headlines

img

முற்றுப்புள்ளி வைத்திடுக!

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாண வர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் சில மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். 

விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் தமிழக அரசினால் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் பள்ளிக்கு தன்னுடைய குழந்தைகளை படிப்பதற்காக அனுப்பிய பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கட்டிடம் இடிந்து விழுந்த தற்கு அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டது தான் காரணம் என்று கூறியுள்ளார். ஆயிரக்க ணக்கான மாணவர்கள் படிக்கும் பள்ளியில் அடித்தளம் கூட அமைக்காமல் கட்டிடம் கட்டு வது என்பது அலட்சியத்தின் உச்சமாகும். 

2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்ப கோணம் ஸ்ரீகிருஷ்ணா துவக்கப்பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகளை பறிகொடுத் தோம். இதிலிருந்து என்ன பாடத்தை கற்றுக் கொண்டோம் என்பது இன்னமும் மிகப் பெரிய கேள்விக்குறியே. விபத்து நடந்தவுடன் பரபரப்பாக பேசுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குழு அமைப்பதும் நடைபெறுகிறது. ஆனால் காலப்போக்கில் அனைத்தும் மறக்கப் பட்டுவிடுகிறது. கும்பகோணம் பள்ளி விபத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும், கட்டமைப்பு விதிகளும் கொண்டு வரப்பட்டன. 

ஆனால் தற்போது நெல்லையில் பள்ளிச் சுவர் எட்டி உதைத்ததால் இடிந்து விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. எந்த லட்சணத்தில் கட்டுப்பாடுகளும், கட்டமைப்பு விதிகளும் நடை முறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். 

இப்போதாவது தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போது மாநில அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கல்விக்கூடங்களில் கட்ட மைப்பு உறுதி குறித்த ஆய்வு முழுமையாக செய்யப்பட வேண்டும். 

மாணவர்களின் உயிருக்கு உத்தரவாத மில்லாத பள்ளிக் கட்டிடங்களை கொண்டுள்ள நிர்வாகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் கட்ட மைப்புக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டி டங்கள் கட்டப்படுவதோடு பழுதான கட்டிடங்கள் சீரமைக்கப்பட வேண்டும். 

இதற்காக ஆகும் செலவு வருங்காலத் திற்கான முதலீடாகக் கருதப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் உரிமத்தை புதுப்பிக்கும் போது முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும். குறைபாடுள்ள பள்ளிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. நெல்லையில் நடந்த கொடுமை இனி எங்கும் நடக்கக்கூடாது.

;