headlines

img

எது தமிழகத்துக்கு பாதகமோ, அது இந்தியாவுக்கும் பாதகம்!

முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரத்தை உற்றுப்பார்க்கிறபோது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே மாதிரியான ஒத்துப்போகக்கூடிய அரசு இருக்க வேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். அப்போது தான் இணைந்து நாட்டை வளர்க்க முடியும் என்று சொல்கிறார். இதே 2014 தேர்தலில் அன்றைய முதலமைச்சராக இருந்தஅதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மோடியுடன் எந்தவிதமான கூட்டணியும் இல்லை என்று அறிவித்தார். மோடியா, லேடியா என்று மக்கள் மத்தியிலே கேட்டு, லேடி என்கிற ஆதரவை அவர் பெற்றார்.


ஜெயலலிதாவின் வாரிசுகளல்ல ஆர்எஸ்எஸ்ஸின் வாரிசுகள்



அவருடைய மரணம் எடப்பாடியை முதலமைச்சராக்கியது. நான் கேட்கின்றேன் எடப்பாடி அவர்களை, இந்த ஆட்சியில் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் மக்களுக்கும் உதவி செய்யக்கூடிய கருத்து என்ன? விவசாயத்தை பாதுகாக்க முடிந்ததா? தொழில்களை பாதுகாக்க முடிந்ததா? சிறுதொழில், வணிகத்தை பாதுகாக்க முடிந்ததா?ஜிஎஸ்டி வரி விதிப்பை ஜெயலலிதா எதிர்த்தார். நீங்கள் ஆதரித்தீர்கள். நீட் தேர்வுக்கு தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய பாஜக அரசு மதிக்கவில்லையே. ஜனாதிபதிக்கே அனுப்பவில்லையே. எப்படி நீங்கள் அது இரண்டும் ஒன்று என்று சொல்கிறீர்கள்?தலைமைச் செயலக அலுவலகத்திலேயே சோதனை செய்தார்களே. கருப்புப்பணம் என்ற பெயரால் சேகர் ரெட்டியை பிடித்தார்களே. சேகர் ரெட்டிக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நல்ல உறவுஇருப்பதை படம் போட்டு காட்டினார்களே. மத்தியஅரசின் மிரட்டல்தான் உங்களை அடக்கி வைத்திருக்கிறதே தவிர,நீங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் அல்ல. நீங்கள் ஆர்எஸ்எஸ்ஸின் வாரிசுகளாக செயல்படுகிறீர்கள். இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து. தேர்தலுக்குப் பிறகு உங்களுடைய தவறை உணர்வீர்கள். மக்கள், உங்களை மிகவும் கடுமையாக தண்டிக்கப் போகிறார்கள். 


வலதுசாரிப் போக்கு...


நம்முடைய ஜனநாயக நாட்டில் இதுவரை 16 நாடாளுமன்றத் தேர்தல், அதையொட்டி பல சட்டமன்றத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலும் அதற்குரிய முக்கியத்துவத்துடன் நடந்திருக்கிறது என்பதை வரலாற்றை திருப்பிப் பார்க்கக் கூடியவர்கள் உணர முடியும். இந்திய நாட்டின் வளர்ச்சியில் கடந்த 16 ஆட்சிகளில், பல்வேறு ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த கொள்கைகள், சில மக்களுக்கு உதவின. பல மக்களுக்கு முறையாக உதவியாக இல்லை. ராஜீவ் காந்தி ஒரு முறை கூறுகையில், ஒரு ரூபாய் மக்களுக்கு நிதி ஒதுக்கினால், 15 பைசாதான் மக்களுக்குச் செல்கிறது என்று குறிப்பிட்டார். இத்தகைய வளர்ச்சி இல்லாத பின்னணியில் வலதுசாரி போக்கும் நமது அரசியலில் வளர ஆரம்பித்தது. அத்தகைய வலதுசாரி போக்கு வளராமல் இருப்பதற்கு மகாத்மா காந்தியினுடைய அணுகுமுறைகள் கடந்த காலத்தில் உதவி செய்தன. இன்றைய சூழ்நிலையில் மண்வளம் வலதுசாரிகள் பயன்படுத்தக்கூடிய முறையில் மாறுகிற போது, ஆர்எஸ்எஸ் இயக்கம் தனக்கென்று சில அரசியல் பகுதிகளை, 70-க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளை உருவாக்கியது. அதில் ஒன்று ஜனசங்கம். அந்த ஜனசங்கத்தினுடைய இன்றைய பெயர்தான் பாரதிய ஜனதா கட்சி. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரசை போல, கம்யூனிஸ்ட் கட்சியை போல, திமுக போல ஒரு அரசியல் கட்சி மட்டும் அல்ல.இதரகட்சிகள் கூடி முடிவெடுப்பது போல் பாரதிய ஜனதா கட்சியால் முடிவெடுக்க முடியாது. ஆர்எஸ்எஸ்எஸ் இயக்கம் என்ன சொல்கிறதோ, அதுதான் அதற்கு சித்தாந்த வழிகாட்டி, அரசியல் வழிகாட்டி, சமூகப் பிரச்சனைகளில் அதுதான் வழிகாட்டி. 


வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை


பாரதிய ஜனதா கட்சி 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது, பொருளாதார ரீதியாக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது.குறிப்பாக அடித்தட்டு மக்களை கவரக்கூடிய ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது.ஆனால் எதுவும் நிறைவேறவில்லை. எதுவும் நிறைவேறாத பின்னணியில் இந்த 5 ஆண்டுகளில் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை, கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகமாகி, வறுமைக்கோட்டிற்குகீழே உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.ஒன்று புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. இரண்டு, 70சதவீத கிராமப்புற பொருளாதாரம் பலவகையிலும் நாசமடைந்து, மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது.அரசு கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தது என்று பார்த்தால், உலகமே வியக்கக்கூடிய அளவுக்கு, தவறு தவறு என சுட்டிக்காட்டக்கூடிய அளவுக்கு, ஐஎம்எப், உலக வங்கி போன்ற அமைப்புகளே ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து, 88 சதவீத பணப் புழக்கத்தையே பறித்துவிட்டது.அது நாட்டின் பல தொழில்களை அழித்துவிட்டது. மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைத்துவிட்டது. அதையொட்டி ஜிஎஸ்டி என்கிற புதிய வரிமுறையை கொண்டுவந்ததன் விளைவு, அத்தியாவசியப் பொருட்கள் அத்தனையையும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவந்தது.


ஊறுகாய்க்கும் ஜிஎஸ்டி


உதாரணமாக ஓட்டலுக்குச் சென்று இட்லி சாப்பிட்டால் கூட ஜிஎஸ்டி வரி உண்டு. முறைசாரா உழைப்பாளி மக்கள் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சி பார்ப்பதற்கான கட்டணம் ஜிஎஸ்டியுடன் இணைந்து, 110 ரூபாயிலிருந்து 300 ரூபாய், 500 ரூபாய் ஆகிவிட்டது. கிராமப்புறங்களில் ஊறுகாய் தயாரிக்கக்கூடியவர்களுக்கும் ஜிஎஸ்டி வரி உண்டு என்று சொல்லிவிட்டது. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் சேர்ந்து செய்யும் ஊறுகாய்க்கும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ள நிலையில், சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பின்னணியில் 17-வது நாடாளுமன்றத் தேர்தலை பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மதவாதம், வகுப்புவாதம் அதிகமாகிவிட்டது. அதாவது ஆர்எஸ்எஸ் லட்சியமான சாதியவாதத்தை பாஜக ஊக்குவிக்கிறது. சாதியை ஒழிக்க வேண்டும் என்று போராடக்கூடிய, சாதியின் தீவிரவாதத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று போராடக்கூடிய இடதுசாரிகள், திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களின் கருத்துக்கு மாறான ஒரு கருத்தை, சாதிகள் இருக்க வேண்டும், வர்ணங்கள் இருக்க வேண்டும். வர்ணங்களுக்கு வெளியே இருக்கக்கூடிய தலித்துக்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்கிற அந்த அணுகுமுறையை கொண்டுவந்தார்கள். அது நாடு முழுவதும் மதக்கலவரத்தையும் சாதிக்கலவரத்தையும் உருவாக்கியது. யார் என்ன உண்ண வேண்டும்? இது ஒரே நாடு என்கிற கருத்தையும் பரப்ப ஆரம்பித்தார்கள். 



