொரு  நிபந்தனையும் பின்பற்றப்படவில்லை. பல லட்சம் பேர் கூடும்போதும் எந்த விதியையும் எங்களால் பின்பற்ற முடியவில்லை என காவல்துறை அதிகாரிகளே கைவிரிக்கின்றனர்.

முன்பெல்லாம் கும்பமேளா இரண்டு வாரங்கள்மட்டுமே நடைபெறும். தற்போது வர்த்தக நோக்கங்களுக்காக மூன்றரை மாதமாக நீட்டிக்கப்பட்டுவிட்டது என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே ஆபத்தை உணர்ந்து சாமியார்கள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கும்பமேளாவில் கூட்டம் கூடுவதை தவிர்த்திருக்கலாம். பல்வேறு விழாக்கள் அடையாளப்பூர்வமாக நடைபெறுவதுபோல இந்த விழாவையும் நடத்தி முடித்திருக்கலாம் என்று மத நம்பிக்கை கொண்டவர்கள் கூடகூறுகின்றனர். ஆனால் கொரோனா தொற்றில் முதல் அலையின் போது ‘நமஸ்தே டிரம்ப்’ என நிகழ்ச்சி நடத்திய மோடி அரசு, இதிலும் கவனம் செலுத்தவில்லை. 

கடந்த ஆண்டு முழுவதும் தில்லியில் நடைபெற்ற தப்ளீக் மாநாட்டை குறி வைத்து விஷமப்பிரச்சாரம் நடைபெற்றது. ஆனால் கும்பமேளாவில்குவியும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய,மாநில பாஜக அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. இப்போது கூட பிரதமர் மோடி மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரத்திலேயே குறியாக இருக்கிறார். கொள்ளை நோய் காலத்தையும் கூட தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் ஆட்சியாளர்களிடம் சிக்கிக் கொண்டு தவிப்பது மக்கள்தான்.