headlines

img

செங்கல் சூளைகளும் அம்பானி, அதானிக்கா?

செங்கல் சூளைகளுக்குத் தடை விதித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரிச் சாம்பல் கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 17ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், செங்கல் சூளைகளைத் தடை செய்துவிட்டு, அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி ஆகியோரின் நிறுவனங்கள் உற்பத்தி செய்திடும் நிலக்கரிச் சாம்பல் மூலம் உருவாக்கப்படும் கற்களைத்தான் வீடுகள், கட்டிடங்கள் கட்ட பயன்படுத்திட வேண்டும் என்று ஒரு கருத்துரு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றறிக்கை மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது.தேர்தல் நடக்கும்போது இத்தகையதோர் அறிவிக்கையை வெளியிடுவதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின், அதனை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, அதானி மற்றும் அம்பானி ஆகியோருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் தயாரித்திடும் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான சாம்பல் கற்களையே பயன்படுத்த வேண்டும் என மக்களிடையே திணிக்கும் விதமாகவே மத்திய அரசாங்கம் இந்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது என சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், ஒரு ஆட்சேபணைக் கடிதத்தை சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.

அரசின் இந்நடவடிக்கை மூலமாக நாடுமுழுவதும் செங்கல் சூளைகளில் வேலைபார்த்திடும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். இது நாட்டின் பொருளாதாரத்திலும் கடும் பாதிப்பினை ஏற்படுத்திடும்.செங்கல் சூளைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் இந்த மோசமான நடவடிக்கையை ஏற்கெனவே அமலில் உள்ள அரசாணைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் வெறும் நிர்வாக ஆணை மூலமாகவே கொண்டுவர மோடி அரசாங்கம் முயற்சித்து வருவது அப்பட்டமான மக்கள் விரோதச் செயலாகும்.இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளுக்கும் அங்குள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் உண்டு. எனினும் இதுதொடர்பாக அவர்களிடம் எவ்விதமான ஆலோசனைகளையும் கேட்காமலும், அவர் களின் கவனத்திற்கே கொண்டுவராமலும் இதனை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. ஆட்சி முடியும் இறுதி தருணத்திலும் கூடஅம்பானிக்காகவும், அதானிக்காகவும் துடிக்கிறது மோடி அரசாங்கம். இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த சிறு, குறு தொழில்களை அழித் தொழித்து மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாகநாசமாக்கிய மோடி அரசாங்கத்திற்கு வாக்குச்சாவடிகளில் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும் மக்கள், இந்த திட்டங்களுக்கும் சேர்த்து சாவுமணி அடிப்பார்கள் என்பது உறுதி.