headlines

img

பாஜகவுக்கு அருகதை இல்லை

மருத்துவ படிப்பு சேர்க்கையில் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூக நீதியை நிலைநாட்ட நடந்து வந்த சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  இந்த வழக்கில் திராவிட முன்னேற் றக்கழகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்டு வாதாடியது குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தீர்ப்பின்படி 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் பொருளாதாரத்தில் நலி வடைந்த முற்பட்ட பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த வருமான உச்சவரம்பை ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதுதொடர்பான வழக்கை ஒத்தி வைத்துள்ள  உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு பொருளாதா ரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. 

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக் கீட்டிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ள நிலை யில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய மருத்துவக் கவுன்சில் இதற்கு எதிர் மறையான நிலையையே எடுத்தது. அகில  இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீடு பொருந்தாது என்ற விசித்திர மான வாதத்தை முன்வைத்தது. ஒன்றிய அரசும் இந்த ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைபாட்டையே எடுத்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஒதுக்கீட்டை அனுமதித்த போது, இந்த உத்தரவு செல்லாது என்றும் உச்சநீதிமன்றம்தான் முடி வெடுக்க முடியும் என்றும் ஒன்றிய பாஜக அரசு வாதிட்டது. மறுபுறத்தில் இந்த வழக்கை தனித்து விசாரிக்கக் கூடாது என்றும் மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த இதர வழக்குகளும் இதனோடு தொடர்புடையது என்றும் இழுத்தடிக்கும் போக்கையே ஒன்றிய அரசு மேற்கொண்டது. 

ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது முற்றுப் புள்ளி வைத்துள்ளது. ஆனால் இந்த உத்தரவு கிடைத்ததற்கு தாங்கள் தான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை உரிமை  கொண்டாடுவது அவக்கேடானது. 

இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி பாஜக என்பது நாடறிந்த உண்மை. கொஞ்சம் கொஞ்ச மாக இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற முறையிலேயே அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முற்றாக விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அனைத்துக் கட்சிகளின் தீர்மானத்தை பாஜகவைச் சேர்ந்த வானதி  சீனிவாசன் எதிர்த்து வெளிநடப்பு செய்திருக் கிறார். இதுதான் அவர்களது உண்மையான முகம். சமூகநீதியை சவக்குழிக்கு அனுப்புவதே ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் நோக்கம். அதை மறைக்க பல்வேறு வேடங்கள் போடுவார்கள். அதில் ஒரு பகுதிதான் அண்ணாமலையின் அறிக்கையும், வானதியின் வெளிநடப்பும்.