வெள்ளி, பிப்ரவரி 26, 2021

headlines

img

பிரதமர் மோடியின் வாய்ப்பந்தல் நிழல் தருமா?

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடி பேசியுள்ளார். வழக்கம்போல தன்னுடையவார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி உள்ளாரே தவிரநாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அவரது உரையில் எந்தத் தீர்வும் கூறப்படவில்லை.மாறாக கீறல் விழுந்த ரெக்கார்டு போல வேளாண்சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்ற பல்லவியையே பிரதமர் பாடியுள்ளார்.

போராடும் விவசாயிகளின் கருத்துக்களை மதிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். அதனால்தான் மூத்த அமைச்சர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தினார்கள் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் ஒருமுறை கூட போராடும் விவசாயிகள்சங்க பிரதிநிதிகளை அழைத்து தாம் ஏன் பேசவில்லை என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக முதலாளிகள் சங்கக்கூட்டங்களில் வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தி அவர் பேசி வந்துள்ளதையும் குறிப்பிடவில்லை.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபின்னர் எந்த சந்தையும் மூடப்படவில்லை. குறைந்தபட்ச ஆதாரவிலை முறை தொடர்கிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். வேளாண் திருத்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள துவக்ககாலத்திலேயே அதன் விளைவுகள் வெளிப்படத் துவங்கிவிட்டன. அடிமாட்டு விலைக்கு அம்பானி, அதானிநிறுவனங்கள் விவசாயிகளின் விளைபொருட்களை விலை கேட்பது குறித்து பல்வேறு தகவல்கள்வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்போது, சந்தை இயல்பாகவே சுருங்கிவிடும். குறைந்தபட்ச ஆதாரவிலை என்பதும் இல்லாமல் போய்விடும். 

குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைப்பதை சட்டப்பூர்வமாக உறுதிசெய்ய வேண்டும் என்பது போராடும் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று. ஆனால் அதற்கு இதுவரை அரசுத் தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. வெறும் வாய்மொழியாக வழங்கப்படும் உறுதிமொழிகளை நம்ப விவசாயிகள் தயாராக இல்லை.ஏனெனில் கடந்த காலங்களில் இவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குறுதி எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்பதை விவசாயிகள் அறிவார்கள். கொரோனாவுக்கு பின்பு உலகம் மாறிவிட்டது என்றும் உலகளாவிய போக்குகளிலிருந்து இந்தியா தனிமைப்பட்டுவிடக்கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். மேலும் மேலும் தனியார்மய, தாராளமய கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால் அனைத்துத் துறைகளையும் தனியார்மயமாக்கிய பல்வேறு முதலாளித்துவ நாடுகள் கொரோனா காலத்தில் விழி பிதுங்கி நின்றனர். இந்தியாவில் பொது சுகாதார கட்டமைப்பு ஓரளவு பலமாக இருந்ததாலேயே கொரோனா தொற்றை சமாளிக்க முடிந்தது. இந்த உலகளாவிய அனுபவத்தையும் மோடி அரசு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்தியா தற்போது உலகின் நம்பிக்கை சுடரொளி என்று பிரதமர் பெருமிதப்பட்டுள்ளார். அதை ஊதி அணைக்கும் செயலில்தான் தமது அரசு தற்போதுஈடுபட்டுள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கூறியிருக்கலாம்.

;