மாநிலங்களவையே இருக்காது


நாடு என்பதே 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் உருவானது. இந்தியா ஒரே நாடு அல்ல. இந்தியா பல கலாச்சாரங்களை, பல மொழிகளை, பல உணவுப்பழக்கங்களை கொண்ட நாடு. இந்த நாட்டில் ஒரே நாடு என்று சொல்வது ஏற்றுக்கொள்ளப்படுமானால், இன்று இருக்கக்கூடிய மாநிலங்களவையே இருக்காது. மாநிலங்களவை என்பதே பெடரல் சிஸ்டத்தின் ஒரு அமைப்பு மாநிலங்களவையை கலைத்துவிட்டால் இந்தியா என்பதே இல்லை. பாரத் என்கிற ஒரு நாடு எங்கிருந்து வருகிறது? இன்றைய மாநிலங்களவையின் காரணமாகத்தான் வருகிறது. அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலங்களவையை செயலிழக்க வைத்துவிட்டார் மோடி. தன்னிச்சையாக, சுயஉரிமையுடன் செயல்படக்கூடிய நீதிமன்றம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சிபிஐ, தேர்தல் ஆணையம், தணிக்கைக்குழு (சிஏஜி) பாதிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்குள்ளும் ஆர்எஸ்எஸ் நபர்கள் நுழைந்துவிட்டார்கள். ஆட்சியாளர்களின் கொள்கைகளை அமல்படுத்துவதுதான் இந்த அமைப்புகளின் கொள்கை என்று சொல்லக்கூடிய அளவுக்கு போய்விட்டது. சுயதன்மையை இழந்திருக்கக்கூடிய இந்த பின்னணியில், நாடு எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி அமலாக்கியிருந்தால், கிராமப்புற விவசாயம் பாதுகாக்கப்பட்டிருக்கும்; உற்பத்தி பெருகியிருக்கும்; விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்திருக்கும். வாங்கும் சக்தி கொஞ்சம் அதிகரித்திருக்கிற போது, அந்த வாங்கும் சக்தியின் மூலம் பொருளாதாரம் வளர்ந்திருக்கும். இன்றுபொருளாதாரம் ஸ்தம்பிக்கிறபோது, போலி புள்ளி விபரகணக்குகளை மத்திய பாஜக அரசு கொடுக்க ஆரம்பிக்கிறது. எல்லாவிதத்திலும் போலித்தனமான ஆட்சியாக அமைந்திருப்பதுதான் பாஜகவின் தேர்தல் அறிக்கை.


மன்னர்களை பாதுகாக்கச் சொன்ன கட்சி


ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அதுமட்டுமல்ல, பிரதமராக இருந்த இந்திரா காந்தி மன்னர் மானியத்தை ஒழித்தபோது, மன்னர் மானியம் இருக்க வேண்டும், மன்னர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்ன ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு அரசியல் கட்சியாகத்தான் பாரதியஜனதா கட்சி உள்ளது. மன்னர்கள் இருக்க வேண்டும் என்று சொன்னாலே ஜனநாயகம் இல்லை என்று அர்த்தம். இப்படிப்பட்ட ஒரு கட்சி, மக்களின் அடித்தளத்தையே, அரசியல் சட்டத்தையே, பெடரல் சிஸ்டத்தையே பாதிக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த தேர்தல் வருகிறது.ஆகவே தான் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியைஉருவாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, ஒரு மாற்றுக்கொள்கையின் அடிப்படையில் ஒரு காரியத்தை செய்ய வேண்டியுள்ளது.


