செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

பாடல்களில் புரட்சிக் கனலெழுப்பிய துணிச்சல் பெண்

1946 அக்டோபர் மாதம். புன்னப்புரா - வயலார் போராட்டம் ஆலப்புழாவில் புயலென ஆர்த்தெழுந்து வீசியது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சி.பி.ராமசாமி ஐயரின் சுதந்திர பிரகடனம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே அடிமைப்பட்டு உழன்று கொண்டிருந்த சிறு விவசாயிகளுக்கும் கயிறு தொழிலாளர்களுக்கும் கோபக்கனலை மூட்டியது. அந்த ஊழித்துதீயின் நடுவே சிறுமலராக பதினொரு வயது இளம் பெண் நின்று ஆவேசமுழக்க மிட்டாள். பரவூரில் கூனம்மாவு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த போர்ப்பரணி மேடையில் அந்த முழக்கம் சிறுமியின் அடிமன ஆழத்திலிருந்து வெளிப்பட்ட பாடலாகவும் இருந்தது.

“பதம் திவான் பதம் பஹிஷ்கரிக்கு” திவானின் வார்த்தையைப் புறக்கணிப்போம் என்ற அந்த இளங்குரல் திரண்டிருந்த தொழிலாளர்களுக்கு மேலும் உத்வேகமூட்டியது. பெருந்திரளுக்குள்ளிருந்து பீறிட்டெழும் எரிமலைச் சொற்கள் எங்கிருந்து வருகின்றன என்று அந்த சமஸ்தான ராணுவத்தின் கண்கள் தேட ஆரம்பித்தன. பூட்ஸ் கால்கள் அந்தத்திசை நோக்கி ஓட ஆரம்பித்தன. இறுதியில் கண்டடைந்துவிட்டன. அவர்களின் ஆத்திரத்தை  லத்திகளாலும் துப்பாக்கிச் சனியன்களாலும் தீர்த்துக் கொள்ள அவள் ஒன்றும் யுவதி அல்ல; 11 வயது சிறுமி. என்ன செய்வது? அங்கே தளநாயகனாக இருந்த ஐயப்பன் தலையிட்டு அந்தச் சிறுமி கைது செய்யப்படுவதைத் தவிர்த்தார். 1946 ல் 11 வயது சிறுமியாக இருந்து புன்னப்புராவயலார் போர் மறவர்களுக்கு எழுச்சியூட்டிய அவர்தான் அனுசூயா. தும்போளி கொடிவீட்டுப் புறயிடத்தில் 1934 ஆம் ஆண்டு வேலாயுதம் - தங்கம்மா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு முன்னும் பின்னுமாக 11 பிள்ளைகள். தந்தைக்குக் கயிறுதொழிற்சாலையில் மேற்பார்வையாளர் பணி. இவருக்குக் கண் பார்வை மங்கியதால் வேலை போனது; வீட்டில் வறுமை  புகுந்தது. கயிறு தொழிலாளர்கள் சங்கத்தின் காரணமாகக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அனுசூயா பழக்கமாகியிருந்தார். குடும்பம் வறுமைப்பட்டபோது கட்சிதான் அவரைப் பள்ளியில் படிக்கவைத்தது. படிப்புக்கு இடையே கட்சி மேடைகளில் புரட்சிகரப் பாடல்கள் பாடுவது தனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதினார்.

ஆறாம் வயதிலேயே நாடகமேடைகளில் கோமாளியாக வேடமிட்டு நடித்த அவர் 9 வயதில் கட்சி மேடைகளில் பாடல்கள் பாடினார். ‘மைக்கும அனுசூயா பாடல்களும்” என்று நோட்டீஸ் போட்டுவிட்டால் போதும். கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதும் என்கிறார்கள். பல நேரங்களில் பெரும் கூட்டங்களில் மைக் இல்லாமலேயே பாடியதையும் நினைவு கூர்கிறார்கள் பழைய தோழர்கள். கட்டாங்காப்பியும் போண்டாவும்தான் இவர்களுக்குக் கிடைத்த உணவு. கே.பி.பத்ரோஸ் முயற்சியில் தொடங்கிய கலைக்கூடத்தின் வழியாக அனுசூயாவும் மேதினியும் புரட்சிப் பாடகர்களாக பரிணமித்தனர். இயல்பாகவே நெஞ்சுரம் கொண்டிருந்த அனுசூயா 1946க்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு தலைவர்கள் தலைமறைவாக இருந்த காலத்தில் ரகசிய செய்திகளையும், நோட்டீஸ்களையும் அவர்களிடம் கொண்டு சேர்த்தவர். பின்னர் இவரே 11 மாதகாலம் தலைமறைவாக இருக்க வேண்டியதாயிற்று. நாடு விடுதலையடைந்து கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது இவரும் கைது செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக இருந்த சத்யன் என்பவர் அனுசூயாவை சித்ரவதை செய்திருக்கிறார். இவர் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். போர் முடிந்தபின்  திரும்பி காவல்துறையில் ஆய்வாளராக சேர்ந்தார். இந்த சத்யன் தான் பின்னாளில் திரைப்பட நடிகராகி பிரபலமானவர் என்பது எத்தனை நகைமுரண்.

புன்னப்புரா - வயலார் போராட்டத்தில் பங்கெடுத்த டி.என்.கிருஷ்ணனை வாழ்க்கைத் துணையாக வரித்துக்கொண்டார் அனுசூயா.   1964ல் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது அனுசூயா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருடன் மேடைகளில்  வீறுடன் பாடிய மேதினி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தங்கிவிட்டார். இவர்கள் இருவரும் 80 வயதைக் கடந்துவிட்ட நிலையில் 30 ஆயிரம் மேடைகளில் பாடியவர் என்று மேதினியைச் சிறப்பித்தனர். ஆனால் இந்தச் சிறப்பு உண்மையில் அனுசூயாவுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று அவர் மனத்திறந்து பாராட்டினார். இளம் தளிராய் இருந்தபோதே அச்சத்தை அகற்றி - அழகான குரலெடுத்து மேடைகளில் பாடி - ஆயிரமாயிரம் தொழிலாளர்களுக்கு உத்வேகமூட்டி-  தலைமறைவுத் தலைவர்களுக்கு உதவி செய்து - தானும் தலைமறைவு வாழ்க்கை நடத்தி - சிறை சென்று -  கம்யூனிஸ்ட் கட்சியோடு ஆரம்பத்திலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடும் தன்னை இணைத்துக் கொண்டு -இறுதி வரை செம்மலராய் வாழ்ந்த அனுசூயாவின் குரல் அவரது 85 ஆவது வயதில் காற்றில் கரைந்து மறைந்து போனது. ஆனால், “மக்களெல்லாம் ஒன்று கூடால் வறுமை எங்ஙனம்ஒழியும்” என்ற அனுசூயாவின் குரல் சமூக மாற்றம் ஏற்படும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

(நன்றி: தேசாபிமானி, மலையான மனோரமா இதழ்கள்)
மலையாளத்திலிருந்து தமிழாக்கத்திற்கு உதவி
டி.கே.ராஜன்,ஷிஜா

;