headlines

img

சம்பல் பிரச்சனையும் நீதித்துறையின் ஏய்ப்புகளும் -கலீஸ்வரம் ராஜ் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்

2005 ஆம் ஆண்டில் நீதித்துறையின் செயலற்றத் தன்மை என்னும் தலைப்பில் சாத்  எம் ஓல்ட்பாதர் (Chad M.Oldfather) என்னும் அறிஞர்,நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் தீர்ப்பு வழங்கல் குறித்த முக்கிய கடமைகளைப் பற்றி பேசுகிறார்:

“நீதித்துறையின் தீர்ப்பின் ஒவ்வொரு எழுத்துக்க ளும் முக்கியத்துவம் வாய்ந்த விளைவுகளை ஏற்ப டுத்துபவை. வரம்புகளுக்கு அப்பால் அதன் செயல் பாடுகளை கண்டறிவதை காட்டிலும் குறைந்தபட்ச கடமைகளை அது நிறைவேற்றுவதில் இருந்து எவ்வாறு தவறி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது கடிமானதாகும்.எனவே நீதித்துறையின் செயலற்ற தன்மை மிகவும் கவலைக்குரியதாகும்.”

ஒத்தி வைக்கப்பட்ட மற்றொரு வழக்கு

சம்பல் மசூதி வழக்கில் (உத்தரப்பிரதேசம்) இந்திய உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுகுமுறை நீதித்துறை ஒத்திவைத்து வரும் வழக்குகளுக்கு மற்றொரு உதாரணம். இந்த பிரச்ச னைக்கு இறுதி பதிலை அளிக்கக்கூடிய ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படை யில் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளை முடக்கவும் வழக்கை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மற்றும் மனுதாரரான சம்பல் ஷாஹி மசூதி கமிட்டியை அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகும்படி கேட்டுக்கொண்டது. 

நீதிமன்றம் மனுதாரர்களுக்கு சட்டப்பூர்வ தீர்வு களை பெறும் வழிமுறைகளை சுட்டிக்காட்டியதுடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்குமாறும் மனுதாரர்களை கேட்டுக் கொண்டது. நவம்பர் 29 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு, உள்ளூர் நீதி மன்றத்தின் தீர்ப்பினால் அங்கு ஏற்பட்ட மனித உயிர்களை இழப்பதற்கும் வழி வகுத்த பதற்றத்தை தணிக்கும் தற்காலிக நிவாரணத்தை அளித்துள்ளது. இதை சிறுபான்மை குழுக்களும் வரவேற்றுள்ளன.

விழுமியங்களை மறுக்கும் நீதித்துறை 

ஆனாலும் நீதித்துறையின் இதைப் போன்ற ஏய்ப்புகளை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. நாட்டில் சமீபத்திய வரலாற்றில் இது நன்கு நிரூபணமாகி உள்ளது. ஒருவகையில், நாடாளுமன்ற சட்டத்தை எழுத்திலும் உணர்விலும் நீதித்துறை மதிக்கத் தவறியதன் விளைவுதான் சம்பல் அத்தியாயம். 

1991 சட்டம் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களால் மீறப்பட்டதும் மற்றும் அதற்கு எதிரான சவால்கள் நீதிமன்றங்களின் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதும் இதற்கு முக்கியக் காரணங்கள். டிசம்பர் 12 விசாரணையின் போது ஒரு சுய பரிசோதனையும் கடந்த கால உண்மை களை நினைவு கூரும் அணுகுமுறையையும் நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்.

உறுதிப்பாட்டை  தவறவிட்ட நீதித்துறை 

ஒரு மதம் அல்லது பிரிவின் வழிபாட்டுத் தலங்க ளை வேறு மதம் அல்லது பிரிவினராக மாற்றுவதை இந்த வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தின் பிரிவு (3) தடுக்கி றது. அதேபோல ஒரு வழிபாட்டுத்தலத்தின் மதத்தின் தன்மை 15. 8. 1947 அன்று எப்படி இருந்ததோ அப்படியே தொடர வேண்டும் என்று பிரிவு4(1) வரையறுக்கிறது. 

