ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்திகள் முக்கிய மானவை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை துண்டு துண்டாக சிதைத்து, அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்த பாஜகவுக்கு அந்த மாநில மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங் களுக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் பாஜக 29 இடங்களிலும் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் ஜம்மு -காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட குல்காம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் முகமது யூசுப் தாரிகாமி 5ஆவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று சரித்திரச் சாதனை நிகழ்த்தியுள்ளார். அவருடைய வெற்றியைத் தடுப்பதற்காக பல்வேறு முனைகளில் பின்னப் பட்ட சதிவலைகளை கிழித்தெறிந்து தோழர் முகமது யூசுப் தாரிகாமி வெற்றிபெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 7ஆயிரத்து 838 வாக்குகள் வித்தியாசத்தில் தாரிகாமி வாகை சூடியுள்ளார். அவருடைய வெற்றியைத் தடுக்க மத அடிப்படைவாத சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பழிவாங்கும் வகையில் நடந்துகொண்ட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ள னர். இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை உடைத்ததையும், அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததையும் அந்த மாநில மக்களே ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று பாஜக பீற்றிக் கொண்டிருக்கக்கூடும்.
இனியாவது ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்படுவதை உறுதி செய்வதோடு, பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை உடனடியாக ஜம்மு-காஷ்மீருக்கு திரும்ப வழங்க வேண்டும். ஆயுதங்களின் மூல மாக மட்டும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதோ, பயங்கரவாதிகளைத் தனிமைப் படுத்துவதோ இயலாது. மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அமை திக்கும், வளர்ச்சிக்கும் திறவுகோலாகப் பயன்படுத்த ஒன்றிய அரசு முன்வரவேண்டும்.
ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் இந்த முடிவினை ஏற்க முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் இதை உடனடியாக மறுத்த போதும் விடையளிக்க வேண்டிய பல்வேறு கேள்விகள் உள்ளன. எனினும் ஹரியானா தேர்தல் முடிவு மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பல்வேறு படிப்பினை களைத் தந்துள்ளது என்றே கொள்ள வேண்டும்.