செவ்வாய், ஜனவரி 19, 2021

headlines

img

இனியேனும் அவசரம் கொள்ளாதிருந்திடுக...

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நாளில் பள்ளிகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் முதுநிலை இறுதியாண்டு அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2ஆம் தேதிகல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

9. 10. 11, 12 வகுப்புகளுக்கு நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தன்னிச்சையாக அறிவிப்பதற்கு முன்பே பெற்றோர்களிடம் கருத்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தால் இந்த குழப்பத்தை தவிர்த்திருக்க முடியும். தமிழக கல்வித்துறையை பொறுத்தவரை முன்னுக்குபின் முரணான, அவசர கதியிலான அறிவிப்புகளை வெளியிடுவதும் அதற்கு எதிர்ப்பு எழுந்தால் பின்வாங்குவதும் இந்த நோய்த்தொற்று காலத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.கல்வியாளர்கள் உள்ளிட்டவர்களை ஆலோசித்துமுடிவுகள் எடுப்பது குழப்பத்தை தவிர்க்க உதவும்.

ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள்திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று அதிகரித்தது என்ற செய்தியை மாநிலஅரசு கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகவும், சற்று இடைவெளிக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், வெளிவரும் செய்திகள் அரசின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றமும் பள்ளிகளை அவசர கதியில் திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பள்ளித் திறப்பை டிசம்பர் வரை ஒத்தி வைக்கலாம் என்றும், மாநிலஅரசை அறிவுறுத்தியது. இந்த பின்னணியில்தான் அரசு தன்னுடைய முந்தைய அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. 

அதே நேரத்தில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களில் 100 பேருக்கு மேல் மிகாமல் பங்கேற்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு கூறியுள்ளது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.மத்திய, மாநில அரசுகளுக்கெதிரான அதிருப்தி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவேண்டிய சூழல் உள்ளது. இதைத் தடுப்பதற்காகவே 100 பேர் பங்கேற்கக்கூடிய கூட்டங்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறதோ என்ற கேள்வி எழுகிறது.முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் என எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. முதல்வர் உள்ளிட்டவர்கள் அரசுக் கூட்டங்களையே ஆளும் கட்சி கூட்டங்களாக மாற்றி வருகின்றனர்.இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் அதை காரணம் காட்டி எதிர்க்கட்சிகளின் உரிமைகளை மறுத்தல் கூடாது.
 

;