headlines

பாஜக பதறுவது ஏன்?

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் களத்தை பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முழுக்க முழுக்க மத வெறி பிரச்சாரக் களமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவும் பாஜகவுக்கு பாதகமான செய்திகளையே சொல்லி வருவதால் அவர்களது வெறுப்பு அரசியல் பிரச்சாரம் வேகம் பிடிக்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பை ஒத்துக் கொள்ளாத பாஜக மறுபுறத்தில் இந்தியா  கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடு வார்கள் என்று ஆதாரம் எதுவுமின்றி அவதூறு  பேசுகிறது. மறுபுறத்தில் பிரதமரின் பொரு ளாதார ஆலோசனை குழு இந்துக்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவ தாகவும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பொய்யான புள்ளிவிபர ஜோடனையை வெளியிடுகிறது. 

இந்த நிலையில் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் எதிர்பார்த்தது போல ராமர் கோவில் விவகாரம் அவர்களுக்கு கைகொடுக்க வில்லை. கோவில் திறப்புவிழாவிற்கு குடியரசுத் தலைவரையே அழைக்காத இவர்கள் அந்தக் கோவிலின் திறப்புவிழாவிற்கு எதிர்க்கட்சிகள் வராதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் மக்கள் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது அமித்ஷா ராமர்கோவில் என்பது எங்களுக்கு எப்போதும் மத நம்பிக்கை சார்ந்த விசயம்தானே தவிர தேர்தலுக்கான விசயமல்ல என்று பம்முகிறார். 

அரசியல் சட்டத்தை மாற்றி அமைத்து இந்தியாவை ஒரு இந்துத்துவ நாடாக, எதேச்சதிகார நாடாக மாற்றுவதற்கு பாஜக  அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்களால் அதை உடனடியாக நிறைவேற்றமுடியவில்லை. ஆனால் அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கான அதிகாரத்தை 2014ஆம் ஆண்டிலேயே தாங்கள் பெற்றுவிட்டதாகவும் ஆனால் அப்படி எதையும் முயற்சிக்கவில்லை என்றும் அமித்ஷா ஜகா வாங்குகிறார். 

அரசியல் சட்டத்தை அடியோடு மாற்றி அமைக்கும் அதிகாரம் எதையும் மக்கள் இவர்களுக்கு வழங்கவில்லை. அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உண்டே தவிர, அதை மாற்றும் அதி காரம் இவர்களுக்கு இல்லை. எனினும் அரசியல் சட்டத்தின் அடிப்படையாக உள்ள ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்றவற்றை கடுமையான சேதாரத்திற்கு இவர்களது ஆட்சி உள்ளாக்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இவர்களது திட்டம் கூட ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்யும்  ஒன்றே ஆகும். இவர்களது அனைத்துத் திட்டங்களையும் இந்திய மக்கள் தங்கள் வாக்குச் சீட்டின் மூலம் நிராகரித்து வருவதால் பாஜக பதற்றமடைந்து பசப்புகிறது. ஆனாலும் மக்கள் இதை நம்பமாட்டார்கள்.