headlines

img

கிராமப்புற வறுமையை மேலும் ஆழமாக்கும் மோடி அரசு

கிராமப்புற வறுமையை மேலும் ஆழமாக்கும் மோடி அரசு

நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது: விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு இருந்த போதிலும், அரசாங்கம் முக்கியமான ஊதிய திருத்தங்களையும், மாநிலங்களுக்கான நிதி விநியோகங்களையும் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது.

 ஊதிய கணக்கீட்டின் அடிப்படையாக விவசாய தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (CPI-AL) போதுமானதாக இல்லை. நாடாளுமன்றக் குழு சரியாகக் குறிப்பிட்டபடி, இந்தக் குறியீடு ஊரக குடும்பங் களில் பணவீக்கத்தின் உண்மையான தாக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில் தோல்வியடைகிறது. அத்தியாவசியப் பொருட் களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இத்திட்டத்திற்கான ஊதியங்கள் தேக்கநிலையில் உள்ளன, இது ஊரக தொழிலாளர்களை பொருளாதார பாதிப்புக்கு இன்னும் ஆழமாக தள்ளுகிறது.

இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ₹86,000 கோடியில், கணிசமான பகுதி முந்தைய ஆண்டு களின் நிலுவைகளை தீர்க்க திசைதிருப்பப் பட்டது, நடப்பு நிதியாண்டிற்கு ₹62,533.73 கோடி மட்டுமே மீதமுள்ளது. இது ஊரக வறுமையை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டத்தில் வேண்டுமென்றே செய்யப்படும் நிதி நெருக்கடியை குறிக்கிறது.

மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்களுக்கு மார்ச் 2022 முதல் நிதி நிறுத்தம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் மேலும் தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும்:  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே சீரான ஊதிய விகிதத்தை  நிறுவுதல்; யதார்த்த நிலையை துல்லியமாக பிரதிபலிக்க ஊதிய கணக்கீட்டு முறையை திருத்துதல்; ₹23,446.27 கோடியாக இருந்த நிலுவை பொறுப்புகள், ₹12,219.18 கோடி ஊதிய நிலுவை கள் உட்பட அரசு தர வேண்டும; நீதித்துறை பரி சீலனையில் உள்ள விஷயங்கள் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் உரிய நிலுவைகளை விடுவித்தல்.

 அடிப்படையில், ஊரக வேலைத் திட்டமானது வெறும் நலத்திட்டத்தை விட அதிகமானது - இது  அடிப்படை வாழ்வாதாரத்திற்காக அதை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு வாழ்க்கை பாதுகாப்பு. ஊதிய திருத்தங்களை தாமதப்படுத்துவதன் மூலமும், நிதிகளை நிறுத்தி வைப்பதன் மூலமும், அரசாங்கம் வெறுமனே நிர்வாக பொறுப்புகளை புறக்கணிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் துன்பங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது.