headlines

img

அறிவியலை அவமதிப்பதா?

பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவன மான திவ்யா பார்மஸி வெளியிட்ட போலி விளம்பரங்கள் தொடர்பாக போலிச்சாமியார் பாபா ராம்தேவுக்கு பாலக்காடு மாவட்ட நீதி மன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஆயுர் வேத நிறுவனம் என்று பெயர் வைத்துக் கொண்டு மருத்துவ அறிவியலுக்கு புறம்பான பல விளம்ப ரங்களை பதஞ்சலி நிறுவனமும் அதனுடைய துணை நிறுவனமும் வெளியிட்டு வருகிறது. 

ஏற்கெனவே இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் பதஞ்சலி  போலி விளம்பரங்களுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் செய்தித்தாள்களில் மன்னிப்புக் கோரும் பகிரங்க விளம்பரத்தையும் வெளியிட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி என்பவர் பசுவின் சிறுநீரான கோமி யத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு  என்று பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாட்டு பொங்க லன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய தந்தைக்கு காய்ச்சல் அடித்தபோது மருத்துவரிடம் போக நினைத்ததாகவும், ஆனால் ஒரு சந்நியாசி கோமியத்தை கொடுக்குமாறு கூறியதாகவும் உடனே காய்ச்சல் சரியாகிவிட்டது என்றும் உளறிக் கொட்டியுள்ளார். 

காய்ச்சலை போக்குவது மட்டுமின்றி பல்வேறு நோய்களை சீர்செய்யும் ஆற்றல் பசுவின் சிறு நீருக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் பசுவின் சிறுநீரை மனிதர்கள் குடித்தால் பல்வேறு நோய்த் தொற்றுகள் உருவாகும், கடுமை யான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல் வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

காமகோடியின் முட்டாள்தனமான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், வழக்கம் போல ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் அவருக்கு முட்டுக் கொடுக்க முன்வந்துள்ளது. அவர் ஒன்றும் வகுப்பறையில் இவ்வாறு கூறவில்லை. வெளியில்தானே சொன்னார் என்று கூறுகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்த அவக்கேட்டை வகுப்பறையிலும் அரங் கேற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம்.  அதற்காகத்தான் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் மாநில அரசின் கருத்தை முற்றாக  நிராகரித்து ஆளுநர் மட்டுமே துணைவேந்த ருக்கான தெரிவு குழுவை அமைக்கும் ஆபத்தான யோசனையை யுஜிசி முன்வைத்துள்ளது. இது நடைமுறைக்கு வருமானால், இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆர் எஸ்எஸ் ஆசாமிகளே நியமிக்கப்படுவார்கள். இந்த நாட்டின் பிரதமரே அறிவியலுக்கு விரோத மாக பேசி வரும் நிலையில், ஐஐடி இயக்குநர்க ளும் அவரது பாதையில் அணி வகுக்க துவங்கி யிருக்கிறார்கள். ஐஐடி இயக்குநர் பொறுப்பிலி ருந்து காமகோடியை நீக்க வேண்டும்.