வெள்ளி, பிப்ரவரி 26, 2021

headlines

img

மோடி அரசின் நாடகம் இப்போது எடுபடாது...

விவசாயிகளின் தொடர்  போராட்டம் தலைநகர் தில்லியிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீடித்து வரும் நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என பிடிவாதம் பிடித்து வந்தது மோடி அரசு. 

புதனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும், ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும், குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு வேண்டும் என்பது குறித்து ஒரு சிறப்புக்குழு அமைக்க முன் வருவதாகவும் கூறியிருந்தது.போராடும் விவசாய சங்கங்கள் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலையீடு மூலம்போராட்டக்காரர்களை தில்லியை விட்டு அகற்றிவிட மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. அந்த பேரணிக்கு தடைவிதிக்குமாறு உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியது. ஆனால் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது தங்களது வேலையல்ல என்றும், அரசுதான் அதை முடிவு செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கூறியதோடு பேரணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. 

இந்தநிலையில்தான் பத்தாவது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் திருத்தச் சட்டங்களை 18 மாத காலம் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய மோடி அரசு கடந்த காலத்தில் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றியதில்லை. இந்த கசப்பான அனுபவத்தின் அடிப்படையிலேயே போராடும்
விவசாய சங்கங்கள் அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.

இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் விவசாயத்திற்கு, விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தச் சட்டங்களை நியாயப்படுத்தி பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை வாய்கிழியப் பேசினாலும், அதை ஏற்றுக் கொள்ள விவசாயிகள் தயாராகயில்லை. மறுபுறத்தில் தங்களதுநலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தியேயாக வேண்டுமென கார்ப்பரேட் முதலாளிகள் மிரட்டுகின்றனர். உச்சநீதிமன்றம் அமைத்த குழுவும் அனைத்துத் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. சட்டத்திற்கு ஆதரவானவர்களை கொண்டு குழு அமைத்துவிட்டு அதனோடு பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் மறுக்கிறார்கள் என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஒட்டுமொத்தமாக இந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படுவதே இதுவரை நடந்து வந்துள்ள வீரஞ்செறிந்த நீடித்த போராட்டத்திற்கு வழங்கப்படும் நியாயமாக இருக்கும். ஆனால் இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து பிறகுநடைமுறைப்படுத்த முயலும் மத்திய அரசின் வஞ்சகத்தை தெளிவாகவே புரிந்து வைத்துள்ளனர். இந்தமுறை ஆட்சியாளர்களின் வாய்ஜாலத்தை அவர்கள் நம்பப்போவதில்லை.

;