headlines

img

மன்னிக்க முடியாது

ஆண்டின் இறுதி நாட்களில் சிலருக்கு திடீர் ஞானோதயம் உருவாவது உண்டு. அதுபோல மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் அந்த மாநிலத்தில் நிகழ்ந்து வரும் தொடர் வன்முறை க்கு மன்னிப்புக் கேட்பதாகக் கூறியுள்ளார். 

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளு க்கு மேலாக வன்முறை  நடந்து வருகிறது. இரட்டை இன்ஜின் ஆட்சி நடந்தால்தான் மாநில வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என பிரதமர் மோடி அவ்வப்போது தேர்தல் பிரச்சாரத் தின் போது கூறுவார். ஆனால் மத்தியிலும் மணிப் பூரிலும் நடந்து வரும் பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி வன்முறையை முடிவுக்கு கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைவிட இவர்களுடைய அதிகார ஆதிக்க வெறியின் காரணமாகவே மணிப்பூரில் பற்றிய தீ விடாமல் மக்களை கொன்று குவித்துக் கொண்டி ருக்கிறது. 

உலக நாடுகளுக்கெல்லாம் உலா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தில் காலடி கூட எடுத்து வைக்கவில்லை. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒருமுறை எட்டிப்பார்த்ததோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாகக் கருதிவிட்டார். 

மணிப்பூரில் கலவரத் தீயை பற்ற வைத்ததே பாஜகவின் பிளவுவாத அரசியல்தான். அனைத் தையுமே மதவாத கண்ணோட்டத்துடன்  அணு கும் அந்தக் கட்சி திட்டமிட்டு இரு பிரிவு மக்களி டையே பகைத் தீயை பற்ற வைத்தது. எரியும் வரை  லாபமென்று அமைதியை திரும்பச் செய்வதற்கு உருப்படியான முயற்சி எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. 

பொறுப்புணர்ச்சியோ, நாண உணர்ச்சியோ சற்றும் இல்லாத மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் ஒருவரையொருவர் மன்னித்து கடந்த கால தவறுகளை மறந்து புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என இலவச ஆலோசனை வழங்கி யுள்ளார். இருபிரிவு மக்களிடையே அன்பும், சமா தானமும் நிலவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஓராயிரம் முறை மன்னிப்புக் கேட்டாலும் மன்னிக்கப்படக் கூடாதவர் மணிப்பூர் முதல்வர். அவர் தமது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் பதவிக்காக எதையும் செய்யும் பாஜக பரிவாரத்தை சேர்ந்தவரிடம் அத்தகைய தார் மீக உணர்வு எதையும் எதிர்பார்க்க முடியாது. 

மணிப்பூர் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கை யை தொலைத்து இன்னலில் உழல்கின்றனர். வன்முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். வாழ்க்கைக் காக போராடுவதைவிட உயிர்பிழைக்க ஓடி ஒளி வதே மணிப்பூர் மக்களின் அன்றாட அலுவலாகி விட்டது. புத்தாண்டு வாழ்த்து கூறுவது போல ஒவ்வொரு ஆண்டும் மன்னிப்புக் கேட்பதால் மட்டும் தனது கரங்களின் ரத்தக்  கறையை பாஜக முதல்வரால் கழுவிக்கொள்ள முடியாது. மணிப்பூர் மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் முழுமையும் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.