நீட் தேர்வு வழக்கில் தமிழக அரசு வாதாடவில்லை


பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த மருத்துவக்கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வு தமிழக மாணவர்களை மிகவும் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்டேட் போர்டு மூலம் படித்த மாணவர்களின் பிளஸ்-2 வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை கணக்கிலெடுக்காமல், இதற்கு அப்பாற்பட்டு பாடத்திட்டத்தை கொண்டுவந்து, அந்த பாடத்திட்டத்தில் பரீட்சை எழுத வேண்டும் என்று சொல்கிறபோது, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட 24 ஆயிரம் மாணவர்கள் தேர்விலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். நீட் தேர்வு முறையே சற்று மாறுபட்டது.இவற்றில் தமிழ் மொழி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளில் 49 கேள்விகள் முற்றிலும் தவறானதாக இருந்தன. இந்த வினாக்களால் தடுமாறிப்போன தமிழக மாணவர்கள் தோல்வியடைந்தார்கள். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினேன். இதற்கு நியாயம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மாணவர் அமைப்புகள், டெக் பார் ஆல் என்கிற என்ஜிஓ அமைப்பு இணைந்துதான் ஒரு வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடுத்து நடத்தினோம். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சாதகமான தீர்ப்பு வந்தது. நீட்தேர்வில் தவறாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் பலர் செல்போனில் என்னிடம் நன்றிகளை தெரிவித்தனர். ஆனால் மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் எந்த வாதமும் செய்யவில்லை. எந்த வழக்கறிஞரையும் நியமிக்கவில்லை.இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றவுடன், அங்கும் மாநில அரசு வரவில்லை. உண்மையிலே மாநில அரசு வர வேண்டும் என்று விரும்பினோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு வரவேண்டும் என்று எதிர்பார்த்தும் வரவில்லை. உச்சநீதிமன்றம் நியாயமான நாணயமான தீர்ப்பை அளிக்கவில்லை. அதற்கும் சமூக நலனில் அக்கறை இல்லை என்கிற முறையில்தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது. அனைத்துக்கட்சிகளும் எதிர்த்து இயக்கம் நடத்தின. அந்த தீர்ப்பால் தமிழக மாணவர்களும் மக்களும் ஏமாற்றமடைந்தனர். ஸ்டேட்போர்டில் படிக்கக்கூடிய மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்காலம் இல்லை என சிந்திக்கக்கூடிய நிலை வந்தது. 


தமிழகத்தை மதிக்காத பாஜகவுடன் அதிமுக கூட்டு


நீட் தேர்வு தேவையில்லை என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் எப்போதாவது தான் ஒருமனதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது. தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுகிறது என்றால் அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் சார்பாகத் தான் என்று பொருள். இந்தத் தீர்மானம் ஜனாதிபதிக்கு சென்றதா இல்லையா என்பதை அறிய ஜனாதிபதிக்கு நான் கடிதம் எழுதினேன். நான்கே நாளில் ஜனாதிபதியிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. தமிழ்நாட்டில் இருந்து அப்படி ஒரு எந்த தீர்மானமும் வரவில்லை என்றும் இதுகுறித்து உங்கள் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புகிறோம் என பதில் வந்தது. உள்துறை அமைச்சகத்திடம் கேட்டபோது அவர்கள் சிரித்தார்கள். அப்படி என்றால் மோடி அரசு தமிழக சட்டமன்றத்தையும் தமிழக மக்களின் கருத்தையும் மதிக்கவில்லை என்று பொருள். அப்படி மதிக்காத கட்சியுடன் தான் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. உண்மையிலேயே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் ஒரு கோபம் வரவேண்டும். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மோடி அரசு நிறைவேற்றவில்லையே. அதைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டாமா. தேர்தல் பிரச்சாரத்தில் இதனை பேச மறுக்கிறார். 


நீட் தேர்வு ரத்து


அப்படி மறுத்த நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் எந்தெந்த மாநிலங்கள் நீட் தேர்வை விரும்பவில்லையோ அந்த மாநிலங்களுக்கு பொருத்தமான வேறு ஒரு அணுகுமுறைப்படி தேர்வு நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒன்று. அடுத்து தமிழக மக்களை பாதித்த விஷயம் ஜல்லிக்கட்டு. ஏராளமான மக்கள் குறிப்பாக தென் மாநில மக்கள் பார்வையிடுகிற அலங்காநல்லூர் உள்ளிட்டு எழுச்சியாக தொன்றுதொட்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டை தடை செய்தது. இது குறித்து நான் பிரதமரை நேரில் சந்தித்து பேசினேன். தடையை நீக்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் பிரதமர் மோடி தடையை நீக்குவதற்கு இணங்கவேயில்லை. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அடுத்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று கூறினார். ஆனால் அது நடக்கவில்லை. நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிப்போம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அவர் கூறியதும் நடக்கவில்லை. பாஜகவினர் தமிழகத்தையும் மதிப்பதில்லை. தமிழகத்திலிருந்து சென்றுள்ள தமிழக மத்திய அமைச்சர்களையும் மதிப்பதில்லை. அப்படி ஒரு ஆட்சி மத்தியில் நடக்கிறது. இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொள்கையாகும்.


