headlines

img

நகைப்பார்கள் நக்வி!

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை களில் நாட்டுக்கு நலம் விளைவிப்பதைவிட தீமை ஏற்படுத்தியவையே அதிகம். இத்தகைய தீங்குக ளின் ஒட்டுமொத்த வடிவமாகக் கொண்டு வரப் பட்டவை மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டம் ஆகியவைதான். அதை எதிர்த்த வேளாண் குடிமக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் தான் தற்காலிகமாக ஒரு தடையை ஏற்படுத்தியிருக்கிறது, இவர்களின் தங்கு தடை யில்லாத கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளின் நடைமுறைப்படுத்தலுக்கு. அதன் விளைவாகவே மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் மோடி.

இந்தநிலையில் இதுபோன்ற தவறான சட்டங்களான என்பிஆர், குடியுரிமை திருத்தச் சட்டம் முதலியவை, 35ஏ, 370ஆவது பிரிவு நீக்கம் ஆகியவற்றையும் திரும்பப் பெற வேண்டும் என்கிற குரல் உரத்து  ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. இதனைக் கண்டு எரிச்சலடைந்த ஒன்றிய பாஜக அரசு, அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை கொண்டு எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக அமைப்புகளையும் சாட வைத்திருக்கிறது. மதவாத அரசியல் மீண்டும் தொடங்கியுள்ளதாக நக்வி கூறியிருக்கிறார்.

யார் நடத்துவது மதவாத அரசியல்? முஸ்லிம் கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு மாநிலம் இருப்பதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாத இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜக நடத்து வதா? காஷ்மீர் எனும் ரோஜாவை மூன்று கூறுக ளாக பிய்த்தெறியக் கூடாது என்பதா? காஷ்மீர்  மட்டுமின்றி அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநி லங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிக் கப்படும் மக்களை மதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது யார்?

சிஏஏ என்பது குடியுரிமையை பறிப்பதற்கான தல்ல; குடியுரிமை அளிப்பதற்கான சட்டம் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசுகிறார் நக்வி. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தின் கீழ் குடியுரிமை இழந்த 19 லட்சம் பேரில் வெறும் 1.032 விண்ணப் பங்கள் மட்டுமே மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் பெற்ற  தகவல் அம்பலப்படுத்துகிறது. இதுதான் இவர்கள் குடியுரிமை அளிக்கும் லட்சணம்?

இன்னும் ஓங்கியடிக்கிறார் அப்பாஸ் நக்வி.  பொய்யை உண்மை போல் சொல்வது அவர்க ளுக்கு கை வந்த கலைதானே! 370ஆவது பிரிவை நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீரிலும் லடாக்கி லும் 370க்கும் மேற்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப் பட்டுள்ளன என்கிறார் . என்ன பிரச்சனை தீர்ந்தது? என்ன வளர்ச்சி வந்துவிட்டது? பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு அமைதி தவழ்கிறதா? 

அமித்ஷா வருகையின் போது சில முஸ்லிம் மக்களை கைநீட்டி வரவேற்க வைப்பதால் அமைதி திரும்பிவிட்டதாக கூறிக்கொள்ளலாம். ஆனால் அதுவும் கூட நம்பும்படி இல்லையே! அமெரிக்கா தனது மக்களை ஜம்மு- காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளதே. இதுதான் அங்கு இயல்பு நிலை திரும்பியதன் பொருளா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள் நக்வி. நீங்கள் சொல்வதை கேட்டு சிறு குழந்தை கூட நகைக்கும்.