headlines

img

தீக்கதிர் திசைகள் இனி ஐந்து

தீக்கதிர் நாளேடு 60 ஆண்டுகளை வெற்றிகர மாகக் கடந்து வைர விழா கண்ட பெருமிதத் தோடு 61 ஆவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இனிய தருணத்தில் தனது  5ஆவது அச்சுப் பதிப்பை தேசத்தின் தென்திசை யாம் திருநெல்வேலியில் துவங்குகிறது.

1963ஆம் ஆண்டு தன்னுடைய புரட்சி கரப் பயணத்தை துவக்கிய இந்த பாட்டாளி வர்க்க  ஏடு கடந்து வந்த பாதை என்பது மலர் படுக்கை களால் ஆனது அல்ல. மாறாக, நெருப்பாற்றை நீந்திக் கடந்த நெடிய வரலாறாகும்.

கோவை தொழிலாளி வர்க்கத்தின் உறு துணையோடு தலைநகர் சென்னையில் தனது பயணத்தை துவக்கிய தீக்கதிர் தற்போது மதுரை, சென்னை, கோவை, திருச்சி என நான்கு அச்சுப் பதிப்புகளாகவும், எண்மப் பதிப்பாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப் போராட்டத்தின் செருகளமாக அமைந்த நெல்லையில் தனது 5ஆவது அச்சுப் பதிப்பை துவக்குவது தமிழக உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளுக்கும் உவகை அளிக்கும் உவப்பான செய்தியாகும்.

இன்றைய ஊடக வானம் என்பது பொய் மேகங்களால் சூழப்பட்டிருக்கும் சூழலில் உண்மையை உரத்துச் சொல்லும் மின்னல் ஒளி யாக அல்ல; அதிகாலை வெளிச்சம் போல உண்மையின் பக்கம் எப்போதும் நின்று வந்தி ருக்கிறது தீக்கதிர். 

உழைக்கும் மக்களின் உரிமைகளை உரத்து முழங்கும் கதிராகவும், ஏகாதிபத்திய மற்றும் மதவெறி, சாதிவெறி சக்திகளுக்கு எதிரான போர் முரசாகவும் தீக்கதிர் ஒலித்து வருகிறது.

அவசர நிலைக் காலத்தின் போதும், அஞ்சா மல் பயணம் செய்த ஏடு இது. கொரோனா பெருந் தொற்றுக் காலங்களில் ஊடகங்கள் பலவும் முடங்கிப் போன காலத்திலும் சமூக ஊடகங்க ளின் வழியாக தனது ஒளியை பாய்ச்சிக் கொண்டே இருந்தது இந்த ஏடு.

தமிழக உழைக்கும் மக்களின் பேராதரவே இந்த சரித்திரச் சாதனைக்கு அடித்தளமாகும். மார்க்சியப் பாதையில் சோசலிசப் பொன்னு லகை அமைப்பதை தன்னுடைய லட்சியமாக வரித்துக் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் உறுதிப்பாடே தீக்கதிரின் அசைக்க முடியாத அடித்தளமாகும்.

இந்த இனிய நாளில் தீக்கதிரோடு எப்போ தும் தங்களை பிணைத்துக்  கொண்டுள்ள வாசகர் கள்; தீக்கதிரில் பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்கள்; இந்த ஏட்டின் முக வரியாக விளங்கும் முகவர்கள்; விளம்பர தாரர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்கி றோம். வானம் பெரிது, ஆனால் இந்த தீப் பறவை யின் சிறகுகள் வலிது. மண்ணில் கால் பதித்து வானை அளப்போம்.