வரவேற்கக்கூடிய வாக்குறுதிகள்


காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் வரவேற்கக்கூடியவை. 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இருந்தபோது உருவாக்கப்பட்ட பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளன. அது உருவாக்கப்பட்டபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள் இடதுசாரிகள். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் நூறுநாள் வேலைத்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறியது. இதனை அன்றைய திட்டக்கமிஷனும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நூறுநாள் வேலைத்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக வாதிட்டது.நவீன தாராளமயம், சந்தை பொருளாதாரம் அமலாகிறதுபோது அதன் விளைவு என்னவென்று கேட்டால், வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களின் எண்ணிக்கைஅதிகமாகும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காது.முதலாளித்துவம் வளருகிறதுபோது பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,நாட்டில் மிகப்பெரிய கலவரங்கள் உருவாகும்அவர்களுக்குவேலைவாய்ப்புகளை கொடுக்க வேண்டும். வேலையில்லாத காலத்தில் அவர்களை பாதுகாக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில்25 சதவீதம் இடம்கொடுக்க வேண்டும் என்பதையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வேண்டும் என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி கூறியதுதான்.இதனை அன்று எதிர்த்தவர்கள், பின்னர் நிர்ப்பந்தத்தின்பேரில் அதனை கொண்டுவந்தவர்கள், இன்று அதனை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கப்பட கூடியது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் பேசியபோது, இதுபோன்ற விஷயங்களை கொண்டுவந்ததற்காக அவரை நான் பாராட்டினேன். நீட் தேர்வு போன்ற தமிழக மக்களுக்கு, இதர பகுதி மக்களுக்கு ஒத்துவராத படிப்பு முறையை, தேர்வு முறையை மாற்ற வேண்டும். பல ஆண்டுகளாக தமிழை படித்துத்தான் பிரபலமான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறார்கள். இவர்கள் பல்வேறு நாடுகளில் மருத்துவ மேற்படிப்பையும் முடித்திருக்கிறார்கள். 


குஜராத்தின் பிரதமர்


ஆனால் திடீரென்று ஒரே நாடு, ஒரே கல்வி என்று எல்லாவற்றையும் மாற்றக்கூடிய நிலை வருகிறபோது, ஆரம்பக்கல்வியை மாற்றாமல், உயர்கல்வியை மாற்றாமல் திடீரென்று மாற்றுவது என்பது மிகப்பெரிய சேதத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்திவிடும். எனவே இவைகளை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால், மத்திய, மாநில அரசுகளை மாற்ற வேண்டும். 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிகள் உதவி செய்வார்கள். மத்தியில் மீண்டும் பாஜக வரக்கூடாது என்பதை தமிழக மக்கள் உறுதி செய்ய வேண்டும். இது ஒரு கட்சி பிரச்சனை அல்ல. அதிமுக வாக்காளர்களோ, இதர கட்சிகளின் வாக்காளர்களோ, ஓரளவு சிந்திக்கக்கூடிய பாஜக வாக்காளர்களோ, சிந்திக்கக்கூடிய ஒன்று, எது தமிழகத்திற்கு பாதகமாக இருக்கிறதோ, அது இந்தியாவிற்கும் பாதகமாக இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், கடந்த 5 ஆண்டுகளில் மோடி இந்தியாவின் பிரதமராகவே இல்லை. அவர் குஜராத்தின் பிரதமராக இருந்தார். அம்பானிக்கும் அதானிக்கும்தான் ஏராளமாக தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்தார். மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம்இவர்களைத்தான் அழைத்துச்செல்வாரே தவிர, பத்திரிகைநிருபர்களை எப்போதும் அழைத்துச் செல்வதில்லை. நாட்டை பாதுகாக்கிறேன் என்று சொல்லி, நாட்டை பாதுகாக்கவில்லை. 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தபோது, தீவிரவாதிகளுக்கு செல்லும் பணம் தடுக்கப்படும் என்று சொன்னார். ஆனால் மோடியின் ஆட்சியில்தான் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேர் கொலை செய்யப்பட்டார்கள். இவரால் எல்லையை பாதுகாக்கவும் முடியாது.அண்டை நாடுகளுடன் நல்ல உறவும் கிடையாது.உள்நாட்டிலே இப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய ஒருவரை, இப்படிப்பட்ட கட்சியை மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சினுடைய கருத்து. திமுக தலைமையில் உருவாகியிருக்கக்கூடிய கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



சந்திப்பு : மதுக்கூர் இராமலிங்கம், எஸ்.உத்தண்ட்ராஜ்