headlines

img

நாகூசாத நரேந்திர மோடி

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் முன்னேற்றம் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று பேசியிருக்கிறார். அத்துடன் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வரு கிறது என்றும் பெண்கள், அவர்கள் விரும்பிய  துறையில் சாதிக்கத் தேவையான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது என்றும் நாகூசாமல் கூறியிருக்கிறார், நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது பற்றி எதுவும் செய்யாமலேயே.

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை யொட்டி அந்த மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங் களை துவக்கி வைப்பதும் அடிக்கல் நாட்டுவதும்  அறிவிப்புகளை வெளியிடுவதுமாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அங்கே வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். 

அங்கு ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான 18 ரயில்வே  திட்டங்களை காணொலி மூலமாக தொடங்கி வைத்திருக்கிறார். இப்படி ஒன்றிய அரசின் நிதியை வாரி  இறைத்து தாராளமாக திட்டங்களை அள்ளித்தெளிக்கிறார்கள். பாவம் பதவிபடுத்தும்பாடு. எப்படியும் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த அளவும் இறங்கி செயல்பட துணிந்துவிட்டதன் விளைவே இது. 

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து  கொண்ட பிரதமர் மோடி தனது 8 ஆண்டு கால  ஆட்சிப் பற்றி மிகவும் பெருமிதமாகப் பேசியிருந்தார். அப்போது கடந்த 8 ஆண்டுகளில் குடிமக்களை வெட்கித் தலைகுனிய வைக்கும் எந்தச் செயல்களையும் நான் அனுமதிக்கவில்லை என்று கூறியிருந்தது நகைப்புக்குரியதாக இருந்தது. 

அவரது செல்லாத நோட்டுத் திட்ட அறிவிப்பால் நாட்டு மக்கள் அனைவரையும் நடுரோட்டில் நிற்க வைத்ததற்காக அவர் ஏன் வெட்கப்பட வேண்டும்? கறுப்புப் பணத்தை மீட்டு வந்து 15லட்சம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்போகிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் போனதற்காக அவர் ஏன் வெட்கப்பட வேண்டும்? கொரோனா காலத்தில் வெறும்  4 மணி நேர இடைவெளியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை குடும்பம் குடும்பமாக தலையில் சுமையுடனும் மனதில் கவலையுடனும் நடையாய் நடக்க வைத்த தற்காக அவர் ஏன் வெட்கப்பட வேண்டும்? ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையினால் பல ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் இறந்ததற்காக அவர் ஏன் வெட்கப்பட வேண்டும்? இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்திற்கு போய்விட்ட தற்கு அவர் ஏன் வருத்தப்பட வேண்டும்? 

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பாஜக வினர் பேசியதற்காக அரபுநாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்ததற்கு அவர் ஏன் வெட்கப்பட வேண்டும்? ஏனெனில் அவர் குஜராத்தில் முதல்வராக இருந்த காலத்தில் சிறுபான்மையினர் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டதை கண்டு வெட்கப்படாதவர் இதற்கெல்லாமா வெட்கப் படப் போகிறார். ஆனாலும் கூட நாட்டின் வளர்ச்சி  பற்றி குஜராத் மாடல் பற்றி அவர் பீற்றிக் கொள்வதை யாரால் தடுத்திட முடியும் மக்களையன்றி.

;