இதை வெளியிட்ட பிறகு இது தொடர்பான வழக்குக ளை இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் தொடங்க வோ தொடரவோ முடியாது என்பதை பிரிவு 4 (2) மேலும் தெளிவுபடுத்துகிறது. இந்த சட்டம் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி சர்ச்சைக்கு விலக்கு  அளித்துள்ளது. இந்த விதிகளை மீறுவது, வழக்கு தொடர்வது சட்டத்தின் 6ஆவது  பிரிவின் படி தண்ட னைக்குரிய குற்றமாகும். அபராதம் தவிர மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

காலம் தவறிய செயல்பாடு 

கடந்த காலத்தைத் தோண்டி அரசியல் ஆதா யத்திற்காகவும் , மத உணர்வுகளை தூண்டுவதற்கா கவும் மதவாத அமைப்புகளின் நன்கு திட்டமிடப்பட்ட இந்த விளையாட்டை நிறுத்த, நாட்டின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட நாடாளுமன்றம் ஒரு அரசி யல் அமைப்பு என்ற வகையில் இந்த சட்டத்தை இயற்றுவதை பொருத்தமானதாகக் கருதியது. 

எனவே புறநிலைச் சூழ்நிலையை கணக்கில் கொண்டு இந்த வழக்கின் நிச்சயமற்ற தன்மையை நீடித்திருக்க நீதிமன்றம் அனுமதித்திருக்கக் கூடாது. (1991)சட்டத்தின் செல்லுபடியாகும் அதன் தன்மை குறித்து அது எப்போதோ தன் உறுதியான நிலைப் பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.

முந்தைய வழக்குகள் 

முந்தைய சந்தர்ப்பங்களில் கூட அடிக்கடி ஒத்தி வைப்புகளில் நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) தொடர்பாக தில்லியில் ஷாகின்பாக் போராட்டக்காரர்களுடன் பேசுவதற்கும் அமித் சஹானி எதிர் காவல் ஆணையர் (2020) வழக்கில் உடனே தீர்வு காணவும் நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. ஆனால் சிஏஏ-க்கு எதிரான சட்ட ரீதியான சவாலுக்கு தீர்ப்பு எதுவும் அளிக்கா மல் நீதிமன்றம் நழுவி விட்டது.

பாடம் கற்பித்த மக்கள் எதிர்ப்பு!

மீண்டும் ராகேஷ் வைஷ்ணவ் எதிர் இந்திய அரசு (யூனியன் ஆப் இந்தியா) (2021) வழக்கில் சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்கள் கேள்விக்கு உள் ளாக்கப்பட்ட பொழுது போராடும் விவசாயிகளின் அமை ப்புக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த நிபுணர் குழுவை நீதிமன்றம் அமைத்தது. 

ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி விவசா யிகளின் நம்பிக்கையை மேம்படுத்தவும் முயற்சி நடந்தது.இது குறித்த விவகாரங்களில் இன்று வரை நீதிமன்றத்தால் தீர்வுகள் எட்டப்படவில்லை. மேலும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது. விவசாயச் சட்டங்கள் மக்களின் கடும் எதிர்ப்பால்தான் ரத்து செய் யப்பட்டதே தவிர பேச்சுவார்த்தை மூலம் அல்ல.

கடமை தவறிய உச்ச நீதிமன்றம் 

இந்த இரண்டிலுமே உச்ச நீதிமன்றம் தனது முதன்மைக் கடமையான, அதாவது முடிவெடுக்கும் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டது.

