headlines

img

வன்மத்தின் உச்சம்!

பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நிதேஷ் ரானே கேரளாவை ஒரு ‘மினி பாகிஸ்தான்’ எனக் கூறியிருக்கிறார். இது கடும் கண்டனத்திற்கு உரியது. 

“கேரளாவில் இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் குறிவைக்கப்படுகின்ற னர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலத்தான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர். தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால்தான் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான் போன்றது. அதனால்தான் ராகுல் காந்தியும், பிரியங்காவும் அங்கு வெற்றிபெற்ற னர். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரி விப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்க ளித்துள்ளனர்” என நிதேஷ் ரானே வாய் கூசாமல் விஷத்தைக் கக்கியிருக்கிறார்.

கேரளம் மீது சங்பரிவார் அமைப்புகளுக்கு இருக்கும் வன்மத்தின் உச்சம்தான் அமைச்சர் ரானே பேச்சின் வெளிப்பாடு. அதனால்தான் தற்போது வரை இதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வில்லை. இது நிதேஷ் ரானேவின் பேச்சா அல்லது கேரளம் மீதான பாஜகவின் கொள்கை நிலையா  என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். இது கேரள மாநிலத்தை இழிவுபடுத்துவது மட்டு மல்ல, இந்தியாவையே அவமானப்படுத்தும் செயல் ஆகும். பாஜக மற்ற மாநிலங்களைப்போல் கேரளத்திலும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட நீண்ட காலமாக முயன்று வருகிறது. ஆனால் கேரள மக்கள் அதனை முறியடித்து வருகின்றனர்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்றி ருக்கும் சங்பரிவார் கூட்டம் கேரள மக்கள் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி வீசுகிறது. ராகுல் காந்திக்கும், பிரியங்காவிற்கும் வாக்களிப்பவர்கள்  அனைவரையும் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என நிதேஷ் ரானே கூறியிருக் கிறார். அப்படியென்றால்  அயோத்தி தொகுதியில் கூட பாஜகவை மக்கள் தோற்கடித்துள்ளனர். அங்கிருப்பவர்கள் அனைவரும் தீவிரவாத ஆதர வாளர்களா?  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 36 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. பாஜகவை நிராகரித்து 64 சதவிகிதம் பேர் வாக்க ளித்துள்ளனர். அப்படியென்றால் அந்த 64 சதவிகி தம் பேரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களா? 

கேரளம் இன்றளவும் மதநல்லிணக்கத் திற்கு மகுடமாக விளங்குகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு அமைச்சர்தான் நிதேஷ் ரானே. ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு மாநிலத்திற்கு எதிராக வெறுப்பை உமிழ்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கடும் கண்டனத்திற்குரி யது. இனியும் நிதேஷ் ரானே அமைச்சர் பதவியில் நீட்டிக்க எந்த தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை. உடனே அவரை பதவி  நீக்கம் செய்ய வேண்டும்.