செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

எப்போதும் மனிதர்கள் நடுவில் அவன்

கால இயந்திரத்தை சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா ? நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய நிலநடுக்கோடு நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. வெள்ளைக்காரன் இங்கு வந்த பிறகுஉருவான ஆங்கிலோ இண்டியன் என்கிற ஓர் இனம் கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டது. நான் அறுபதுகளின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்தவன். அதன் பின்னரே ஆங்கிலோ இண்டியன் என்போரை அறிவேன். ஒரு நண்பன் உண்டு. ஒரு நண்பியும் உண்டு. ஆயினும் அவர்தம் குடும்பத்தோடு ஊடாடிப் பழகியதில்லை. இந்நாவலின் கதாநாயகன் தேவ் என்கிற தேவேந்திர ஐதாள சேலத்திலிருந்து சென்னைக்கு வந்ததுமே ஹெல்ட் என்கிற ஆங்கிலோ இந்தியத் தம்பதியரின் குடும்பத்தோடு கொள்கிற நட்பு நமக்கு அச்சமூகத்தின் அகத்தையும் புறத்தையும் ஊடுருவிக் காட்டுகிறது. போர்ச்சுகீசிய தெருவில் குடியிருந்த அக்குடும்பம் புரசை, பரங்கிமலை, பல்லாவரம் எனப் படர்வது சென்னை நகரில் அவர்களின் வாழ்விடமிருந்த புவியியலைச் சுட்டும்.தேவேந்திர ஐதாள எனும் பெயரே நமக்கு பரிச்சயமானதல்ல. பள்ளிக் கூடம், பணியிடம் எங்கும் நீ யார் எனும் கேள்வி அவனைத் துரத்தும். பூர்வீகம் கர்நாடகம். தாய்மொழி கன்னடம். வீட்டில் பேச்சு மொழி அது. பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்வதும் தமிழகத்தில். படித்ததும் தமிழ். ஆயினும் நீ யார் எனும் கேள்வி அவன் வாழ்க்கை நெடுக துரத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் வாழ்க்கை பின்னிய சிக்கலில் இருந்து விடுபட பெங்களூருக்கே மாற்றலாகிப் போய்விடலாம் எனக் கருதி, முன்னோட்டமாய் தன் காதல் மனைவி கமலாவுடன் பெங்களூர் வருகிறான் தேவேந்திர ஐதாள அதுகாவிரி பிரச்சனை முற்றி கலவரம் வெடித்த சூழல். கன்னட வெறியர்களிடையே சிக்கிக் கொண்ட இவனை அவர்கள் கன்னடனாக இனங்காண மறுக்கிறார்கள். பெங்களூரில் வைத்தே அச்சூழலுக்குப் பின் அவன் பேசியது முக்கியம்.“ஆமா, வேணாம் இந்த ஊரு…”என்றான் .

அவள் முகத்தில் உணர்ச்சி பாவத்தை நோக்கினான்.அவள் எதுவும் சொல்லவில்லை. சொல்லுபவளாய் எந்த முக மாறுதலையும் கொண்டிருக்க வில்லை.இன்னொரு இடைவெளிக்குப் பின் மீண்டும் கூறினான், “ இந்த ஊர், நம்ம ஊர் கிடையாது. உன் பாஷைதான் (தமிழ்தான்) என் பாஷை. இந்த பாஷை (கன்னடம்) என் பாஷையில்லை. நா இந்த கூர்க்காரனில்லை.”நெடிய அடையாளச் சிக்கலுக்கு வாழ்க்கை அனுபவம் விடை சொன்னது. ‘இனத் தூய்மை, வந்தேறி’என்றெல்லாம் பேசி, ரத்த ஆராய்ச்சி செய்வோர் அறிய வேண்டிய பாடமல்லவா அது.கடைசிகாட்சி இரத்தத்துக்கு இனமில்லை என உணரவைக்கிறது.தேவ் தந்தையை இழந்தவன். நாட்டு வைத்தியர் ஹமீதால் வளர்க்கப்பட்டவன். எக்ஸ்ரே டெக்னீசியன் பயிற்சி பெற ஹமீதால் சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட தேவ். டாக்டர் கொடுத்த முகவரியின் படி ஹெல்ட் தம்பதியர் வீட்டிற்கு வந்து சேர்கிறான். ஹெல்ட், சலோமி, பாவ்லின், கிறிஸ்டி, பில்லி, மார்லின், லான்சி, சிந்தியா என ஒரு பெரும் நட்பு வட்டமே அவனைச் சூழ்கிறது. கதை நகர்கிறது.அன்றைய சென்னை சினிமா தியேட்டர், போக்குவரத்து, பேபி டாக்சி, ஈரானி டீ கடை, பிலால் ஹோட்டல், ஜூக் பாக்ஸ் எனும் விரும்பிய பாடலை காசு போட்டு கேட்கும் ஏற்பாடு, குதிரைப் பந்தயம்,கைரிக்ஷா, காபூல்வாலா எனும் ஈட்டிவட்டிக்காரன், அரிசி பஞ்சம், காங்கிரஸ் வீழ்ச்சி, அண்ணா ஆட்சி,அண்ணா மறைவு, கோவா விடுதலைப் போர், இந்தி எதிர்ப்புப் போர், இந்தி படிக்க மத்திய அரசு அலுவலகங்களில் பயிற்சி, குடும்பக் கட்டுப்பாடு நிரோத் விநியோகம், கம்யூனிஸ்ட் கட்சி உடைந்தது, டெலிபோன் போராட்டம், புயல் இழப்பு, ஐந்து பைசா பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு, ஒண்டிக் கட்டைக்கு வீடு கிடைப்பதில் சிரமம், வாடகை வீட்டு சிக்கல். கரி எஞ்சின் ரயில் மெல்ல டீசல் ரயிலாக மாறும் நிலை இப்படி அந்தக் கால சென்னையின் சமூக, அரசியல் வரலாற்றை நாவலூடே உயிரோட்டமாய் கலந்து தந்திருக்கிறார். அந்த வகையில் இது ஒரு சமூக வரலாற்று நாவல் எனிலும் மிகை அல்ல. அம்மாவை சேலத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து விடுவது. தங்கை இந்திரா, கணவரோடு செங்கல்பட்டு வந்துவிடுவது.

