headlines

img

பண்டைத் தமிழர்களின் அறிவுத்தேடல் - மயிலைபாலு

புத்தக மேசை

“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் 
            அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும்                 அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என திருவள்ளூவர் அறிவு பற்றி வரையறை செய்திருக்கிறார். அறிவின் பயனும் இக்குறள்களில் தொகுக்கப்பட்டு ள்ளது. அறிவுடைமை என்னெறாரு அதிகாரத்தையும் வள்ளுவர் படைத்தி ருக்கிறார். மெய்யுணர்தல் என்ற அதிகார மும் அறிவின் தன்மையையும் தேவையை யும் விவரிக்கிறது. இவ்வாறு பண்டைத் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களில் தெளித்தாற்போல் கிடக்கும் கருத்துக்களைத் தொகுத்து “அறிவு பற்றிய தமிழரின் அறிவு” எனும் நூலாகத் தந்திருக்கிறார் தோழர் சி.மகேந்திரன்.

மார்க்சிய சிந்தனையில் திளைத்து அவ்வழியில் பல படைப்புகளைத் தந்திருக்கும் தோழர் மகேந்திரனின் மேலும் ஒரு நூல் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்துள்ளது. இதனை வாரியணைத்து வரவேற்க வேண்டும் என்பதை நூலினை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். அறிவுக்கு மரியாதை தந்தது தமிழ் மரபு என்பதை முரசு கட்டிலில் படுத்துறங்கிய புலவர் மோசிகீரனாருக்கும் மன்னன் சாமரம் வீசியதிலிருந்தும் - நீண்ட காலம் வாழ்வதற்கான நெல்லிக்கனியை ஒளவைப் புலவருக்கு அதியமான் வழங்கியதிலிருந்தும் எடுத்துக்காட்டுகிறார். இது ஒரு வித்தியாசமான பார்வை. இங்கேயிருந்து தொடங்கும் நூலாசிரியரின் தேடல் 232 பக்கங்களிலும் விரவியிருக்கிறது.

தத்துவ அமைப்பின் நான்கு பெரும்பிரிவுகளில் ஒன்றாக அறிவுக் கோட்பாட்டினை மேலை நாட்டினர் வகுத்தி ருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி மேற்செல்லும் ஆசிரியர், அறிவுக்கோட்பாடு பற்றிய ஆராய்ச்சி தத்துவத்துறைக்குச் சிறப்பாகவும் அறிவுதிரட்டும் பிறதுறை களுக்குப் பொதுவாகவும் வேண்டப்படு கிறது என்ற நிர்ணயிப்புக்கு வருகிறார். அதன் அடிப்படையிலான ஆய்வுக்கருத்து க்களைத் தேடித் தொகுத்துள்ளார். 2500 ஆண்டுகளுக்கு முந்தையதான பெயருக்குகேற்றவாறே தென்மையான தொல்காப்பயித்திற்குள் தமிழர்களின் அறிவுத்தேடல் பிரதிநிதியாகத் தொல்காப்பி யர் நிற்பதைத் தெளிவுறக் கூறுகிறார். அதன் சாரமாக இந்தப்பத்தியைக் காணலாம்.

“மாத்திரையில் (எழுத்துக்கான ஒலி அளவு) தொடங்கி ஊழிக்காலம் வரையி லான காலக்கணக்கை தமிழர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். நாள்பொழுதுகளை அறுவகைக் கூறுகளாகப் பிரித்துப் பிரித்துப் பார்த்த பண்டைத் தமிழ்ச் சமூகம், ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் பொருந்தும் என்பதை நில அடிப்படையில் பொருத்தி விளக்குகிறது.” பருவநிலை மாற்றம் பற்றி இன்று உலகமே புலம்பித் தேற்றுவார்யார்? தேறுவது எப்படி என்று மாநாடுகள் நடத்தி  விவாதிக்கிறது. இதற்குக் காரணம் முன்னோர் வகுத்தளித்த பருவகாலங்களைப் பாழாக்காமல் பேணுவது பற்றிய அறிவைப் பெறாமல் போனதுதான் என்பதை இந்நூல் வாசிப்பின் வழி உணர முடிகிறது.

1915 ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தில் இயற்பியல் அறிவியலாளர், ஜகதீஷ் சந்திரபோஸ், “ புறத்தூண்டு தல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்துகொள்ளுகின்றன” என்பதுபற்றி உரைநிகழ்த்தினார். இதன்வழி, தாவரங்களும் உணர்வுகளை அனுபவிக்கும் அறிவைக் கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டினார். இது அறிவியல் உலகில் வியந்து பாராட்டப்பட்டது. இதையொத்த கருத்தினை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தது தமிழர் அறிவு. அதன் வெண்ணெய்த்திரட்சிபோல் தொல்காப்பியத்தின் சில நூற்பாக்களும் சங்க இலக்கியங்களின் பல பாடல்வரிகளும் இருக்கின்றன.