சம்பல் மசூதி விவகாரத்திலும் முக்கியப் பிரச்சனை யை தீர்ப்பதில் அதற்கு இருக்கும் தயக்கம் வெளிப் படுகிறது. 1991 சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்த தவறியதற்கு  நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. இந்த சட்டம் சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை போன்ற அடிப்படை அரசியல் அமைப்பு விழுமியங்களை நிரூபிக்கிறது என்பதாலும் தேசத்தின் சமூக மற்றும் மத கட்டமைப்பை பாது காக்கும் ஒரு பாராட்டத்தக்க நோக்கத்தை கொண்டி ருப்பதாலும் இதற்கு எதிரான சவாலை எந்த ஒரு நீதிமன்றமும் அனுமதிக்கக் கூடாது. 

அத்தகைய மனுக்களை ஏற்கவோ அல்லது குறைந்தபட்சம் மறுக்கவோ விருப்பமின்மை இருந்தால் எதிர்காலங்களில்  அயோத்தி வழக்கில் (சித்திக் எதிர் மகந்த் சுரேஷ் தாஸ், 2019) அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பின் ஆதரவு அதற்கு கிடைத்துவிடும்.

அயோத்தி தீர்ப்பில் மசூதியை இடித்த சட்டவிரோதச் செயலை மன்னித்து மசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நீதிமன்றம் வசதி செய்து கொடுத்தது உண்மைதான். ஆனால் இழப்பீடு வழங்கி புதிய மசூதி கட்டுவதற்கு மாற்று இடத்தை வழங்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நல்லிணக்க தீர்ப்பு கூட அரசியல் அமைப்புரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்றாலும் கூட 1991 சட்டத்தின் அரசியல் வரலாற்று முக்கியத்துவத்தை அது கேள்விக்கு உள்ளாக்கவில்லை.

மதச்சார்பற்ற அரசின் அடிப்படைக் கடமை

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் சட்டம் என்பது மதச்சார்பற்ற அரசின் கடமைகளோடு உள்ளார்ந்த தொடர்புடையது என்றும் அனைத்து மதங்களின் சமத்துவத்திற்கான இந்திய நாட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது. வரலாற் றையும் அதன் தவறுகளையும் நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் ஒடுக்குவதற்கான கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும் நாடாளுமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி கட்டளையிட்டுள்ளது  என்றும் விளக்கி உள்ளது.

தன் தீர்ப்பை தானே மறுத்தது

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நிலைப்பாட்டை  தெளிவாக மறுக்கும் வகையில் ஞானவாபி மசூதி குறித்த வழக்கில் (2023), மசூதியில் ஆய்வு நடத்த நீதி மன்றம் அனுமதித்தது. எனவே மதச்சார்பின்மை பற்றிய தீர்ப்பில் சட்டப்பூர்வமான நிலையான அம்சங்கள் கூட நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளன.

விருப்பமில்லாத நீதித்துறை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாடாளுமன்ற சட்டத்தையும் மீறி அரசியல் நடவடிக்கைகள் திட்ட மிட்டு நடத்தப்படுவது  குறித்து சம்பல் விசாரணை யின் போது உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. எச்சரிக்கையும் விடப் பட்டது. வெவ்வேறு மசூதிகளின்  தோற்றம் குறித்து பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு சிவில் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. எனவே அவை அனு மதிக்க முடியாதவை என்று மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார். 

எனவே இந்த சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து முடிவெடுக்கவும் சம்பல் வழக்கில்  இறுதியான தீர்ப்பளிக்கவும் உச்சநீதிமன்றத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது. அயோத்தி வழக்கில் விரிவான அமர்வு, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் பற்றி கூறி யதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். முதலில் இதற்கு தேவை நீதித்துறையின் விருப்பம் மட்டும் தான்.தனது  சொந்த தவறுகளை திருத்திக்கொள்ள 1991 சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த சிறப்பு அமர்வின் விசாரணை அதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

நன்றி : தி இந்து நாளிதழ் 11/12/24, 
தமிழில் : கடலூர் சுகுமாரன்