தாசில்தார் பூபாலன் குடும்பத்தோடு ஏற்பட்ட உறவு. அவர் மகள் கமலாவைக் காதலித்து மணமுடிப்பது எல்லாம் நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளது. சிங்காரம், செல்லம்மா, கொண்டப்பன், ஜார்ஜ், அம்பி, வேணுகோபால் என எண்ணற்ற சாதாரணஉழைப்பாளி மக்களின் கதாபாத்திரங்களூடே இந்நாவல் அரை நூற்றாண்டுக்கு மேலான சென்னை நகரின் அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றை வரைந்து செல்கிறது.ஒரு காபூல்வாலா கதையும் அவர் முஸ்லிம்களை வித்தியாசமாய் பழிவாங்கும் காட்சிகளும் இந்நாவலில் இடம் பெற்றது கொஞ்சம் நெருடுகிறது. அது இன்றைய அரசியலின் விளைவாக இருக்கலாம். அந்தச்சித்தரிப்பு ஆசியரின் அனுபவமாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்கலாம். ஆயினும் எனக்குப் பிடிக்கவில்லை. பொதுவாக இந்நாவல் ஒரு முதியவரின் அருகில் உட்கார்ந்து அவரின் கடந்த கால வாழ்க்கை கதையைக் கேட்பது போன்ற அனுபவம் தருகிறது.தொழிற்சங்கப் போராட்டத்தை சொல்லும் போது பல தலைவர்களோடு ஏகேவி எனும் ஏ.கே.வீரராகவன் பெயரும் ஒரே ஒரு இடத்தில் வந்து போகிறது. ஏகேவி ஓய்வுக்கு பின் எம்மோடு தீக்கதிரில் பணியாற்றியவர். அவரை மட்டுமே மையப்படுத்தி விட்டல் ராவ் எழுதிய நாவலொன்று முன்பு படித்து விமர்சனம் எழுதியுள்ளேன். ( நாவல் பெயர் மறந்துவிட்டது) விட்டல் ராவ்தொலைபேசித் துறையில் வேலை பார்த்தவர். தாய்மொழி கன்னடம். தமிழில் நாவல், சிறுகதை என நிறையஎழுதியவர். பரிசுகளும் வென்றவர். இந்த நாவல் கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததே. சுயவரலாறு அல்லதான்; எனினும் தேவேந்திர ஐதாளபடைப்பு விட்டல் ராவ் வாழ்விலிருந்து எழுந்தது என்பது என் கணிப்பு.முன்னுரையில் பாவண்ணன் சொல்கிறார், “தேவைச் சுற்றிஎப்போதும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.அல்லது மனிதர் நடுவில் அவன் இருக்கிறான்.ஒரு காட்சியில் கூட அவன் தனிமைகொண்டவனாகக் காட்டப்படவில்லை .இது எப்படி நிகழ்ந்தது என்று யோசித்தபோது ஓர் உண்மை புரிந்தது .அவன் காலமெல்லாம் சுமந்தலையும் வருத்தம்.இன்னொரு வகையில் காலம் அவனுக்கு வழங்கிய வரம் என்றே சொல்ல வேண்டும்.” ஆம். அதுவே இநாவலின் பெரும் பலம் .

;