அறிவியல் அனைத்திற்கும் தாய் என்று கூறப்படும் இயற்பியல் குவிமைய மாகக் கருதப்படுவது காலமும் இடமும் தான். நியூட்டன், ஐன்ஸ்டீன் முதல் ஹாக்கின்ஸ்வரை அனைவரும் இவற்றை மையமாகக் கொண்டே தொழிற்பட்டுள்ள னர். இடம் என்பது வெளி - ஸ்பேஸ் - என்றபொருள்கொண்டது. இந்த வெளிக்கான மூலாதாரங்கள் ஐம்பூதங்கள். இந்த உண்மையைத் தமிழர்கள் தங்களின் அறிவுகொண்டு தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.

“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”

 

என்பதைத் தொல்காப்பியம் கூறுகிறது. இந்த அறிவு மரபின் தொடர்ச்சியை,
 

“மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை”

 

என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடலில் (2) காண்கிறோம். பதிற்றுப்பத்து (2,7) பரிபாடல், முல்லைப்பாட்டு போன்ற பழந்தமிழ் இலக்கியங்களும் இத்தகைய இயற்பியல் கோட்பாடுகளைப் பதிவு செய்துள்ளன. “சங்க இலக்கியத்தைக் கூர்ந்து கவனித்தால், காட்சி என்னும் அறிவை அதன்பண்பைக் குறிக்கும் அடைமொழியுடனேயே குறிப்பிட்டு சொல்கிறார்கள்”. என அறிவியல் பார்வை யில் ஒரு புதிய கண்ணோட்டத்தையும் தோழர் மகேந்திரன் தருகிறார். ஆசறு காட்சி, மாசறு காட்சி, செயிர் தீர் காட்சி, இருள் தீர் காட்சி என இவற்றின் வகைப்பாடு களையும் எடுத்துக்காட்டி, ஆசையை அகற்றிக் கொள்ளும் தன்னல மறுப்பை மானுட ஞானமாகத் தமிழர்களின் அறிவுக்கொள்கை கூறுகிறது என முத்தாய்ப்பு செய்கிறார்.

“புறக்கண்ணுக்குத் தோன்றுபவை பிழை கொண்டதாகவோ தெளிவற்றதாகவோ இருக்க வாய்ப்புண்டு. இவற்றிலிருந்து பெறப்படும் அறிவும் பிழையுடையதாக அல்லது தெளிவற்ற தாகத்தான் இருக்கும். இவற்றைத் தவிர்ப்பதற்கான தேடல்களும் தமிழர் அறிவில் முக்கியமானவை” என்று நூலாசிரியர் மகேந்திரன் விவரிக்கிறார். மெய்ப் பொருள் காண்பது எளிதல்ல. இதற்கான ஆய்வில் தனது கருத்தினைக் கூறுதல், மற்ற தரவுகளோடு ஒப்பிட்டுக் கூறுதல், மேற்கோள் காட்டுதல் போன்ற வழிகள் கையாளப்படுகின்றன. இதற்கு மெத டாலஜி (ஆய்வுநெறி) எனப் பெயரிட ப்பட்டுள்ளது. இதனையே தொல்காப்பிய ரும், நன்னூல் இயற்றிய பவணந்தியும் உத்திகள் என்கின்றனர். வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த இவர்கள் கால மாற்றத்தையும் கணக்கில்கொண்டு 32 உத்திகள் வகுத்திருப்பதை நூலாசிரியர் பட்டியலிட்டுள்ளார்.

தமிழரின் அறிவு பற்றி 232 பக்க விரிவுநூலில் இவை சில துளிகள் தான். முழுமையாக வாசித்து பரவலாக்க வேண்டிய நூலாகும் இது. பல முன்முயற்சிப் படைப்புகளை வழங்கும் டிஸ்கவரி புக் பேலஸ் இந்நூலினை வெளி யிட்டிருப்பது, பாராட்டுக்குரியது. நூலாசிரி யர் தோழர் மகேந்திரன் அரசியல் இலக்கியப் பணிகளுக்குகிடையே இப்படி யொரு ஆய்வுப்படைப்பைத் தரவும் - அதுவும் மறந்துபோன தமிழ் மரபை உயிர்ப்பித்துத் தரவும் - நேரம் ஒதுக்கிப் பணியாற்றியிருப்பது போற்றுதலுக்குரியது.

;